வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்…சில காத்திருப்புகளுக்கு மட்டும்… காலம்தான் பதில் சொல்லும்.அப்படிப்பட்ட ஒரு காத்திருப்பின் கதையைச் சொல்கிறது ‘பாலன்’.
மஞ்சுமல் பாய்ஸ் என்ற வெற்றி படத்தினை கொடுத்த இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இந்த பாலன் .
சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கர்ப்பிணியான பர்சானா பலதிங்கல், சிறையிலேயே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகும் அவர், கடந்த காலத்தில் சந்தித்த துயரங்களும் துரோகங்களும் காரணமாக யாரையும் எளிதில் நம்ப முடியாமல், தன் மகனுடன் ஓர் இடம் விட்டு வேறு இடம் என தங்களது அடையாளங்களை மாற்றிக்கொண்டு ஊர் ஊராக பயணித்து வாழ்கிறார்.அந்த சூழலில், தனியாக வசிக்கும் ஒரு வயதான பெண்மணியை கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. பாதுகாப்பான இடம் கிடைத்ததால் அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்யும் அவர், தனது மகனை பள்ளியிலும் சேர்க்கிறார்.ஆனால் கடந்த காலத்தின் பயம் அவரை ஒருநாளும் விட்டு விலகவில்லை. அதனால், பள்ளி முடிந்து வரும் மகனை தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் சொல்லி, “எவ்வளவு நேரமானாலும் அங்கேயே இரு… அம்மா கண்டிப்பாக வருவேன்” என்று உறுதி அளிக்கிறார்.ஆனால் ஒரு நாள்அம்மா வரவில்லை! நீண்ட நேரம் காத்திருந்த சிறுவனை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது? அம்மாவும் மகனும் மீண்டும் சந்தித்தார்களா? என்ற கேள்விகளுக்கான பதிலாக, மனதை உருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான வாழ்வியல் பதிவினை மீதி கதையாக பாலன் சொல்கிறது
கதையின் நாயகியாக நடித்திருக்கும் பர்சானா பலதிங்கல், வலியையும், பயத்தையும், குற்ற உணர்வையும் சிறப்பான முறயில் வெளிப்படுத்தி தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு பெரும் பலம் சேர்த்துள்ளார்.சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் அதிக வசனங்கள் இல்லாமலேயே தனது பார்வையாலும், முகபாவனைகளாலும் தாயைத் தேடும் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை தொடுகிறார்.
வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன், தன் அம்மாவைத் தேடும் பயணத்தின் ஏக்கத்தையும், உணர்ச்சிகளையும் இயல்பான நடிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார். அவரது நடிப்பு கதையுடன் பார்வையாளர்களை எளிதில் ஒன்றச் செய்கிறது. மேலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால்,சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், கிரிஷ் ஏ.டி. போன்ற பிற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், கதையின் இயல்புத்தன்மைக்கு இடையூறின்றி தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
படத்தின் உணர்வுகளை காட்சிகளின் வழியே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். இயற்கையான லொக்கேஷன்களையும், அமைதியான ஃபிரேம்களையும் கதையின் மனநிலைக்கு ஏற்ற வகையில் பதிவு செய்து, ஒவ்வொரு காட்சிக்கும் தனி உயிர் கொடுத்திருக்கிறார்.சுஷின் ஷாமின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வெறும் இசையாக இல்லாமல், கதையின் உணர்ச்சிகளோடு பயணிக்கிறது. விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு, கதையின் ஓட்டத்தை எந்த இடத்திலும் தொய்வடைய விடாமல் நகர்த்துகிறது.
கதையாசிரியர் ஜித்து மாதவன், எளிமையான கதைக்குள் ஆழமான உணர்ச்சிகளையும், எதிர்பாராத திருப்பங்களையும் இணைத்து, பரபரப்பும் பாசமும் கலந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். இயக்குநர் சிதம்பரம், தனது முந்தைய படைப்புகளைப் போலவே இந்தப் படத்திலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியான காட்சிகளின் வழியே வலிமையான உணர்வுகளை கடத்துகிறார். மெதுவாக நகரும் திரைக்கதைக்குள் பரபரப்பையும் சஸ்பென்ஸையும் சரியான அளவில் கலந்து, இறுதிவரை பார்வையாளர்களை கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு சங்கமிக்க வைத்துள்ளார்
“பிரிவின் வலியையும், தாய்ப்பாசத்தின் ஆழத்தையும், திரை மொழியில் பதிவு செய்துள்ள இந்த ‘பாலன்’ பாராட்டப்பட வேண்டிய படம்.”

