ஒரு ரகசியம்… ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் துரத்துமா?அதிகாரம், சாதி, நிறவெறி, காதல், குற்றவுணர்ச்சி, மன உளைச்சல்… இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒன்றாக மோதினால் என்ன நடக்கும்? அந்தக் கேள்விக்கு அழுத்தமான பதில் சொல்கிறது ‘ராவ் பகதூர்’.

ராஜ பரம்பரையைச் சேர்ந்த ராம்ப்பா ராவ் பகதூர் (சத்ய தேவ்), வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிறது. ஆனால், மரணம் மட்டும் அவரை நெருங்க மறுக்கிறது. அதற்குக் காரணம், அதற்குக் காரணம் ஒரு கேள்வி அவரது மனதை மிகவும் உளைச்சலுக்கு உள்ளாக்கி கொண்டிருந்தது, அந்தக் கேள்விக்கான பதில் கிடைத்தால்தான் தனது உயிர் அமைதியாகப் பிரியும் என்று அவர் நம்புகிறார். அதனை தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் கூறுகிறார் , அவரது சந்தேகம் என்ன? அது தீர்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு விடைகளை தருகிறது படத்தின் மீதிக்கதை.
இளமை முதல் முதுமை வரை ஒரு மனிதனின் உடல் மட்டுமல்ல, மனமும் எப்படி மாறுகிறது என்பதை மிக இயல்பாக, சத்ய தேவ் தனது சிறந்த நடிப்பின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். கண்களில் தெரியும் குற்றவுணர்ச்சி, பேசாமல் சொல்லும் வேதனை, கோபம், உள்ளுக்குள் புதைந்திருக்கும் பயம் என பலதரப்பட்ட எண்ண உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி, இது தனது சிறந்த நடிப்புகளில் ஒன்று என்பதை நிரூபித்திருக்கிறார்.தீபா தாமஸ், கதையின் உணர்ச்சிப் பக்கத்திற்கு வலு சேர்க்கும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். காதலின் மென்மையையும், மன வலிமையையும் சமமாக வெளிப்படுத்துகிறார்.விகாஸ் மப்புலா மருத்துவராக அமைதியான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, போன்ற கலைஞர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ற வகையில் நன்கு நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் பரமரின் ஒளிப்பதிவு அரண்மனையின் பிரம்மாண்டத்தை காட்டுவதைவிட, அதன் சுவர்களுக்குள் மறைந்திருக்கும் இருண்ட மனநிலையை ஒளி மற்றும் வண்ணங்களால் உணர வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது.
ஸ்மரன் சாயின் பின்னணி இசை, காட்சிகளின் உணர்வை ஒருபோதும் மீறாமல், அதனுடன் இணைந்து பயணிக்கிறது. கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் பங்களிப்பு அரண்மனைகள், உடைகள், பொருட்கள் அனைத்தும் வெறும் அலங்காரமாக இல்லாமல், கதையின் ஒரு பகுதியாகவே தெரியம் வகையில் அமைந்துள்ளது
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, ராஜ குடும்பத்தை மையமாக வைத்து ஒரு சாதாரண பீரியட் கதையைச் சொல்லவில்லை. அதிகாரமும் ஆணவமும் மனிதர்களை எப்படி மாற்றுகிறது, சாதியும் நிறவெறியும் தலைமுறைகளை எப்படி காயப்படுத்துகிறது, குற்றவுணர்ச்சி மனிதனை வாழ்நாள் முழுவதும் எப்படி துரத்துகிறது என்பதைக் கதையின் மையமாக வைத்து அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘ராவ் பகதூர்’ வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களை கவரும் ஒரு சிறந்த படைப்பு.
