Wednesday, April 29

லவ் ஷேர் சப்ஸ்கிரைப் LSS (Love Share Subscribe) திரைப்பட விமர்சனம்

பல புதுமுக  இளம் நாயக நாயகிகளை கொண்டு தமிழ் சினிமா ஏராளமான காதல் கதைகளை தந்துள்ளது, அந்த வரிசையில் இளம் கலைஞர்கள் புது முகங்களாக அறிமுகங்களாகியுள்ள காதல் திரைப்படம் இந்த எல் எஸ் எஸ் .

கல்லூரி காலத்தில் நாயகி சிம்ரன் அத்வானி, நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது காதல் வசப்படுகிறார். முதலில் சிம்ரனின் காதலில் பெரிய நாட்டம் இல்லாமல் ஆதவ் கிருஷ்ணா இருந்தாலும் பின்பு அவரது காதலை ஏற்றுக் கொண்டு அவரும் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவர்களது காதலுக்கு நாயகன் ஆதவ் கிருஷ்ணாவின் வீட்டில் சம்மதம் கிடைத்து விடுகிறது ,ஆனால் தன்னை விட்டு பிரிந்து சென்றிருந்த தாயிடம் தங்களது காதலுக்கு சம்மதம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதவ் கிருஷ்ணாவும் , சிம்ரனும் அவரது தாயை தேடி காசிக்கு செல்கிறார்கள்.அந்த சமயத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட சிம்ரன் ,ஆதவ் கிருஷ்ணாவை பிரியும் நிலை ஏற்படுகிறது இதனால் ஏற்படும் நெருக்கடியில் ஆதவ் கிருஷ்ணாவிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது,இது மட்டும் அல்லாமல் அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத சிம்ரனின் தந்தையாலும் மேலும் பிரச்சினைகள் ஏற்படுகிறது இவைகளை கடந்து நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா ?இல்லையா?என்பதே லவ் ஷேர் சப்ஸ்கிரைப் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக சிவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதவ் கிருஷ்ணா சாதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க கூடிய ஒரு இளைஞனை பிரதிபலிக்கும் விதமாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில்,அறிமுகப்படம் என்பது தெரிய வகையில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதையின் நாயகியாக பூஜா என்னும் கதாபாத்திரத்தில் சிம்ரன் அத்வானி நடித்துள்ளார்,தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகளில் நிறைவான நடிப்பிணை அவரும் வெளிப்படுத்தி உள்ளார் ,ஜாவா சுந்தரேசன் ,கோபி,வினோதினி போன்றவர்களும் தங்களது பங்கிற்கு நன்கு நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் ,காசி நகரத்தின் வாழ்வியலை ரசிக்கத் தகுந்த வகையில் சிறப்புற பதிவு செய்துள்ளார். காதல் கதைக்கு, அதன் காட்சிகளுக்கு ஏற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிமையான பாடல்களையும், இணக்கமான பின்னணி இசையினையும் கொடுத்து படத்தின் கதை ஓட்டத்துடன் நன்கு பயணித்துள்ளது இசையமைப்பாளர் அஸ்வமித்ராவின் இசை.

அழகான காதல் கதையை எடுத்துக்கொண்டு, அதில் எதிர்பாராத திருப்பங்களையும் இணைத்துக் கொண்டு, அதனோடு கதாபாத்திரங்களுக்கேற்ற புதுமுக நடிகர்களை அழகுற தேர்வு செய்து கொண்டு, நல்லதொரு காதல் கதையை நன்கு படமாக்கி உள்ளார் இயக்குனர் ஆர் மகாலட்சுமி முருகன்.

காதல் உணர்வுகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ள இந்த லவ் ஷேர் சப்ஸ்கிரைப் திரைப்படம் காதலர்களை மட்டுமல்ல ,ஒட்டு மொத்த திரை ரசிகர்களையும் நிச்சயம் கவரும்

Spread the love