Sunday, September 20

சண்டக்காரி – திரை விமர்சனம்

லண்டன் டு தஞ்சாவூர்… காதலும் காமெடியும் கலந்த ‘சண்டக்காரி’

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருப்பவர் ஸ்ரேயா. அவருக்கு உதவியாளராக வேலைக்கு சேர்கிறார் விமல். பொறியியல் பட்டதாரியான விமல், தான் உருவாக்கிய செயலியை நிறுவனத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். ஆனால், எப்போதும் கோபத்துடனும் அதிகாரத் தோரணையுடனும் இருக்கும் ஸ்ரேயாவிடம் வேலை செய்வது அவருக்கு எளிதானதாக இல்லை.இதற்கிடையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா பிரச்சினை அவரது தொழில் வாழ்க்கைக்கே தடையாகிறது. எதிர்பார்க்கும் சி.இ.ஓ பதவியை இழக்கும் சூழல் உருவாக, நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொண்டதாக நாடகம் நடத்தினால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று திட்டமிடுகிறார்.

விமலும் இந்தத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால், அதற்குப் பின்னால் அவருக்கும் ஒரு தனி கணக்கு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை ஸ்ரேயா சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த திருமண நாடகத்தில் இணைகிறார். அதன் பிறகு லண்டனில் தொடங்கிய இந்த ‘கணக்கு’, தமிழக கிராமத்திற்கு வந்ததும் வேறு விதமாக மாறுகிறது.

ஸ்ரேயாவின் திட்டம் வெற்றி பெற்றதா? விமல் போட்ட கணக்கு என்ன ஆனது? இந்த திருமண நாடகத்துக்குள் உண்மையான காதல் உருவானதா? என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்துள்ள விமல், காதல், காமெடி, மோதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கதாபாத்திரத்தில் தனது வழக்கமான பாணியையும் கலந்து நன்கு நடித்துள்ளார்

கதையின் நாயகியாக நடித்துள்ள ஸ்ரேயா ஆரம்பத்தில் கோபமும் அதிகாரத் தன்மையும் கொண்ட பெண்ணாக நன்கு நடித்துள்ளார் . கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப வெளிப்பட்டுள்ள அவரது நடிப்பு சிறப்பாக உளள்து .மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ,சத்யன், ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில்,கிரேன் மனோகர் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் காட்சிகளுக்கும் தமிழக கிராமத்து காட்சிகளுக்கும் தேவையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் வண்ணம் காட்சிகளை ரசிக்கும்படி பதிவு செய்திருப்பதுடன், பாடல் காட்சிகளையும் வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.அம்ரிஷின் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பார்க்கவும் கேட்கவும் நன்றாக உள்ளன .பின்னணி இசையும் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது.தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு கதையை நேர்த்தியாக நகர்த்துகிறது.

அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கொண்ட கதையை சுவாரஸ்யமான முறையில் காட்சிகளாக்கி படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.மாதேஷ்.

மொத்தத்தில் …. காதல், காமெடி, குடும்பம், பழிவாங்கும் திட்டம் என ஒரு முழுமையான கமர்ஷியல் படத்திற்கான எல்லா அம்சங்களும் கொண்டுள்ள இந்த ‘சண்டக்காரி’ அனைவரையும் கவர்வாள் .

Spread the love