கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ தற்போது வெளியாகி உள்ளது .

குழந்தைக்குக்கான இலக்கியம் , குழந்தைக்குக்கான திரைப்படங்கள் போன்றவை அற்று போய்விட்ட காலகட்டத்தில்,எப்போதாவது அரிதாய் வரும் ஒரு சில படங்களின் வரிசையில் வந்துள்ள படம் இந்த ’முஃபாசா: தி லயன் கிங்’.
இளம் வயதில் வயதில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்படுவதால் முஃபாஸா (தமிழில் அர்ஜுன் தாஸ் குரல்), வேறு ஒரு நாட்டிற்கு செல்கின்றான்.அந்த நாட்டில் உள்ள டாக்கா என்னும் (அசோக் செல்வன்) என்ற சிங்கத்திற்கும் முஃபாஸாவுக்கும் ஏற்படும் நட்பு ,அந்தச் சிங்க கூட்டத்தின் தலைவனான ஒபாஸிக்கு பிடிக்கவில்லை
இந்த நிலையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தின் சேர்ந்த இளம் சிங்கமொன்றை முஃபாஸா கொன்று விடுவதால் ஆத்திரமடையும் அந்தக் கூட்டத்தின் தலைவன் கிரோஸ் (நாசர்) . ஒபாஸியின் கூட்டத்தினை பழி தீர்க்க நினைக்கிறான் .அந்த கூட்டத்திடமிருந்து முஃபாஸாவும், டாக்காவும் தப்பிப்பதோடு, செல்லும் வழியில் சில நண்பர்களையும் இணைத்து கொள்ளுகிறார்கள். அனைவரும் மிலல் என்ற இடத்தை நோக்கி செல்ல, அதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். அர்ஜுன்தாஸை மைய கதாபாத்திரமான முஃபாசாவுக்கு குரல் கொடுத்து, பேச வைத்துள்ளது மிக சரியான தேர்வு. அனைத்து கலைஞர்களும் .குரலின் வழியே தத்தம் கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டத்தினை சிறப்பாக கொடுத்துள்ளார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் & கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் நேர்த்தியான உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இதற்கான பாடல்களை லின்-மானுவல் மிராண்டா எழுதியிருக்கிறார்.
இந்தப் படம் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து தாங்கள் தொலைத்த,இளம் பிராயத்து நினைவுகளில் மூழ்கி திளைக்க ஏற்றதொரு திரைப்படமாகும்.
