வாழ்க்கையில் சில உறவுகள் பாதியிலேயே முடிந்துவிடுகின்றன; சில உறவுகள் எதிர்பாராத நேரத்தில் புதிதாகத் தொடங்குகின்றன. முதல் காதலின் பிரிவுக்குப் பிறகு புதிய காதலைச் சந்திக்கும் ஓர் இளைஞனின் பயணத்தைச் சொல்கிறது ‘ஹைக்கூ’.

கல்லூரியில் நடக்கும் ஒரு சம்பவத்தால் அங்கிருந்து நீக்கப்படும் ஏகன், வேறொரு கல்லூரியில் சேர்கிறார். அங்கு ஸ்ரீதேவி அப்பல்லாவுடன் மலரும் காதல், எதிர்பாராத பிரச்சினைகளால் முறிவைச் சந்திக்கிறது. காலம் நகர, படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஏகனின் வாழ்க்கையில் ஃபெமினா ஜார்ஜ் அறிமுகமாகிறார். இருவருக்கும் இடையே புதிய காதல் மலர்ந்தாலும், அவருடைய முதல் காதலினாலேயே இரண்டாவது காதலுக்கும் ஒரு இடையூறு வருகிறது அதன் பிறகு என்ன நடந்தது ?அவரது இரண்டாவது காதல் வெற்றி அடைந்ததா ?இல்லையா என்பதை ஹைக்கூ படத்தின் மீதி கதை சொல்கிறது
மனோகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏகன், கல்லூரி இளைஞனுக்கான இயல்பான தோற்றத்துடனும் உடல்மொழியுடனும் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். அதிர்ச்சி அருண், ஜென்சன், திவாகர் சுப்பிரமணியம், சேது, மைம் கோபி உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளனர்.
காதலின் இனிமையையும் ,பிரிவின் வலியையும் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி அழகான காட்சியமைப்புகள் மூலம் பதிவு செய்திருக்கிறார். சித்து குமாரின் பாடல்கள் காதல் மனநிலைக்கு இதமளிக்க, பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.
காதலில் விழுவது, பிரிவைச் சந்திப்பது, மீண்டும் காதலைத் தேடுவது என இளமைப் பருவத்தில் நிகழும் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி. காதலின் வெவ்வேறு நிலைகளைத் திரையில் கொண்டுவர முயற்சித்திருப்பது படத்தின் மைய அம்சமாக அமைகிறது.
மொத்தத்தில் ,முதல் காதலின் நினைவுகளுக்கும் புதிய காதலின் நம்பிக்கைக்கும் இடையே பயணிக்கும் இளமைக்காலக் காதல் உணர்வுகளைப் பேசும் ஒரு மென்மையான காதல் கதை., இந்த ‘ஹைக்கூ’ .
