Saturday, June 20

‘எங்கள் தங்கம்’ – திரை விமர்சனம்

குடும்ப பாசத்திற்குள் மறைந்திருக்கும் ஒரு மர்மம்… அதை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் தைரியமான போராட்டம்தான் ‘எங்கள் தங்கம்’.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்வர்ணா (சமந்தா) மற்றும் டாக்டர் அனிருத் (திகந்த் மஞ்சாலே), ஹனியின் தங்கை திருமணத்திற்காக அவரது சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். ஆனால் அந்த வீட்டில் ஸ்வர்ணாவை குடும்பத்தினர் யாரும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் சூழல் இருப்பினும், தனது அன்பான குணத்தாலும், பொறுமையாலும் குடும்பத்தினரின் நம்பிக்கையை மெதுவாகப் பெறுகிறார் ஸ்வர்ணா. மாமனார், மாமியார் என அனைவரின் மனதிலும் இடம்பிடிக்கும் நேரத்தில், எதிர்பாராத வகையில் அவளது கடந்த காலம் நிகழ்காலத்தைத் துரத்தி வருகிறது.

கருணா (குல்ஷன் தேவய்யா) என்ற கொடூர குற்றவாளியின் ஆட்கள் ஸ்வர்ணாவைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். காரணம், அவள் ஜான்சி என்ற பெண்ணைப் போலவே இருப்பது. ஆனால் தாக்க வந்தவரையே ஸ்வர்ணா எதிர்த்து கொன்றுவிடுகிறார். இதனால் சிறையில் இருக்கும் கருணா நேரடியாக களமிறங்குகிறார்.

உண்மையில் ஜான்சி யார்? ஸ்வர்ணாவின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? கருணாவுக்கும் ஸ்வர்ணாவுக்கும் என்ன தொடர்பு? தனது புதிய குடும்பத்தை காப்பாற்ற ஸ்வர்ணா எடுக்கும் முடிவு என்ன? போன்ற வினாக்களுக்கான விடைகளை ஆக்‌ஷன் கலந்த திரைக்கதையுடன் சொல்லுகிறது ‘எங்கள் தங்கம்’ படத்தின் மீதி கதை.

ஸ்வர்ணா கதாபாத்திரத்தில் சமந்தா குடும்பப் பெண்ணாக அமைதியான நடிப்பையும், அதிரடி காட்சிகளில் ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறியும் , இரு மாறுபட்ட பரிமாணங்களில் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம், அவரது திறமைக்கு மீண்டும் ஒருமுறை அங்கீகாரம் கொடுத்துள்ளது .

திகந்த் மஞ்சாலே , அனிருத் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். குல்ஷன் தேவய்யா வில்லனாக மிரட்டினாலும், அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் வலுவான பின்னணி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மேலும் மன்ஜூஷா, ஸ்ரீமுகி,கௌதமி, சைதன்யா கிருஷ்ணா போன்றவர்களும் அவரவர் பங்குக்கு ஏற்ப குறைவில்லாத நடிப்பை கொடுத்துள்ளார்கள் .

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் பாடல்களும், ஆக்‌ஷன் காட்சிகளை உயர்த்தும் பின்னணி இசையும் படத்தின் வேகத்தை அதிகரிக்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திருமண வீட்டு கொண்டாட்டத்தையும், பின்னர் உருவாகும் பதற்றத்தையும் நேர்த்தியாக காட்சிப்பதிவு செய்துள்ளது.

குடும்ப உறவுகள், கடந்த கால ரகசியங்கள் மற்றும் ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி. இயக்குநர் நல்ல கதைக்களத்தை தேர்வு செய்திருந்தாலும், இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இருப்பினும் , சமந்தாவின் நடிப்பும், ஆக்‌ஷன் காட்சிகளும் படத்தின் பிளஸ் ஆக அமைந்துள்ளன.

மொத்தத்தில், இந்த ‘எங்கள் தங்கம்’ சமந்தாவின் சிறப்பான நடிப்பை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன்-குடும்பக் கலவையான படம். மேலும் நடிகையாக அவருக்கு இது ஒரு வலுவான மறுபிரவேசத்தினை கொடுத்துள்ள படம்.

Spread the love