Sunday, July 12

‘லவ் ஓ லவ்’- திரைவிமர்சனம்

“காதலிக்கிறது சுலபம்… காதலுக்காக வாழ்ந்து காட்டுவது தான் சவால்!” அந்த சவாலை கதையாக மாற்றியிருக்கும் காதல் பொழுதுபோக்கு திரைப்படம் தான் ‘லவ் ஓ லவ்’.

பவிஷ் சம்பாதிக்கும் பணத்தை தனது அப்பாவிடம் கொடுக்கக்கூடிய பொறுப்பான இளைஞனாக வாழ்ந்து வருகிறார். அந்த வாழ்க்கையில் நாக துர்கா வர, இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால், நாக துர்காவின் ஆடம்பரமான வாழ்க்கை முறையால் சோர்ந்து போகும் பவிஷ், அவரை விட்டு விலக முடிவு செய்கிறார்.ஆனால், பவிஷ்தான் தனது வாழ்க்கைத் துணை என்று உறுதியாக இருக்கும் நாக துர்காவிடம், பவிஷ் ஒரு வித்தியாசமான நிபந்தனை வைக்கிறார். இதனால் விரக்தியடையும் பவிஷ் , நாக துர்காவிடம் எதிர்பாராத ஒரு சவாலை முன்வைக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு காதலனாக தான் சுமந்த பொறுப்புகளையும் அழுத்தங்களையும், நாக துர்கா நான்கு மாதங்கள் அனுபவித்து பார்க்க வேண்டும். அதில் வெற்றி பெற்றால் மட்டுமே தங்களது உறவு தொடரும் என்ற நிபந்தனையை விதிக்கிறார்.  இந்த சவாலில் நாக துர்கா வெற்றி பெற்றாரா? அவர்களின் காதல் வென்றதா? என்பதை சொல்லுகிறது படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக பவிஷ் நடித்துள்ளார்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்குப் பின் இவர் நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் இது. சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் பொருத்தமான மன உணர்வுகளை சிறப்பான முறையில் பவிஷ் வெளிப்படுத்தி உள்ளார்.
கதையின் நாயகியாக அவந்திகா என்னும் கதாபாத்திரத்தில் நாகதுர்கா நடித்துள்ளார் இவரின் யதார்த்தமான நடிப்பும், கதாபாத்திரத்திற்குரிய தோற்றமும் கதைக்கு தேவையான அளவிற்கு அமைந்துள்ளது

நாயகனின் அப்பாவாக நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள செல்வராகவன், மகளிர் சங்க தலைவியாக நடித்துள்ள வனிதா விஜயகுமார் ஆகியோரும் பிற கதாபாத்திர ங்க்ளில் நன்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இணக்கமான முறையில் ஒளி அமைப்புகள் , கோணங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்துள்ளார்.பாக்ஸன் இசையமைப்பில் பாடல்கள் பார்ப்பதற்கு இனிமையாகவும் ,கேட்பதற்கு ரசிக்கும் வகையிலும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து இயக்குநரின் படமாக்கலுக்கு மிகவும் உறுதுணையாக நின்றுள்ளார்

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களை குறிவைத்து எழுதப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் குடும்ப உறவுகளையும் இணைத்து அனைத்து வயதினருக்கும் ஏற்ற நாகரீகமான காதல் படமாக இயக்கியிருகிறார்.

மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ காதலில் யார் சரி, யார் தவறு என்பதை விட, ஒருவர் மற்றொருவரை புரிந்துகொள்வதே முக்கியம் என்பதை உணர்வோடு சொல்லும் ஒரு ரொமான்டிக் என்டர்டெய்னர்.

Spread the love