Monday, August 31

‘சிங் கீதம்’ – திரை விமர்சனம்

“ஒரு சாபம்… அதனால் ஊர் முழுவதும் யாராலும் சாதாரணமாக பேச முடியாது… வாயைத் திறந்தாலே பாடல்தான் வரும்!” இந்த வித்தியாசமான கதை களத்தினை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘சிங் கீதம்’.


சிறைத் தண்டனையை முடித்து வெளியே வரும் நாயகன், தனது பெயரில் இருக்கும் பூர்வீக சொத்தை விற்று புதிய வாழ்க்கையை தொடங்கும் எண்ணத்தில் குபேரபுரம் என்ற கிராமத்திற்கு செல்கிறார். ஆனால் அங்கு சென்ற பிறகுதான், அந்த இடம் தரிசு நிலமாக மாறியிருப்பதையும், பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு மரம்தான் அந்த ஊரின் அடையாளமாக இருப்பதையும் அறிகிறார்.

அந்த மரத்தை உயிராக பாதுகாத்து வரும் இயற்கை ஆர்வலரான கவுரி, அதை எந்த காரணத்திற்காகவும் வெட்ட அனுமதிக்க மறுக்கிறார். இதற்கிடையில், அந்த இடத்தில் இருக்கும் தங்கச் சுரங்கத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்கும் முயற்சி நடக்கிறது. அதற்கு நாயகனின் ஒப்புதலும் தேவைப்படுவதால், அவரும் அந்த திட்டத்தில் இணைகிறார்.

சுரங்கத் தோண்டுதலுக்காக அந்த பாரம்பரிய மரத்தை வெட்ட முயற்சிக்கும்போது, கவுரி கடவுளிடம் முறையிடுகிறார். அப்போது நிகழும் எதிர்பாராத சம்பவம், ஊர் முழுவதையும் தலைகீழாக மாற்றுகிறது. ஒரு சாபத்தின் காரணமாக, அந்த கிராம மக்களால் இனி சாதாரணமாக பேச முடியாது; அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பாடலாகவே வெளிப்படுகிறது.

இந்த விசித்திரமான சாபத்திலிருந்து ஊர் மக்கள் எப்படி மீண்டார்கள்? தங்கச் சுரங்கத் திட்டம் என்ன ஆனது? என்பதற்கான பதில்களை நகைச்சுவை, ஃபேண்டஸி மற்றும் சமூகக் கருத்துகளுடன் சொல்லுகிறது படத்தின் மீதிக்கதை.


கதையின் நாயகனாக பிரதாப் என்னும் கதாபாத்திரத்தில் அயான், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தி நன்கு நடித்துள்ளார் கவுரியாக நடித்துள்ள அஹல்யா பம்ரூ, இயற்கைக்காக போராடுபவராக தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் தனி கவனம் பெறுகிறார் .மேலும் ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன் சிவ நாராயணா போன்றவர்களும் கதைக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

அங்கூர்.சி-யின் ஒளிப்பதிவு, காட்சிகளின் தன்மைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது .அதேபோல தேவி ஸ்ரீ பிரசாத், உரையாடல்களையே இசையாக மாற்றியிருக்கும் விதத்தில் தனது தனித்துவத்தை நிரூபிக்கிறார். பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பெரிய பிளஸ் ஆக உள்ளது .

ராஜபார்வை ,அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் ,பேசும் படம் போன்ற பல படங்களில் ,ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு புதிய முயற்சியை கையாண்டு ,ரசிகர்களின் மனதளவில் இன்றைக்கும் இடம் பிடித்திருக்கக்கூடிய பழம்பெரும் இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் , இந்த முறையும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, புதுமையான வடிவில் இந்தப் படத்தினை கொடுத்துள்ளது மிகவும் பாராட்டக்கூடியது .அவர் இந்த படத்தில் ஃபேண்டஸி, நகைச்சுவை, இசை ஆகியவற்றோடு இயற்கை பாதுகாப்பு என்ற முக்கியமான சமூக கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். உரையாடல்கள் இல்லாமல் பாடல்களிலேயே ஒரு முழு படத்தையும் ரசிக்கும் வண்ணம் நகர்த்தியிருப்பது அவரது அனுபவத்திற்கும் கற்பனைக்கும் கிடைத்த பெரிய வெற்றியாகும்.

மொத்தத்தில், ‘சிங் கீதம்’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… தமிழ்ச் சினிமாவில் அரிதாக நிகழும் வித்தியாசமான திரை அனுபவம். புதிய முயற்சிகளை ரசிப்பவர்களும், நல்ல சினிமாவை கொண்டாடுபவர்களும் தவறவிடக் கூடாத படைப்பு.

Spread the love