Saturday, June 27

‘அந்தரன்’- திரைப்பட விமர்சனம்

காதல், மர்மம், தொடர் கொலைகள்… இந்த மூன்றையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து, ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தது என்ன என்ற பதற்றத்தை உருவாக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக வந்திருக்கிறது ‘அந்தரன்’.

இவானா வருணை காதலித்த இளைஞர் கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகு அவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்ததாக அவரை மணக்கவிருந்த மற்றொரு நபரும் மர்மமான விபத்தில் உயிரிழக்கிறார். தொடர்ந்து நடக்கும் இந்த மரணங்கள் தற்செயலானவை அல்ல, திட்டமிட்ட கொலைகள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரிய வருகிறது.ஆனால் இதற்கு எந்தவிதமான தடயமும் கிடைக்காததால், இந்த வழக்கு காவல்துறை அதிகாரி பிரஜின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்படி விசாரணையை தொடங்கும் அவர், நாளடைவில் இவானாவையே காதலிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது? இந்த தொடர் மரணங்களின் பின்புலம் என்ன ?என்னும் பல விடை தெரியாத வினாக்களுக்கு விடையினை தருகிறது ‘அந்தரன்’.படத்தின் மீதி கதை.

காவல்துறை அதிகாரியாக செழியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரஜின், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தோற்றத்துடன் மட்டுமல்லாமல், விசாரணை அதிகாரியின் நிதானத்தையும் ,காதலனின் உணர்வுகளையும் சமநிலையாக வெளிப்படுத்தி கதையை தாங்கிச் செல்கிறார்.இவானா வருண், கதையின் மையமாக இருப்பதால் பெரும்பாலான காட்சிகளில் கவனத்தை ஈர்க்கிறார். கதாபாத்திரத்துக்கேற்ற மாறுபட்ட உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் .எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், போன்ற ஏனைய நடிகர்கள் அனைவரும் கதைக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு, சஸ்பென்ஸ் காட்சிகளில் பதற்றத்தை உருவாக்குவதோடு, காதல் காட்சிகளில் மென்மையான காட்சியமைப்பால் கவனம் பெறுகிறது.ஹரி.எஸ்.ஆர் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசை, திரில்லர் படத்திற்குத் தேவையான பரபரப்பை சரியான இடங்களில் உயர்த்துகிறது.

, வழக்கமான தொடர் கொலை கதையை தேர்வு செய்திருந்தாலும், அதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் நேர்த்தியான படமாக அனுபவமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராவணன்.மேலும் பார்வையாளர்களை பல கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வைக்கும் விதமாக திரைக்கதையை நகர்த்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் திருப்பம், முன்கூட்டியே கணித்த பல யூகங்களை உடைத்தெறியும் வண்ணம் இருந்தது .

**மொத்தத்தில், ‘அந்தரன்’ எதிர்பாராத திருப்பங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு தரும் ஏமாற்றம் அளிக்காது.

Spread the love