கணவனை இழந்த பிறகு, இரண்டு மகன்களை தனியாக வளர்க்கும் ஒரு தாயின் வாழ்க்கை… அவளின் ஆசைகள், வலிகள், அவள் மீதான சமூகத்தின் பார்வை, அவளின் மறுமணத்தைச் சுற்றி உருவாகும் உணர்வுப்பூர்வமான போராட்டம் – இதையெல்லாம் மனதை வருடும் வகையில் சொல்லியிருக்கிறது ‘நூறு சாமி’.

கணவனின் இழப்புக்குப் பிறகு, இரண்டு மகன்களின் எதிர்காலமே தனது உலகம் என்று வாழத் தொடங்குகிறார் சுவாசிகா. தனியாக குடும்பத்தைச் சுமக்கும் அவருக்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக மாறுகிறது. பொருளாதார சுமைகளை விட, சமூகத்தின் தவறான பார்வைகளும், தேவையற்ற விமர்சனங்களுமே அவரை அதிகமாக காயப்படுத்துகின்றன.அந்தச் சூழலில், தனக்கும் ஒரு புதிய வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் சுவாசிகாவின் மனதில் உதிக்கிறது. ஆனால், அந்த விருப்பத்திற்கு முதலில் எதிராக நிற்பவர் அவரது மூத்த மகன்தான். தாயின் மறுமணத்தை ஏற்க மறுத்த மகனின் முடிவால், அந்த ஆசை மனதுக்குள்ளேயே புதைந்து போகிறது.

காலம் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வயதுக்கு வந்த பிறகு, ஒருகாலத்தில் அம்மாவின் மறுமணத்தை எதிர்த்த அதே மகன், இப்போது அம்மா மீண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக மறுமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறான். இளைய மகனும் அவனுக்கு துணையாக நிற்கிறான்.ஆனால், இந்த முறை மறுப்பது சுவாசிகாதான். கடந்த காலத்தின் காயங்கள், சமூகத்தின் தீர்ப்புகள், வயதின் தயக்கம் என பல காரணங்களால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார். இருந்தாலும், தாயின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இரண்டு மகன்களும் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.இறுதியில் சுவாசிகா மறுமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால், அந்த முடிவு அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியை கொண்டு வந்ததா? அல்லது புதிய சவால்களையும் சமூகத்தின் எதிர்ப்புகளையும் உருவாக்கியதா? அதனால் அந்த குடும்பம், சந்தித்த இன்னல்கள் என்னென்ன? என்பதே ‘நூறு சாமி படத்தின் மீதி கதை.
சுவாசிகா இந்தப் படத்தின் கதையின் உயிர் நாடியாக உள்ள செல்வி என்னும் கதாபாத்திரத்தில் ,ஒரு விதவை பெண்ணின் தனிமை, சமூக அவமானம், தாய்மை, மறுமணத்தின் மீதான தயக்கம், பின்னர் அதற்கான மகிழ்ச்சி என ஒவ்வொரு உணர்வையும் இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
சிறப்பான தோற்ற கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பினை கொடுத்துள்ள விஜய் ஆண்டனியின் பங்களிப்பு, இந்த படத்துக்கு கூடுதல் பொலிவினை தந்துள்ளது .அஜய் திஷான் மற்றும் சக்தி ஆகியோர் ,மகன்கள் கதாபாத்திரங்களில் நன்கு நடித்து ,கதைக்கு தேவையான உணர்வுகளை சிறப்பாக வெளிபடித்தியுள்ளார்கள். மேலும் லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பிறரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லா நடிப்பை நேர்த்தியாக கொடுத்துள்ளார்கள்.

பாலாஜி ஸ்ரீராமின் இசையில் “அம்மா அம்மாதான்”, “மாயக் கனவோ” பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை மேலும் உயர்த்துகிறது.
ஒரு பெண்ணின் அமைதியான வேதனையை நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஷின் கேமரா . ஹரிஷ் யுவராஜின் படத்தொகுப்பு எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் கதையை நகர்த்துகிறது.
ஒரு பெண்ணின் மறுமணம் என்பது அவளது உரிமை என்பதை உணர்ச்சிகரமாக பேசும் கதை களத்தினை எடுத்துக்கொண்டு , உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, விதவை பெண்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள சமூக அழுத்தங்களையும், மறுமணத்தைப் பற்றிய பழமையான மனநிலையையும் ,எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல், மனிதநேயத்துடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சசி.
.மொத்தத்தில் இந்த ‘நூறு சாமி'”தாயின் கண்ணீரை மட்டும் அல்ல… அவளின் மறைக்கப்பட்ட ஆசைகளையும் திரையில் பேச வைக்க கூடிய திரைப்படம்!”
