Saturday, June 27

‘ஹார்ட்டின்’ -திரைப்பட விமர்சனம்

முதல் காதலா… இல்லை, மறந்துபோன காதலா? நினைவுகள் அழிந்துவிட்டால் காதலும் அழிந்துவிடுமா? என்ற கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் காதல் திரைப்படம்தான் ‘ஹார்ட்டின்’

நண்பர்களாக பழகும் சனத்தும், இமயாவும் நாளடைவில் காதலிக்கிறார்கள். முதல் காதல் தோல்வியால் மீண்டும் காதலிக்க தயங்கும் சனத்தின் வாழ்க்கையில், இமயா புதிய நம்பிக்கையை உருவாக்குகிறார். ஆனால் எதிர்பாராத விபத்தில் சிக்கி ஆறு ஆண்டுகால நினைவுகளை இழக்கும் சனத், இமயாவை முற்றிலும் மறந்துவிட்டு தனது முதல் காதலியான மடோனா செபாஸ்டியனை மீண்டும் தேடிச் செல்கிறார்.அவருக்கு மீண்டும் மறந்து போன நினைவுகள் மீண்டும் திரும்பியதா? சனத்தின் வாழ்க்கையில் இறுதியில் வென்றது முதல் காதலா, புதிய காதலா? அதன்பின் நடந்தது என்ன ?என்பதே ‘ஹார்ட்டின்’.படத்தின் மீதி கதை.

 

கதையின் நாயகனாக சனம் இந்த படத்தில் நடித்திருக்கிறார் காதல் ,நினைவுகளை இழத்தல் ,மீண்டும் பழைய நினைவுகளில் திளைத்தல் என பல பரிமாணங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார் .கதையின் நாயகியாக நடித்திருப்பவர் இமயா, அறிமுகப்படத்திலேய  கதாபாத்திரத்திற்கு தகுந்தபடி தன்னுடைய மன உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி ,தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமான நடிப்பினை வழங்கியுள்ளார். மற்றும் குறிப்பிடத்தக்கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார் ,இவரது கதாபாத்திரமும்,அதனை ஏற்று இவர் நடித்துள்ள விதமும் நன்றாக அமைந்திருந்தது.

ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியின் எழில் மிகு காட்சிகளை சிறப்பான கோணங்கள் மற்றும் ஒளிஅமைப்புகள் வாயிலாக ரசிக்கும் வகையில் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன். இந்த படத்தின் இசையமைப்பாளர் ராஜேஸ் முருகேசன்,.இவரது இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும் ,கேட்பதற்கும் உகந்த வகையில் இனிமையாக உள்ளன .பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் கிஷோர் குமார், நினைவிழப்பு என்ற பின்னணியில் அழகிய காதல் கதையை படமாக்கியுள்ளார் காதலர்களின் பார்வையில் மாறுபடும் உணர்வுகள் இன்னும் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அது ரசிகர்களின் மனதை மேலும் நெருங்கியிருக்கும் .

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்..
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது..
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

இது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெறும் கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகள் .அந்த வரிகளை இந்த கதைக்களம் நினைவூட்டும் வகையில் உள்ளது.

மொத்தத்தில், ‘ஹார்ட்டின்’ இளம் ரசிகர்களை கவரும் மென்மையான காதல் கதையுடன் பொழுதுபோக்கு படம்.

Spread the love