Saturday, September 26

‘டோரதி’ – திரை விமர்சனம்

உயிருக்கு உயிரான நண்பன்… அவனையே கொல்ல வேண்டிய சூழ்நிலை! இந்த எதிர்பாராத திருப்பத்துடன் பயணிக்கிறது ‘டோரதி’.

மதுரையின் 1990-களின் பின்னணியில், அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் இருந்த அன்பான நட்பும் ,ஆழமான பாசமும் கலந்து கதையாக சொல்லுகிறது இந்த ‘டோரதி’.

சிறு வயது முதலே உயிருக்கு உயிராக பழகும் கார்த்திக் (ரிஷிகாந்த்), சுப்பு (சனந்த்) இருவரும் ஒன்றாகவே வளர்கிறார்கள். நட்பின் பெயரில் அடிதடி, மோதல் என ஆவேசமான இளைஞர்களாக மாறும் இவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு சம்பவம் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துகிறது.நண்பனிடமிருந்து பிரிந்து வாழும் கார்த்திக், கடந்த கால நினைவுகளுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அப்போது, அவனுடைய முன்னாள் நண்பன் சுப்புவையே கொலை செய்யச் சொல்லி சுப்புவின் தந்தையே கார்த்திக்கை அணுகுகிறார்.நண்பனை கொல்லச் சொன்னால் கார்த்திக் என்ன செய்வார்?சுப்புவின் குடும்பமே அவனை கொல்ல நினைப்பதன் பின்னணி என்ன?பல ஆண்டுகளாக பிரிந்திருந்த இரு நண்பர்களின் வாழ்க்கை மீண்டும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைகிறது?இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மீதி கதையாக சொல்லும் படம்தான் ‘டோரதி’.

கார்த்திக் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கக்கூடிய ரிஷிகாந்த், காதல், நட்பு, பாசம் என அனைத்து மன உணர்வுகளையும் எளிதாகவும் இயல்பாகவும் வெளிக்காட்டக்கூடிய ஒரு இளைஞனாக நன்கு தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.குறிப்பாக, நண்பனின் மீதான பாசத்திற்கும், அவனை எதிர்த்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தருணங்களில் கதாபாத்திரத்தின் உணர்வுகளை சரியாக கடத்தியிருக்கிறார்.அவருக்கு இணையாக சுப்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கக்கூடிய சனத்தும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற உணர்வுகளை படம் முழுவதும் காட்சிகளின் வாயிலாக நன்கு பதிவு செய்திருக்கிறார்.கதையின் போக்கில் சுப்புவின் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரது நடிப்பிலும் தேவையான மாற்றங்களை காண முடிகிறது.

டோரதி என்னும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.திரையில் இவர் வரும் காட்சிகள் குறைவாகவே அமைந்திருந்தாலும், அந்தக் குறைவான நேரத்திலும் தன் கதாபாத்திரத்தின் வழியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.மேலும் முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சப்ரமணியன், சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு குறைவில்லாத நடிப்பை நிறைவாகவே கொடுத்திருக்கிறார்கள்.

திரையில் மலரும் காட்சிகளுக்கு தன்னுடைய நேர்த்தியான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்புகள் மூலம் அழகான காட்சி பதிவுகளை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ். திரு.1990-களின் மதுரை பின்னணியை அதன் இயல்போடு காட்சிப்படுத்துவதில் ஒளிப்பதிவின் பங்களிப்பு கவனிக்க வைக்கிறது.இளையராஜா அவர்களின் இசையில் பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி உள்ளன.குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ‘முத்து மணி’, ‘கல்யாண விருந்து’ போன்ற பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளன.பின்னணி இசையைப் பொறுத்தவரையில், காட்சிக்கு ஏற்ற வகையில் ராஜா தன்னுடைய பாணியிலான கை வண்ணத்தை இசை வடிவில் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் எடுத்துக்கொண்ட கதைக்கு பொருத்தமான திரைக்கதை காட்சிகளை தொய்வில்லாமல் அமைத்து, உடன் வலுவான தொழில்நுட்ப கூட்டணியோடு படமாக்கியுள்ளார்.கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பதோடு, அவர்களின் மன உணர்வுகளை சிறப்பாக சித்தரிக்கும் வகையில் திரைமொழியில் அதனை காட்சிப்படுத்தியுள்ளார். அதிரடி சம்பவங்களுடன் பயணிக்கும் கதைக்குள் நட்பு, பாசம், குடும்ப உறவு போன்ற மனித உணர்வுகளையும் கலந்து கொடுத்திருப்பது படத்தின் முக்கிய அம்சமாக அமைகிறது.

மொத்தத்தில் , மண் வாசனையோடு நட்பையும், பகையையும், பாசத்தையும் கலந்து சொல்லும் ‘டோரதி’ – ஆக்ஷனுக்குள் மனித உணர்வுகளை தேடும் ஒரு திரைப்பயணம்.

Spread the love