Sunday, May 3

தங்கலான்- பட விமர்சனம்

பா ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள பூர்வக்குடி மக்களின் வாழ்வியல் பதிவு – தங்கலான்

வேப்பூர் என்னும் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயத்தினை வாழ்வாதரமாக கொண்டவர்கள். அவ்வூரில் கதையின் நாயகன் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி, வாரிசுகளுடன் வாழ்ந்து வருகிறார்..கிராமமக்களின் நிலபுலங்களை அபகரிக்கும் ஜமீன்தார் அக்கிராமமக்களை அடிமை போல நடத்துகிறார். இந்த சூழலில் பிரிட்டிஷ் அதிகாரி கிளமண்ட் என்பவர் அந்த கிராமமக்களை கோலார் பகுதியில் உள்ள தங்கங்களை வெட்டிஎடுக்கும் வேலைக்கு வரச்சொல்லி.கூப்பிடுகிறார். .ஆதிக்க அராஜக சக்தியிடம் அல்லல்படுவதைவிட, ஆங்கிலேயரிடம் வேலை செய்வதே மேல்தான், மேலும் ஆங்கிலேயருக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால் கிடைக்கும் பணத்தை வைத்து நிலத்தை மீண்டும் பெற்று விடலாம், அது தன் கிராம மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் என்று கருதும் தங்கலான்.அங்கு தங்கத்தை வெட்டி கண்டுபிடிக்க கிளம்புகிறான். தங்கலானால் தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி கிட்டியதா ?. அதன்பின் அந்த மக்களின் வாழ்கை நிலை மாறியதா? இவற்றை படத்தின் மீதி கதை சொல்லும்.

படத்துக்கு படம் தோற்றத்திலும், நடிப்பிலும் மாறுபட்ட பரிமாணங்களை பதிவு செய்து வரும் விக்ரம், இந்த படத்திலும் தனிப்பட்ட உடல் மற்றும் பேச்சுமொழியால் கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் கொடுத்து நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரத்துக்குக்காக அவர் தன்னை தயார்படுத்திக்கொள்ள செய்திருக்கும் பின்புல உழைப்புகள் பாராட்டுக்குரியது.

கங்கம்மாவாக நடித்துள்ள பார்வதி, தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி, .தனி முத்திரை பதிக்கும் வகையில் நன்கு நடித்துள்ளார். .புதிய பரிமாணத்தில் மாளவிகா மோகனனின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது. பசுபதி,டேனியல் கால்டகிரோன் போன்றோரும் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி நன்கு நடித்துள்ளார்கள்.

பலங்கால வாழ்வியலை சொல்லும் கதைகளுக்கு தேவையான பின்புலத்தினை தருவதற்க்கு ஒளிப்பதிவாளர் ,இசையமைப்பாளர், கலை இயக்குநர் மூவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது, அந்த வரிசையில் இந்த படத்தின் கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி கதை நிகழும் சூழலுக்கே ரசிகர்களை அழைத்து செல்கிறார்.

மேலும் ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு அக்கால வாழ்வியலின் சூழலை நன்கு பதிவு செய்துள்ளது . ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இசையும் கதையோடு பயணித்து ரசிகர்களை கவர்கிறது .

காலம் காலமாய் அதிகாரம் கொண்ட ஆதிக்க சக்திகளிடமிருந்து தங்களது வாழ்வியல் ஆதாரங்களை மீட்டு எடுக்க போராடும் மக்களின் குறைகளை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்யும் வகையில், படத்தினை வலுவான திரைக்கலைஞர்களின் கூட்டணியோடு உருவாக்கியுள்ளார் பா.இரஞ்சித் .

தங்கலான்- .மிளிர்கின்றான்

Spread the love