ஒரு பழமையான வீட்டை மையமாக வைத்து திகிலும், அமானுஷ்யமும், மர்மங்களும் கலந்த கதையை சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் இந்த ‘டார்க் ஜெயன்ட்’
கடன் சுமையோடு வாழ்ந்து வரும் ஆதர்ஷ் மதிகாந்தனுக்கு, பல ஆண்டுகளாக தெரியாத ஒரு உறவு திடீரென தேடி வருகிறது. அவருடைய சொந்த ஊரில் வசிக்கும் வயதான தாத்தா ஒருவர், தனது சொத்துகளை உயில் மூலம் அவருக்கே எழுதிக் கொடுக்க விரும்புவதாக அறியும் ஆதர்ஷ் மதிகாந்தன் மனைவி மற்றும் தங்கையுடன் சொந்த ஊருக்கு செல்லுகிறார் .அந்த ஊரில் உள்ள பாழடைந்த வீட்டில் உயிர் பிரியும் தருவாயில் உள்ள தாத்தாவை சந்திக்கிறார்.ஆனால் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே, ஒவ்வொருவருக்கும் விவரிக்க முடியாத அமானுஷ்ய சம்பவங்கள் நேரிடத் தொடங்குகின்றன. அங்கிருந்து அவர்கள் உயிருடன் தப்பிக்க முடிந்ததா? அந்த வீட்டை சுழ்ந்து இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதர்ஷ் மதிகாந்தன், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப முழு ஈடுபாட்டுடன் நன்கு நடித்துள்ளார் ,கடன் சுமையில் சிக்கி மனவேதனையுடன் தவிப்பது, சாத்தானின் ஆட்கொள்வில் சிக்கியபோது உடல் மொழியிலும் முகபாவனைகளிலும் ஏற்படும் மாற்றங்கள், என பல்வேறு உணர்வுகளை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்துள்ள ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பப் பெண்ணாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால் ,அமுதவாணன், ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் தங்களது அனுபவ நடிப்பை பதிவு செய்துள்ள கே. பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் குறைவில்லாத நடிப்பை படத்தில் வழங்கியுள்ளார்கள் .
இது போன்ற கதைக்களம் கொண்ட படங்களுக்கு மைய நாடியாக இருப்பது ஒளியும் ஒலியும்தான், அது போல இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபாலின் காட்சியமைப்புகளும், இசையமைப்பாளர் விக்னேஷ்.ஆர் வழங்கிய பின்னணி இசையும் படத்தின் திகில் தருணங்களை மேலும் அதிகரிக்க வைத்துள்ளன. படத்தை இயக்கியுள்ள கே.எஸ். கிஷன், வித்தியாசமான அமானுஷ்யக் கதையை, பலமான தொழிநுட்ப கூட்டணியுடன் படமாக்கியுள்ளார்.
மொத்தத்தில், இந்த ‘டார்க் ஜெயன்ட்’ – ‘ திகில் பட ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தராது.
