சில கதவுகள் திறக்கப்படாமல் இருப்பதற்குப் பின்னால் ஒரு பயங்கரமான காரணம் இருக்கும்! அப்படி பூட்டி வைக்கப்பட்ட அறை எண் 418-ன் மர்மத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது இப்படத்தின் கதை.

மருத்துவக் கல்லூரி விடுதியாக மாற்றப்பட்ட பழைய மனநல மருத்துவமனையில், அறை எண் 418 மட்டும் பூட்டியே வைக்கப்படுகிறது. அந்த அறையைச் சுற்றி நிலவும் மர்மமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அறை எண் 417-ல் தங்கும் சூர்யராஜ் வீரபத்தினி, அமானுஷ்யத் தாக்குதலுக்கு உள்ளாகிறார். பயத்தையும் மீறிப் படிப்பைத் தொடர முடிவு செய்யும் அவர், அறை 418-ன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மத்தைத் தேடத் தொடங்குகிறார். அந்தத் தேடல் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான உண்மைகளையும், உளவியல் பாதிப்புகளின் விளைவுகளையும் விவரிக்கிறது ‘418’.
கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரங்களில் சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி, ஸ்ரீ வைஷ்ணவ், சஷாங் பாட்டில் போன்றவர்கள் இயல்பான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள் மேலும் ப்ரீத்தி பகடலாவும் நன்கு நடித்துள்ளார் மற்றும் தேவிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா ஆச்சரின் நடிப்பு ரசிகர்களின் தனி கவனத்தை பெறுகிறது .
இருளையும் குறைந்த வெளிச்சத்தையும் திறமையாகக் கையாண்டு, ஒவ்வொரு காட்சியிலும் மர்மத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு காட்சிகளுடன் ஒன்றி பயணிக்கும் அனுபவத்தை ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன் கொடுத்துள்ளார்
வெங்கி.ஜி.ஜி.யின் பின்னணி இசை காட்சிகளின் பின்புலத்தை மேலும் மெருகூட்டும் வண்ணம் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது . அகுல் அவினாஷின் படத்தொகுப்பு படத்தின் காட்சிகளுக்கு விறுவிறுப்பை தரும் வண்ணம் உள்ளது
ஒரு குறிப்பிட்ட அறை எண்ணையே திகிலின் மையமாக்கி, அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்ற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பியிருப்பது படத்தில் ஆர்வத்தை தூண்டும் வண்ணமுள்ளளது ,மாணவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்கள், அவர்களது பயம், உயிர் தப்பிப்பதற்கான போராட்டம் என ஒவ்வொரு நிகழ்வையும் பதற்றத்துடன் இயக்குனர் கீர்த்தன் நடகௌடா நகர்த்தியிருக்கிறார்.
மொத்தத்தில் ,பயமுறுத்தும் நிழல்களும் விடை தெரியாத மர்மங்களும் நிறைந்த ‘418’, திகிலுக்கு அப்பால் உளவியல் பாதிப்புகளையும் பேசுகிறது.
