கொலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம்… விசாரணையில் வெளிப்படும் எதிர்பாராத திருப்பங்கள்!என புதிய பாணியிலான கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது ஜீத்து மாதவனின் ‘சீன்’.

படத்தின் நாயகனான டிஎஸ்பி சூர்யா பதவி விலகல் கடிதம் கொடுத்தும், அவரை இழக்க விரும்பாத மேலதிகாரி அவரது பதவி விலகலை ஏற்க மறுக்கிறார்.இந்தச் சூழலில், ஏற்கனவே சூர்யாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சைக்கோ கொலையாளியின் கொலைப் பாணியிலேயே நகரில் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறுகின்றன. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர் யார்? என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியில் தனது உதவியாளராக நஸ்ரியா நசீமை சேர்த்துக் கொண்டு, வழக்கு விசாரணையில் சூர்யா களமிறங்குகிறார் ,அதன்பிறகு அந்த சைக்கோ கொலையாளியை சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சொல்வது தான் ‘சீன்’.படத்தின் மீதி கதை .
இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் சூர்யாவுக்கு, இன்பராஜ் கதாபாத்திரம் மற்றொரு வித்தியாசமான அனுபவம் தந்துள்ளது .வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட பாணியில் விசாரணை முறைகளையும், கதாபாத்திரத்தின் தனித்துவமான குணங்களையும் வெளிப்படுத்தி ,சூர்யா ரசிகர்களை பெரிதும் கவர்கிறார் .இந்தப் படமும் ,இன்பராஜ் கதாபாத்திரமும் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் . 2026-ல் அவரது வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு வெற்றிப் படமாக ‘சீன்’ அமைந்துள்ளது.
நாயகியாக வரும் நஸ்ரியா நசீமுக்கு, கதையின் போக்கில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாயகனுடன் இணைந்து விசாரணையில் பயணிக்கும் அவரது கதாபாத்திரம் கதைக்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. தனது இயல்பான நடிப்பாலும், திரையில் வெளிப்படுத்தும் தோற்றத்தாலும் அவரும் தனி கவனம் ஈர்க்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்லென், தனதுதனித்துவமான நடிப்பின் மூலம் தனி முத்திரை பதிக்கிறார் ,அவருடைய கதாபாத்திர வடிவமைப்பும், அதை வெளிப்படுத்திய விதமும் படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளன. மேலும் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் லால், சூர்யாவின் தந்தையாக வரும் ஆனந்தராஜ், ராஜ்பிரியன், சுரேஷ் மதிழயகன், கஜராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வண்ணம் இயல்பான நடிப்பை நன்கு வழங்கியுள்ளார்கள்
கதையின் மனநிலைக்கும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் தனது ஒளிப்பதிவை சிறப்புற அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினித் அகஸ்டியன். காட்சிகளின் கோணங்களும், ஒளியமைப்பும் இயக்குநரின் எண்ணயோட்டதுக்கு பக்க பலமாய் நின்றுள்ளது .
சீரியல் கில்லர் கதைகளுக்கே உரிய வழக்கமான பின்னணி இசைப் பாணியைத் தவிர்த்து, சற்று வித்தியாசமான இசை அனுபவத்தை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம். அதேபோல், அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பு காட்சிகளைத் தேவையான வேகத்தில் நகர்த்தி, கதையின் ஓட்டத்தைச் சீராகக் கொண்டு செல்கிறது.
தனது முந்தைய படங்களில் நகைச்சுவையையும், சுவாரஸ்யமான கதையம்சத்தையும் இணைத்துக் கொடுத்த ஜீத்து மாதவன், இந்தப் படத்திலும் தனது தனித்துவமான திரைமொழியைத் தொடர்ந்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் கதைக்களத்திற்குள் நகைச்சுவை உணர்வையும், வித்தியாசமான கதாபாத்திர அணுகுமுறையையும் கலந்து, வழக்கமான சீரியல் கில்லர் படங்களிலிருந்து ‘சீன்’ படத்தை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். ஒரு மர்மக் கதையை விறுவிறுப்பாக மட்டுமல்லாமல், ரசிக்கும்படியான திரை அனுபவமாகவும் வழங்க முடியும் என்பதை தனது இயக்கத்தின் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார்.
கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மம், அதைத் துப்பறியும் நாயகனின் வித்தியாசமான அணுகுமுறை, எதிர்பாராத திருப்பங்கள் என கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது இந்த ‘சீன்’. அதில் சூர்யாவின் நடிப்பும், ஜீத்து மாதவனின் வித்தியாசமான திரைக்கதை அணுகுமுறையும் படத்திற்குப் பெரும் பலம். வழக்கமான விசாரணைக் கதையைப் பார்க்காமல், சற்று வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்ட ஒரு கிரைம் த்ரில்லரை ரசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் ‘சீன்’ படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.
