Saturday, July 11

‘ஐ , நோபடி’ (I,Nobody).-திரை விமர்சனம்

ஒரு வங்கி கொள்ளை சம்பவம் எப்படி ஒரு சாதாரண குடும்ப மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது? ஒரு தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததற்காக ஒருவர் எவ்வளவு பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும்? இப்படியான பதற்றமான கேள்விகளோடு தொடங்கும் இந்த திரைப்படம், இறுதி வரை பார்வையாளர்களை யூகிக்க வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக நகர்கிறது.

மூன்று பேர் வங்கியை கொள்ளையடிக்கும் போது, அங்கு இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அவரை வழியிலேயே இறக்கிவிடும் அந்த கொள்ளையர்கள், விபத்தில் உயிரிழக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவரின் முக்கிய ஆதாரம் மட்டும் பிரித்விராஜின் கையில் சிக்குகிறது.அந்த ஆதாரத்தை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் போலீசால், கொள்ளைப் பணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில், அந்த வங்கிக்கும் பிரித்விராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அவர் அங்கு நீண்ட நேரம் இருந்ததற்கான காரணமும் போலீசுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.போலீஸின் சந்தேகத்தை விட, ஊடகங்களின் தீர்ப்புதான் பிரித்விராஜின் வாழ்க்கையை அதிகமாக சிதைக்கிறது. ஒரு குற்றமும் செய்யாத மனிதன், குற்றவாளியாக சித்தரிக்கப்படும்போது, அதிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற அவர் நடத்தும் போராட்டம் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியுள்ளது.இறுதியில், அவர் ஏன் அந்த வங்கிக்கு சென்றார்? கொள்ளைப் பணம் எங்கே மறைந்தது? உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்விகளுக்கான பதில்களை சொல்லுகிறது படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது கதையின் நாயகனாய் நடித்துள்ள பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்புதான். ஒரு சாதாரண குடும்ப மனிதனாக தொடங்கி, சூழ்நிலையால் குற்றவாளியாக பார்க்கப்படும் நபராக ராஜீவன் என்னும் கதாபாத்திரத்தில் , கோபம், இயலாமை, தனது குடும்பத்தை காப்பாற்ற போராடுவது என ஒவ்வொரு உணர்வையும் மிக நம்பகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பும், உடல் மொழியும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. பார்வதி திருவோத்து, மீரா கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார். மேலும் ஹக்கிம் ஷாஜகான் ,அசோகன், விஜயராகவன், நக்ஷத்ரா என அனைவரும் ,அவரவர் கதாபாத்திர ங்களுக்கு ஏற்றபடியான நடிப்பை நன்கு வழங்கியுள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், படத்தின் பதற்றத்தை தனது கேமரா மொழியால் இன்னும் உயர்த்தியிருக்கிறார். குறிப்பாக வங்கி கொள்ளை காட்சிகளும், அதிரடி சண்டைக் காட்சிகளும் திரையரங்க அனுபவத்தை தரும் வகையில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன.

படத்தொகுப்பாளர் ரமீஸ் எம்.பி., எந்த இடத்திலும் திரைக்கதையின் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு திருப்பத்திலிருந்து அடுத்த திருப்பத்திற்கு படம் விறுவிறுப்பாக நகர்வதற்கு அவரது எடிட்டிங் முக்கிய காரணமாகிறது.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை இந்தப் படத்தின் மறைமுக ஹீரோ என்று சொல்லலாம். சஸ்பென்ஸ் காட்சிகளில் பதற்றத்தையும், உணர்ச்சிகரமான தருணங்களில் உணர்வுகளையும் இன்னும் ஆழமாக உணர வைக்கிறது.

இயக்குநர் நிசாம் பஷீர், ஒரு வழக்கமான வங்கி கொள்ளை கதையை வெறும் ஆக்‌ஷன் படமாக மட்டும் சொல்லாமல், அதற்குள் குடும்பம், உணர்வுகள், சமூகத்தின் தீர்ப்பு, ஊடகங்களின் தாக்கம் மற்றும் மனிதனின் மனப்போராட்டம் ஆகியவற்றை அழகாக இணைத்திருக்கிறார். சிறப்பான இயக்கம் ,வலுவான தொழில்நுட்பாளர்கள் , பிரித்விராஜின் அசத்தலான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, கடைசி வரை யூகிக்க முடியாத திருப்பங்கள் இவை யாவும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு தரமான ஆக்‌ஷன் த்ரில்லராக மாற்றியிருக்கின்றன.

மொத்தத்தில் ,ஒரு நல்ல த்ரில்லரை ரசிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் இது!

Spread the love