நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது.

தரங்கம்பாடியில் வாழும் இளம் பெண் ஷகீரா. திருச்சியை சேர்ந்த வினோதா ஷகீரா வீட்டில் தங்கும் சூழ்நிலையில் இரண்டு பெண்களும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் ஷகீராவின் அப்பாவிற்கு தெரிய வர உடனடியாக திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இர்பான் என்ற இளைஞனை ஷகீராவுக்கு மணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் ஆனால் ஷகீரா இர்பானை அணுகி வினோதாவுடனே தன்னைஇணைத்து வைக்குமாறு கேட்கிறார்.இதன் பின்னர் இர்பான் எடுக்கும் முடிவு என்ன ? ஷகீரா வினோதா இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் மைய கதாபாத்திரங்களாக ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் நடித்துள்ளார்கள், புதுமையான களத்தில் அமைந்துள்ள கதைக்கு ஏற்ப ,இருவரும் தங்களது பாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ற நடிப்பை மிகையின்றி கொடுத்துள்ளார்கள், மேலும் இவர்களுடன் அர்ஷத் ஆறுமுக வேல், பிரதீப் ஆகியோரும் குறைவின்றி நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் கோகுல கிருஷ்ணன், இசை அமைப்பாளர் தர்ஷன் ரவிக்குமார் போன்றோரும் தங்களது பணியை செவ்வனே செய்துள்ளார்கள்.
சொல்ல வந்த கருத்தை அதன் சுய தன்மை மாறிவிடாமல்,ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் நன்கு படத்தை இயக்குனர் ஜெயராஜ் பழனி உருவாக்கியுள்ளார்.
