காதல், தியாகம், எதிர்பார்ப்பு என இதயத்தின் பல வண்ணங்களைப் பேசுகிறது ‘நூறு கோடி வானவில்’.

கோவாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஹரிஷ் கல்யாணுக்கு, அங்கு சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றும் சித்தி இத்னானியின் அறிமுகம் கிடைக்கிறது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கும் இவர்களது பழக்கம், நாளடைவில் புதிய உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால், சித்தி இத்னானியின் வாழ்க்கையோ ஏற்கனவே ஒரு காதலின் நினைவுகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டிருக்கிறது. அவரது காதலன் ரினில் விபத்தில் சிக்கி கோமாவில் இருக்க, அவனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையே தனது வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்டு போராடி வருகிறார்.இந்தச் சூழலில், சித்தி இத்னானியை மையமாக வைத்து ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியை உருவாக்கத் திட்டமிடுகிறார் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் சித்தி, காதலனின் மருத்துவச் செலவுகளுக்காக இறுதியில் சம்மதிக்கிறார். நிகழ்ச்சியின் மூலம் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்க, ஹரிஷின் நட்பு காதலாக மாறுகிறது. ஆனால், ஏற்கனவே ஒரு காதலுக்காகக் காத்திருக்கும் சித்தி இத்னானியால் இந்தப் புதிய காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். இத்தகைய உணர்ச்சிப் போராட்டங்களுக்கு இடையே, கோமாவில் இருந்த ரினிலுக்கும் சுயநினைவு திரும்புகிறது. அதன்பிறகு இந்த மூன்று உள்ளங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், காதல் உறவுகளின் அடுத்தகட்ட நகர்வுகளும்தான் படத்தின் மீதிக்கதை.

கோவாவின் எழிலை இளம் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு அழகுற படமாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா.S.குமார் .சித்து குமாரின் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாக உள்ளன. காதல் உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியே இயல்பாக கடத்துவதற்கு படத்தின் பின்னணி இசை பெரிதும் உதவியுள்ளது .
இயக்குனர் சசி முக்கோண காதல் கதையை காதல் உணர்வுகளோடு களமாடும் கதாபாத்திரங்களுடன் அழகான திரைமொழியில் படமாக பதிவு செய்துள்ளார் . மென்மையான உணர்வுகளையும், காதலின் பல்வேறு பரிமாணங்களையும் அழகான காட்சிகளுடன் சொல்லியிருக்கும் ‘நூறு கோடி வானவில்’, இளம் ரசிகர்களுக்கு இனிமையான காதல் அனுபவமாக அமையும்.
மொத்தத்தில் தலைப்பைப் போலவே வண்ணமயமான காதல் உணர்வுகளை மனதில் விதைத்துச் செல்லும் ஒரு நிறைவான திரைப்படம்!
