அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர் மற்றும் மிஷ்கின், கே எஸ் ரவிக்குமார் ,கௌதம் மேனன் வி. ஜே. சித்து, ஹர்ஷத்கான் நடித்துள்ள டிராகன் படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ்.
கதையின் நாயகனான கல்லூரி மாணவன் டி . ராகவன் என்னும் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) காதல்,கலாட்டா என ஜாலியாக நண்பர்களுடன் வலம் வரும் இளைஞன் , 43 அரியர்களுடன் கல்லூரியை விட்டு செல்கிறார், அதன் பின் இரண்டு ஆண்டுகள் நண்பர்களின் படத்தில் உல்லாசமாக வாழ்க்கையை ஓட்டி வரும் டிராகனின் காதலை அனுபமா பரமேஸ்வரன் பிரேக் அப் செய்துவிட்டு சென்று விடுகிறார் .அதன்பின் தன்னுடைய அரியர்களை முடித்து விட்டதாக போலிச் சான்றிதழ் பெற்று ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் டிராகன் .அதன்பின் மாறும் அவரது வாழ்க்கை பயண பாதை, ஆடம்பரம், செல்வந்தர் வீட்டு திருமணம் என்று செல்லுகிறது அந்த சமயத்தில் கல்லூரி முதல்வரால் ஏற்படும் சிக்கலான சூழலை அவர் எப்படி எதிர்கொள்கிறார் ?என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக நடித்துள்ள பிரதீப்புக்கு இது இரண்டாவது படம். இன்றைய கால இளைஞர்களை பிரதிபலிக்கும் நாயகனாக அவர் திரையில் வலம் வர அவரது தோற்றமும், உடல் மொழியும் மிகவும் உதவியிருக்கிறது. நாயகியரில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனை பொறுத்தவரையில் அவரும்,அவரது கதாபாத்திரமும், அதை அவர் வெளிப்படுத்தி இருந்த விதமும் நன்றாக இருந்தது .மற்றொரு நாயகியான கயடு லோகரும் தன் பங்குக்கு குறைவில்லாத நடிப்பையே கொடுத்து உள்ளார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கல்லூரி முதல்வராக நடித்துள்ள மிஷ்கின் தன்னுடைய கதாபாத்திரத்தில் தனி முத்திரையுடன் நன்கு நடித்துள்ளார், மற்றும் வி.ஜே. சித்து,ஹர்ஷத்கான், தந்தை கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான், இயக்குனர்கள் கௌதம் மேனன், கே எஸ் ரவிக்குமார் போன்றவரும் தத்தம் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
காட்சிகளின் பின்புலத்தை நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு அழகாக பதிவு செய்துள்ளது . நல்ல பாடல்களையும், காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி இசையினையும் வழங்கி இயக்குனருக்கு பக்க பலமாக நின்றுள்ளார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

கனவை சுமந்து திரியும் கல்லூரி காலங்கள், அங்கேயும் சந்திக்கும் புதிய உறவுகள், மனிதர்கள், அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அதன்பின்பு நடைபெறும் வாழ்வியல் மாற்றங்கள், அதன் வழியே பயணிக்கும் கதையில் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்து படம் பார்க்கும் இளைஞர்களின் பல்ஸ் பார்த்து படம் எடுத்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

இளம் திரை ரசிகர்களை வெகுவாக கவர்வான் இந்த டிராகன்.
