Saturday, July 11

‘இதயம் முரளி’- திரை விமர்சனம்

சில காதல்கள் மனதுக்குள்ளேயே பிறந்து, நினைவுகளாகவே வாழ்ந்து முடிந்துவிடுகின்றன. சொல்லப்படாத அந்த காதல்களின் இனிமையையும், வலியையும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தையும் அழகாக திரை பதிவு செய்யும் திரைப்படம்தான் ‘இதயம் முரளி’.

மாமாவின் அரவணைப்பும், நண்பர்களின் நட்பும்தான் தனது உலகம் என்று வாழும் இளைஞன் இதயா (அதர்வா). பள்ளிப் பருவத்தில் டியூஷன் வகுப்புகளும், டென்னிஸ் பயிற்சியும் நடுவே சமந்தா (ப்ரீத்தி முகுந்தன்) மீது அமைதியாக காதலில் விழுகிறார். ஆனால் தனது காதலை வெளிப்படுத்த நினைக்கும் நேரத்தில் எதிர்பாராத ஒரு உண்மை தெரியவர, அந்த காதலை மனதுக்குள்ளேயே புதைத்துவிடுகிறார்.காலம் நகர்கிறது. கல்லூரி வாழ்க்கையில் அமுதா (கயாடு லோஹர்) அவரது வாழ்க்கைக்குள் வருகிறார். இந்த முறை காதல் மீண்டும் மலர்ந்தாலும், அதைச் சொல்லத் துணிவில்லாமல் மீண்டும் அமைதியாக கடந்து செல்கிறார்.இறுதியில் இதயா தனது காதல்களை வெளிப்படுத்தினாரா? வாழ்க்கை அவருக்கு என்ன பதிலை கொடுத்தது? சொல்லப்படாத காதல்களின் முடிவு என்ன? என்பதற்கு உணர்வுப்பூர்வமாக பதில் சொல்கிறது ‘இதயம் முரளி’.

கதையின் நாயகனாக நடித்துள்ள அதர்வாவுக்கு, இக்கால திரை ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமான இடத்தினை இந்த படம் பெற்று தரும் , தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் உணர்வுகளை தன்னுடைய இயல்பான மற்றும் அளவான நடிப்பின் மூலம் அதர்வா சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.அதேபோல நாயகிகளாக நடித்திருக்கக்கூடிய ப்ரீத்தி முகுந்தனும் கயாடு லோகரும் அவரவர் பங்குக்கு ,தோற்றத்திலும் நடிப்பிலும் நல்லதொரு பங்களிப்பை படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் .நட்டி நட்ராஜ் ,.’பரிதாபங்கள்’ சுதாகர், ட்ராவிட் செல்வம், தமன், நிஹாரிகா, ரக்‌ஷன் போன்ற பிறரும் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களில் நன்கு நடித்து கதையோட்டத்திற்கு பக்க பலமாக நின்று உள்ளார்கள் .

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிகளை கண்களுக்கு குளிர்ச்சியாக, ரசிக்கும் வகையில் படமாக பதிவு செய்துள்ளார் .இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும்,கேட்பதற்கும் ரசிக்கும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. காதலை மையமாக கொண்டு பல கதைக்களங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்து அவை வெற்றியும் பெற்றுள்ளன .அந்த வகையில் ஒரு இளைஞனின் வாழ்க்கை பாதையில் குறுக்கிடும் காதல்களை புதிய பரிமாணத்தில் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் திரைமொழியில் படமாக்கி உள்ளார்.

மொத்தத்தில் இந்த ‘இதயம் முரளி’ , அழகான மென்மையான காதல் கதைகளை விரும்புபவர்களின் இதயத்தில் இடம் பிடிக்கும்

 

Spread the love