எதிர்காலத்தில் நடைபெறும் கதையில், ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் சூழலை அழகிய திரைமொழியில் சொல்லுகிறது இந்த LIK

2040 ஆம் ஆண்டில் லைவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற செயலியை எஸ் ஜே சூர்யா உருவாக்குகிறார் .இந்த செயலிக்கு காதலர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு, அதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தொலைபேசியினால் தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை தரக்கூடிய பசுமை உலகம் என்னும் அமைப்பினை நடத்தி வருகிறார் சீமான் .தந்தை வழி நடக்கும் மகனான பிரதீப் ரங்கநாதன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் வாழும் நபராக உள்ளார். மறுபுறம் சமூக ஊடகப் பக்கங்களில் ஏராளமான பின் தொடர்பாளர்களை பெறுவதையே தன் லட்சியமாக கொண்டிருக்கிறார் கிரித்தி ஷெட்டி. இப்படிப்பட்ட நிலையில் கிரித்தி ஷெட்டியை பார்க்கும் பிரதீப் அவர் மீது காதல் கொள்கிறார் .இதற்காக தன் தந்தைக்கு தெரியாமல் போன் வாங்கும் பிரதீப் LIK செயலி வழியாக கிரித்தி ஷெட்டியை தொடர்பு கொள்கிறார். அதன்பின் இருவருக்கும் காதல் மலர்கிறது ,ஆனால் அதே செயலியின் மாறான தகவலினால் அவர்களது காதலில் பிரிவு ஏற்படுகிறது . தங்களுடைய காதல் முடிவுக்கு காரணமான அந்த செயலியை பிரதீப் என்ன செய்தார்? அதற்கு செயலியின் உரிமையாளரான எஸ் ஜே சூர்யா வின் எதிர்வினை என்ன ?தன்னுடைய காதலில் பிரதீப் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதே LIK படத்தின் மீதி கதை.

இக்கால ,எதிர்கால இளைஞர்களை பிரதிபலிக்கும் வைப் வஸ்ஸி என்னும் கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன் வழக்கமான தன் பாணியில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனத்திலும், நடிப்பிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்து நடித்துள்ள பிரதீப் இந்த படத்தின் மூலம் இன்னமும் இளைஞர்களின் மனதிற்கு நெருக்கமாக மாறி உள்ளார்.
கதையின் நாயகியாக நடித்திருக்க கூடிய கிரித்தி ஷெட்டி தன்னுடைய தோற்றத்தாலும் ,நடிப்பாலும் தான் ஏற்று உள்ள கதாபாத்திரத்திற்கு நிறைவு சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தான் அடைந்த ஏமாற்றத்தின் பொருட்டு பிற காதலர்களுக்காக செயலியை உருவாக்கும் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக அன்புக்கடல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சீமானும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்யும் கதாபாத்திரத்தில் தன் அனுபவ நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் மாளவிகா, ஆனந்தராஜ், யோகி பாபு,கௌரி கிஷன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சமகாலத்தில் இருந்து ,எதிர்காலத்தில் நம் உலகம் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தினால் அடைய போகும் முன்னேற்றங்களை தன்னுடைய சிறப்பான ஒளிப்பதிவு மூலம் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் .அனிருத்தின் பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசிக்கும்படி அமைந்து, திரையரங்குகளில் இளைஞர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை தரக்கூடிய வகையில் உள்ளது.பின்னணி இசையை பொருத்தமட்டில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை சித்தரிக்கும் வகையில் காட்சிகளோடும் ,கதாபாத்திரங்களோடும் நன்கு பயணித்துள்ளது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் பல விதங்களில் பல முன்னேற்றங்களை கண்டு புதியதோர் உலகமாக ஒளிரப் போகும் பிற்கால வாழ்வியலை ,அந்தக் காலத்தில் மலரும் ஒரு காதல், அந்தக் காதலுக்கு இடையூறாக அமையும் ஒரு செயலி ,அதனால் ஏற்படும் பிரச்சனைகள், இவற்றை மையப்படுத்தி ஒரு கதை களத்தை அமைத்து, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து, கூடவே வலுவான தொழில்நுட்பக் குழுவையும் இணைத்துக் கொண்டு, நிறைவான படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
மொத்தத்தில் இந்த LIK ,காலங்கள் மாறினாலும், கருவிகள் மாறினாலும் காதல் என்றுமே நிலைத்து நிற்கும் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறது.
