Monday, September 21

‘என்ன விலை’ – திரை விமர்சனம்

வாழ்க்கையில் சிலருக்கு நேர்மை ஒரு கொள்கை… சிலருக்கு அதுவே வாழ்க்கை. ஆனால், அந்த நேர்மையே அவர்களை சிக்கலில் தள்ளிவிட்டால்? ராமேஸ்வரம் கடலில் சில்லறைக் காசுகளை சேகரித்து குடும்பத்தை காப்பாற்றும் ஒரு எளிய மனிதனின் கையில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருள், அவரது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு அவர் சந்திக்கும் போராட்டத்தையும், நீதிக்கான பயணத்தையும் உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்தான் ‘என்ன விலை’.

ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் வீசும் சில்லறைக் காசுகளை கடலுக்குள் இறங்கி சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார் தவசி (கருணாஸ்). பெரிய கனவுகளோ, வசதியான வாழ்க்கையோ இல்லாத அவர், தன் உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே நம்பி வாழும் எளிய மனிதர்.ஒருநாள் வழக்கம்போல் கடலுக்குள் இறங்கும் தவசியின் கைகளில் எதிர்பாராத விதமாக விலை உயர்ந்த பொருள் ஒன்று கிடைக்கிறது. அதை மறைத்துவைத்துக் கொள்ளாமல் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல அந்த நேர்மை அவருக்கு பாராட்டை பெற்றுத் தரவில்லை. மாறாக, செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாக நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது.ஒரு சாதாரண மனிதன், தனக்கு எதிராக மாறிய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறான்? அவனது குடும்பம் இந்தப் பிரச்சினையால் எப்படிப் பாதிக்கப்படுகிறது? அவருக்காக களத்தில் இறங்கும் வழக்கறிஞர் எப்படி சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்? என்பதுதான் படத்தின் மையக் கதை.

தவசி கதாபாத்திரத்தில் கருணாஸ் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். சாதாரண மனிதனின் பயம், கோபம், இயலாமை, நம்பிக்கை என ஒவ்வொரு உணர்வையும் தனது உடல்மொழி மற்றும் முகபாவனைகள் வழியாக நன்கு வெளிப்படுத்தியுள்ளார் .வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன், தவசிக்கு சட்டரீதியாக நீதி பெற்றுத்தர போராடும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார்.

கருணாஸின் மனைவியாக நடித்துள்ள விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், சாஷா சிவகுமார் போன்றவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நிழல்கள் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் படத்தில் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை படத்திற்கு வழங்கி உள்ளார்கள் .

ஒளிப்பதிவாளர் அல்பி ஆண்டனி, கதாபாத்திரங்கள் வாழும் சூழல், ராமேஸ்வரத்தின் கடற்கரைப் பகுதி, அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை என அனைத்தையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.அவரது கேமரா கோணங்களும் காட்சிகளின் ஒளி அமைப்பும் படத்தின் யதார்த்த உணர்வை அதிகரிக்கின்றன. இசைஅமைப்பாளர் சாம் சி.எஸ், படத்தில் நகரும் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை தரக்கூடிய பின்னணி இசையினை படம் முழுவதும் நன்கு அமைத்துள்ளார் .

எளிமையான மனிதர்களின் வாழ்க்கை ,அவர்களது வாழ்வியல் போராட்டங்கள் ,அவர்களுக்கு என்றென்றுள்ள சுயமரியாதை மற்றும் நம்பிக்கை இவற்றையெல்லாம் பேசும் வகையில் உருவாக்கப்பட்ட கதைக்கு, பொருத்தமான நடிகர்களை கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்து நடிக்க வைத்து, நிறைவான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சஜீவ் பழூர். ஒரு பெரிய குற்றச் சம்பவத்தை மட்டும் மையமாக வைத்து படத்தை நகர்த்தாமல், அந்தச் சம்பவத்துக்குள் சிக்கிக் கொள்ளும் எளிய மனிதனின் வாழ்க்கையை சிறப்பாக முன்னிலைப்படுத்தியுள்ளார்

மொத்தத்தில் ..“கடலில் கிடைத்தது ஒரு பொருள்… ஆனால், அதற்காக கதையின் நாயகன் கொடுக்க வேண்டிய விலை அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை. அந்த ‘விலை’யை உணர்வுப்பூர்வமாக கேட்க வைக்கும் திரைப்படம் – ‘என்ன விலை’.”

Spread the love