‘குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரப் போராடும் மனைவி ஒருபுறம்; குற்றம் சாட்டப்பட்ட காவலர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் மறுபுறம்! உண்மைக்கும் சட்டத்துக்கும் இடையிலான சவாலான பயணமே ‘சட்டமும் நீதியும் 2’.

காவல் ஆய்வாளர் பிரேம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த மரணம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட, நான்கு காவலர்கள் குற்றவாளிகளாகக் கைது செய்யப்படுகிறார்கள். கணவரின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவரது மனைவியும் வழக்கறிஞருமான வரலட்சுமி சரத்குமார்,அந்த நான்கு போலீஸ்காரர்களுக்கு ஆதரவாக வழக்கு நடத்த முன் வருகிறார். வழக்கறிஞர் சரவணன்,இவர்களின் சட்ட போராட்டத்தில் இறுதியில் வெற்றி யார் பக்கம் ?என்பதை சொல்கிறது ‘சட்டமும் நீதியும் 2’.
வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்துள்ளார் முதல் சீசனில் ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்ற சரவணனுக்கு இந்த சீசனிலும் அவை தொடரும் அளவிற்கு அவரது நடிப்பு இயல்பாக அமைந்திருந்தது .கணவரை இழந்த வலியுடன் நீதிக்காகப் போராடும் வரலட்சுமி சரத்குமார், தனது அழுத்தமான நடிப்பால் கதைக்கு வலுசேர்க்கிறார்.மேலும், பிரேம்குமார், லாவண்யா, கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
எஸ். கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, நேர்த்தியான கோணங்களாலும் ஒளியமைப்பாலும் விசாரணை மற்றும் நீதிமன்றக் காட்சிகளின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. விபின் பாஸ்கரின் பின்னணி இசை உணர்வுகளுக்கு வலுசேர்க்க, ஆதிஸ்வரனின் படத்தொகுப்பு காட்சிகளின் விறுவிறுப்பைத் தக்கவைக்கிறது.
சட்டப் போராட்டத்தின் சிக்கல்களையும், கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் மையமாகக் கொண்டு தொடரை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் பாலாஜி செல்வராஜ். ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய திருப்பங்களை உருவாக்கி, அடுத்த பகுதியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியிருப்பது சிறப்பு. கதைக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் தொடரின் பலமாக அமைகின்றன.
குற்றம், நீதி, சட்டப் போராட்டம் என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பயணிக்கும் ‘சட்டமும் நீதியும் 2’, முதல் சீசனின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தக்கவைக்க முயற்சிக்கும் விறுவிறுப்பான இணையத் தொடர்.
