எளிய மனிதர்களின் வாழ்வியலில் சமூக காரணிகளால் எதிர்பாராமல் நேரிடும் பிரச்சினைகளை பதிவு செய்யும் படம் இந்த மனிதன் தெய்வமாகலாம்.

ஒரு மலை கிராமத்தில் வாழக்கூடிய செல்வராகவனுக்கும் குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது, முதலில் நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்வராகவன் ஒரு உணவகத்தை ஆரம்பிக்கிறார் . ஊரே மெச்சும் அளவிற்கு ஒற்றுமையாக அன்புடனும், பாசத்துடனும் செல்வராகவன், குஷி ரவி தம்பதியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் திடீரென குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார். தன் மனைவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் செல்வராசுவன் அதன்பின் என்ன செய்தார்? அதன் பிறகு அவர் எப்படி அங்கு உள்ள மக்களுக்கு தெய்வமாகிறார் ?என்பதே மனிதன் தெய்வமாகலாம் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் யதார்த்தமான கிராமத்து மனிதரின் உணர்வுகளை சித்தரிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். அவரது மனைவியாக நடித்துள்ள குஷி ரவி இது அவருக்கு அறிமுகப்படம் என்பது தெரியாத அளவிற்கு கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்துள்ளார் நடிகை கௌசல்யா. இவர் இந்த படத்தில் செல்வராகவனின் சகோதரியாக நடித் த்திருக்கிறார், அவரும் அவரது கணவராக நடித்துள்ள ஆர். எஸ் .சதீஷும் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். மேலும் மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் ந ன்கு நடித்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் தன்னுடைய முதல் படத்திலேயே, கதாபாத்திரங்களின் உணர்வுகளை சித்தரிக்க கூடிய இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். தன்னுடைய பின்னணி இசையின் மூலமாகவும் அவர் காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஒருபுறம் நகரங்களில் அதிநவீன வளர்ச்சி ஏற்பட்டு கொண்டிருந்தாலும், இன்னமும் அடிப்படை சாலை வசதிகள் கூட இல்லாத கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த பகுதிகளில் வாழும் மனிதர்களின் வாழ்வியலும்,, அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளையும் அதனூடே கந்துவட்டிக் கொடுமைகளையும் எப்படி நேர்கொண்டு வாழ்கிறார்கள் என்பதை , சரியான நட்சத்திரத்தேர்வுடன் நிறைவான படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் டென்னிஸ் ம ஞ்சுநாத்.
யதார்த்தமான கிராமிய வாழ்வியலின் சூழலை ரவிவர்மாவின் ஒளிப்பதிவு நேர்த்தியான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்புகள் மூலமாக கதை நிகழும் சூழலை நன்கு பதிவு செய்துள்ளது.
சமூக கருத்துக்களுடன் கூடிய கதையை கதைக்களமாக எடுத்துக்கொண்டு படத்தை உருவாக்கி இருந்தாலும் அது திரைக்கதையாக பயணிக்கும் பொழுது இன்னமும் சற்று விறுவிறுப்பை கூட்டியிருந்தால் அது முழு நீள படத்திற்கும் இன்னமும் பலம் சேர்த்திருக்கும் .
மொத்தத்தில் இந்த மனிதன் தெய்வமாகலாம், ஒரு சராசரி குடும்பத்தின் வாழ் சூழலை கண் முன்னே நிறுத்தும் திரைப்பதிவு.
