Saturday, September 19

’பீப்’ (Beep) -திரைப்பட விமர்சனம்

ஒரு புகைப்படத்தை பார்த்தால் அதில் இருக்கும் மனிதர்களை மட்டும் பார்க்க முடியாது… அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தால்? அப்படியொரு விசித்திரமான சக்தி கொண்ட ஒருவனிடம், மர்மமான ஒரு கொலை வழக்கு சிக்குகிறது. இறந்தவர் யார் என்பதைவிட… அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதே பெரிய கேள்வியாக மாற, புகைப்படங்களுக்குள் பயணித்து உண்மையை தேடுகிறார் நாயகன். அந்த மர்மப் பயணம்தான் ‘பீப்’.

ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் அதற்குள் பயணித்து, அந்தக் காட்சியின் பின்னணியில் நடந்த சம்பவங்களை அறிந்துகொள்ளும் திறன் கொண்டவர் ராகவ். இந்த வித்தியாசமான சக்தியுடன் வாழும் அவருக்கு யாமினி லக்‌ஷ்மணன் அறிமுகமாகிறார்.பாலியல் தொழிலாளியான யாமினிக்கும், ராகவுக்கும் நட்பு ஏற்படுகிறது ,ஆனால், எதிர்பாராத நேரத்தில் யாமினி அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழக்கிறார்.அது தற்கொலை அல்ல, கொலை என்பது தெரியவருகிறது. ஆனால் கொலைக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இங்குதான் ராகவின் வித்தியாசமான சக்தி கதைக்குள் முக்கியத்துவம் பெறுகிறது.யாமினியின் மரணத்துக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? யாமினியை கொன்றது யார்? கொலை நடந்த தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது? புகைப்படங்கள் ராகவுக்கு கொலையாளியை நெருங்க உதவுகிறதா? என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் பயணம்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடித்துள்ள ராகவ், கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில், தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான முறையில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். யாமினி லக்‌ஷ்மணன், சுனைனா கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் தனது தோற்றத்தினாலும் நடிப்பினாலும் கவர்கிறார் .மேலும் எல்.சண்முக சுந்தரம், அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, நித்திஷ், பாலாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நன்கு நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, பிரதீப் பத்ம குமாரின் ஒளிப்பதிவு கிரைம் த்ரில்லருக்கான உணர்வுகளை நன்கு காட்சிபடித்தியுள்ளது . பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை, படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் தருணங்களுக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது. அபிஷேக் மற்றும் விக்னேஷின் படத்தொகுப்பு, கதையின் மர்மத்தை தக்கவைக்கும் வகையில் காட்சிகளை தொகுத்துள்ளது.

இயக்குநர் எல்.சண்முக சுந்தரம், வழக்கமான கிரைம் த்ரில்லர் கதைக்குள் ஒரு வித்தியாசமான சூப்பர் பவர் கான்செப்ட்டை இணைத்திருப்பது படத்தின் முக்கியமான ஈர்ப்பாக உள்ளது, அதே நேரத்தில், சூப்பர் பவர் என்ற அம்சத்தை வெறும் பிரம்மிப்புக்காக பயன்படுத்தாமல், கொலை விசாரணையின் ஒரு கருவியாக மாற்றியிருப்பது கதைக்கு தனித்துவத்தை கொடுக்கிறது.

மொத்தத்தில் ….. கிரைம், சஸ்பென்ஸ், சூப்பர் பவர் என மூன்றையும் இணைத்து, பொழுதுபோக்கு பாணியில் சொல்லும் இந்தப் படம், மர்மத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் .

Spread the love