Friday, August 7

‘வதந்தி – சீசன் 2’- இணையத் தொடர் விமர்சனம்.

நிறைய ட்விஸ்ட்கள், யூகிக்க முடியாத திருப்பங்கள் , கணிக்கமுடியாத கிளைமாக்ஸ் ,அருமையான நட்சத்திர தேர்வு ,வளமான தொழில் நுட்ப கூட்டணி இவைகளுடன் முதன்முறையாக சசிகுமாரின் வெப்சீரிஸ் என்ட்ரி இப்படி பல அம்சங்களுடன் விறுவிறுப்பான தொடரை கொடுத்துள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் .

எட்டு வழி சாலை அமைக்க பூஜை போடப்படும் பொழுது எலும்புகள் கண்டெடுக்கப்படுகின்றன இதைப்பற்றி ஆராய்ந்து விசாரணை செய்ய காவல்துறை அதிகாரி மூசா ராசா என்னும் கதாபாத்திரத்தில் .சசிகுமார் தலைமையில் குழு ஒன்று களமிறங்குகிறது இதில் ராமர் என்னும் கதாபாத்திரத்தில் விவேக்பிரசன்னாவும் இந்த குழுவில் இணைந்து பயணிக்கிறார்.ராதிகா என்னும் எஸ்.பி கதாபாத்திரத்தில் இந்த குழுவிற்கு உறுதுணையாக உள்ளார் அனகா.திருமணம் ஆகி பல வருடங்களுக்குப் பிறகு தாய்மை பேறு அ டைந்திருக்கும் தன் மனைவியுடன் வாழ்ந்து வரும் சசிகுமார் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகளை கண்டறியும் தொடர் விசாரணையில் ஈடுபடும் பொழுது முடக்கத்தான் மணி என்னும் மாடுபிடி வீரரை பற்றிய துப்பு கிடைக்கிறது. இந்த கொலைகளை மணி செய்திருக்கலாம் என்.ற கோணத்தில் நகரும் விசாரணையில் இந்த கொலைகளை மணி செய்திருக்க மாட்டான் என்று சசிகுமார் நம்புகிறார் இதற்கு ராதிகாவும் அவரது வழக்கறிஞர் கணவரும் உறுதுணையாக உள்ளார்கள். தொடர்ந்து பல கோணங்களில் நடத்தப்படும் விசாரணையில் பல மர்மம் முடிச்சுகள் விழுகின்றன அதில் மரபணு முக்கிய காரணியாக உள்ளது .ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் எழும் அந்த மர்மம் முடிச்சுகள் அடுத்த அத்தியாயத்தில் அவிழ்க்கப்பட்டு, புதிய முடிச்சுகள் போடப்படுகின்றன, இறுதியில் சசிகுமார் குழுவினர் உண்மை குற்றவாளியை நெருங்குகிறார்கள், கிளைமாக்ஸ்சில் யாருமே சற்றும் எதிர்ப்பாராத வண்ணம் அந்த உண்மை குற்றவாளியையும் அதன் பின்னணியில் உள்ள அதிரடியான, ஆச்சரியமான பின்புலங்களையும் கண்டறிகிறார்கள். உண்மையில் அந்த எலும்புக்கூடுகள் யாருடையது ? உண்மை குற்றவாளிகளை சசிகுமார் குழுவினர் எப்படி கண்டுபிடித்தார்கள் ? அதன் பின்னணி என்ன ? இவைகளைப் பற்றி விறுவிறுப்பாக ,பரபரப்பாக, காட்சிகளின் வாயிலாக பதிவு செய்துள்ளது இந்த வதந்தி.

 

தொடரின் நாயகனாக சிக்கலான கொலை வழக்கினை விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக சசிகுமார் மூசா ராசா என்னும் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாத தன் அளவான நடிப்பினை சிறப்பாக பதிவு செய்துள்ளார். கொண்ட கடமையில் கருத்தாகவும் ,பல வருடங்களுக்குப் பிறகு தாய்மை பேரடைந்திருக்கும் மனைவி மீது அளவற்ற பாசமும் கொண்ட கணவனாகவும் நன்கு நடித்துள்ளார் .மேலும் வழக்கு சம்பந்தமாக தான் நம்பும் விஷயத்தை குறித்து மற்றவர்கள் மாற்று கருத்துக்களை சொன்னாலும் தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருந்து, கொலைப்பழி விழுந்தவரை காப்பாற்றி உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் உறுதியாகவும் இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பினை சசிகுமார் வழங்கி இருக்கிறார்.

 

உயர் போலிஸ் அதிகாரியாக ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் அனகா நடித்துள்ளார் . பொறுப்பில் உள்ள போதும், கணவனுடன் நேரத்தை செலவிடும் பொழுதும் இரு மாவட்ட பரிமாண நடிப்புகளை சிறப்பாக வெளிப்படுத்திஉள்ளதோடு , இக்கட்டான சூழல் ஏற்படும் போதெல்லாம் சசிக்குமாருடன் உறுதுணையாக நின்று, உண்மை குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் காட்சிகளில் தன்னுடைய இயல்பான நடிப்பை அனகா பதிவு செய்துள்ளார்.சசிகுமாரின் மனைவி சுமையா என்னும் கதாபாத்திரத்தில் அபர்ணாதாஸ் நடித்துள்ளார்., கணவன் தன்னுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைத்தாலும் கணவனின் பணிச் சூழலை புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் பொறுப்புள்ள குடும்ப தலைவி கதாத்திரத்தில் அளவான நடிப்பினை தொடர் முழுவதும் நன்கு வெளிப்படுத்தி உள்ளார் .

முடக்கத்தான் மணி ஆக நடித்துள்ள யஷ்வந்த் அதிரடியான மாடுபிடி வீரராக அறிமுகமாகி, தான் வளர்க்கும் காரி என்னும் கன்று மீது பாசமும் , தன்னை காதலிப்பவர் யார் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமும் , பின்னர் காதலின் மீது நேசமும் கொண்ட யதார்த்தமான கிராமத்து இளைஞனை நம் கண் முன்னே நிறுத்தி தொடர் முழுவதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

யஷ்வந்தின் காதலியாக ரேவதி சர்மா நடித்துள்ளார் ,மனசுக்கு பிடிச்ச காதலனை வம்படியாக வரவழைத்து தன் காதலை சொல்லி, அதன் பின் கொண்ட காதலில் உறுதியாக நிற்கும் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது.

மேலும் வட்டார வழக்கு வசனங்களை தொடர் முழுவதும் பிரயோகித்து ராமர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னா தொடர் முழுவதும் தன் வசனங்கள் மூலமாக நகைச்சுவை தூறல்களாக தெளித்து இருக்கிறார் ,இருப்பினும் சில சீரியஸான காட்சிகளின் பொழுது அவரது நகைச்சுவை கவுண்டர்கள் சற்று காட்சியின் தன்மைக்கு ஒத்துப் போகாமல் தான் உள்ளது என்பது ஒத்துக் கொள்ளக் கூடிய ஒன்று.மேலும் நண்பர்களாக பிரபா ,சுந்தரேசன் என்னும் கதாபாத்திரங்களில் நடித்திருக்க கூடிய நடிகர்களும் வெண்பா, பூரணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அந்தந்த கதாபாத்திரங்களுக்குரிய தன்மைக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்.

பல கோணங்களில் பலரது பார்வையில் நகரும் காட்சிகளை நேர்த்தியான முறையில் தொகுத்து கதை விறுவிறுப்பாக நகரும் வண்ணம் படத்தொகுப்பு பட தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் ஏ.இந்த தொடருக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி. மண் மணக்க படம் முழுவதும் பயணித்திருக்கும் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் .குறிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி காட்சிகளை நேர்த்தியான கோணங்கள் மூலம் படமாக்கி உள்ளார்.விறுவிறுப்பான திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் நிறைந்த தொடரின் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ப சிறப்பான பின்பலத்தை கொடுத்திருப்பதில் இசையமைப்பாளர் சைமன் .கே யின் பங்களிப்பு மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது.

[முதல் தொடரைப் போலவே இந்த இரண்டாம் பாகத் தொடரிலும் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளை சிறப்பாக அமைத்து, தொடரில் அடுத்து என்ன நடக்கும்? என்னும் ஆர்வத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ், தொடரின் அனைத்து பாகங்களையும் ஒருசேர பார்த்து முடித்து விட வேண்டும் என்ற ஆர்வம் தொடர் முழுவதும் ரசிகர்களுக்கு ஏற்படும் வண்ணம் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு மர்ம முடிச்சினை தொடுத்து அதனை அடுத்த அத்தியாயத்தில் அவிழ்த்து பின்பு மீண்டும் ஒரு முடிச்சினை தொடுத்து இப்படியாக தொடர் முழுவதும் விறுவிறுப்பை ஏற்றுக் கொண்டே செல்கிறார் இயக்குனர்.

தன் நண்பர்களுடன் மாடு வாங்க செல்லும் மணி அவர்களிடம் மாடு எப்படி வாங்க வேண்டும் எந்தனை வகையான சுளிகள் மாட்டிற்கு இருக்கும் என்று கூறும் வசனங்கள் கதைக்களத்திற்காக நிறைய பின்புல தகவல்களை திரட்டி இருப்பதை பார்வையாளர்கல் உணர முடியும் . மேலும் பொய்ங்கிறது காட்டு செடி மாதிரி ,அது குப்பை மாதிரி வளர்ந்து கிட்டே போகும் ….. ஆனா உண்மை மண்ணுக்குள்ள போட்ட வைரம் மாதிரி அதை தோண்டிதான் எடுக்கணும் போன்ற ஆழமான வசனங்களும் பாராட்டக்கூடியது.

தொடர் முழுவதும் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த வதந்தி- சீசன் 2 ,நல்லதொரு க்ரைம் நாவலை திரை மொழியில் காட்சி பதிவாக பார்த்த அனுபவத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.

Spread the love