Tuesday, January 21

காரி -விமர்சனம்

மக்களின் கலாச்சாரம்,வாழ்வியல் போன்றவ ற்றோடு ஒன்றிவிட்ட .ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள திரைப்படம் காரி. கிராமம் ஒன்றை ,அரசாங்கம் குப்பைகழிவுகள் கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு குரல் தெரிவிக்கின்றனர்.சென்னையில் சசிகுமார் குதிரைப்பந்தய ஜாக்கியாகவும் அவரது தந்தை ஆடுகளம் நரேன் குதிரைப்பந்தய பயிற்சியாளராகவும் உள்ளார்கள்,விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடும் கார்ப்பரேட் வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி. இந்த மூன்று களங்களும் ஓரிடத்தில் சேரும் மையபுள்ளியில் பயணிக்கும் கதையில் நாயகன் சசிகுமார் எப்படி அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வந்தார்? கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாய் சசிகுமார், அவருக்கென்றே பொருத்தமாய் அமைந்த கதாபாத்திரம்என்பதால் வழக்கம்போல் இந்த படத்திலும் எளிதாக ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது அவரும் அதை நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

காளை வளர்க்கும் பெண்ணாக பார்வதி அருண் நடித்துள்ளார் அறிமுக நாயகி ஆனாலும் தனது இயல்பான நடிப்பினால் கவனம் பெறுகிறார் ஆடுகளம் நரேன்,பிரேம் ,பாலாஜி சக்திவேல்,சிவாஜி ராம்குமார்,நாகி நீடு, அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களின் பாத்திர படைப்புகள் கதையினூடே நன்கு பயணிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும் , எடிட்டர் சிவநந்தீஸ்வரனின் படத்தொகுப்பும் இயக்குனருக்குபக்கபலமாய் அமைந்துள்ளன, இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உறுதுணையாக உள்ளது, பாடல்களில் குறிப்பாக, சாஞ்சுக்கவா என்ற பாடல் , சித்ஸ்ரீராமின் குரலில், லலித்ஆனந்த் வரிகளில் இனிமையாய் உள்ளது .

ஜல்லிக்கட்டை ஒரு முக்கிய அம்சமாக வைத்ததோடு , மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் கதைக்களத்தில் கொண்டு அறிமுக இயக்குநர் ஹேமந்த் சிறப்பாக காரி படத்தை இயக்கியுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் ,காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லா ரசிகர்களையும் கவரும் அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக உள்ளது.

கருத்தும், பொழுதுபோக்கும் நிறைத்த காரி ,திரைபந்தயத்தில் நிச்சயம் வெற்றி ஓட்டம் காணும்.

Spread the love