Saturday, July 11

முதற்கனல்’ – திரை விமர்சனம்

பல இளம் நெஞ்சங்களின் வாழ்க்கை கனவுகளை சிதைக்கும் நஞ்சாக மாறி, அவர்களது லட்சிய பாதையினை மாற்றுகின்ற போதைப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்த முதற்கனல்.


பள்ளி மாணவன் சூர்யா (அஸ்வின் விஸ்வநாத்), தவறான நட்பின் காரணமாக போதைப் பொருட்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறான். முதலில் விளையாட்டாக தொடங்கும் பழக்கம், நாளடைவில் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. அதனால் குடும்ப உறவுகள் சிதறுகின்றன, நம்பிக்கைகள் உடைகின்றன, கனவுகளும் கரைகின்றன.இந்த போதை வளையத்திலிருந்து சூர்யா மீண்டு வந்தானா ? அவனை மீட்க குடும்பம் மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ன? அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள் என்ன? என்பதற்கு விறுவிறுப்பாக பதில் சொல்கிறது ‘முதற்கனல்’.

சூர்யாவாக நடித்துள்ள அஸ்வின் விஸ்வநாத் ,ஆரம்பத்தில் அப்பாவியான மாணவனாகவும், பின்னர் போதைக்கு அடிமையாகி மனநிலையை இழக்கும் இளைஞனாகவும் தன் நடிப்பில் மாறுபட்ட பரிமாணங்களை நன்கு வெளிப்படுத்தி நடித்துள்ளார். மேலும் ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, யோகேஷ், டி.ராஜேந்திரன் போன்ற பிற கலைஞர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் மன உணர்வுகளுக்கும், காட்சிகளின் பின்புலத்திற்கும் ஏற்ற வகையில், ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபாலின் நேர்த்தியான கோணங்களும்,ஒளி அமைப்பும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. திரையில் நகரும் காட்சிகளின் உணர்வுகளை  சித்தரிக்கும் வகையிலான பின்னணி இசையினை மீராலால் நன்கு கொடுத்துள்ளார்.

பொதுவாக சமூக கருத்துக்களை கதை வடிவில் சொல்லும் பொழுது அறிவுரை சொல்வதையே பிரதானமாகக் கொண்டு காட்சிகள் நகர்ந்தால், அது பார்க்கும் ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வத்தில் ஈடுபாட்டை குறைக்கலாம் ,எனவே இந்தப் படத்தில் இக்கால சமூக சூழலுக்கு தேவையான விழிப்புணர்வை கதையோடு கலந்து திரைமொழியில் படமாக இயக்குனர் ஆர் வெங்கடரமணன் கொடுத்திருப்பது பாராட்டும் வகையில் உள்ளது.

மொத்தத்தில் ‘முதற்கனல்’ .. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு மாணவரும் பார்க்க வேண்டிய படம் .

Spread the love