இயற்கையை பாதுகாக்க போராடும் ஒரு மனிதனின் குரலும், அந்தக் குரலை காப்பாற்ற நிற்கும் ஒரு காவலரின் கடமையும் இணையும் கதையே ‘லெனின் பாண்டியன்’.

ஆற்றில் இருந்து மணல் அள்ளப்படுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக கடந்து செல்பவர்களுக்கு மத்தியில், அதற்கு எதிராக புகார் கொடுக்கிறார் விவசாயி கங்கை அமரன். அவர் அளிக்கும் புகார், சாதாரண புகாராக இல்லாமல் ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கான தொடக்கமாக மாறுகிறது.அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தும் பெண் அதிகாரி படுகொலை செய்யப்படுகிறார் அதன் பின்னும் கங்கை அமரன் பின்வாங்கமல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறார். அவரது போராட்டத்தின் விளைவாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அதோடு, அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்டு, ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பும் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.அந்தப் பாதுகாப்புப் பொறுப்பு கிடைப்பது காவலர் தர்ஷனுக்கு.கங்கை அமரனுக்கு பாதுகாப்பு தருவதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாத தர்ஷனுக்கு பின்னர் தான் அதற்கான முக்கியத்துவம் புரிந்து அவரை பாதுகாக்கும் பணியில் கவனம் கொள்கிறார்,.இதன் பிறகு நடந்தது என்ன ? கங்கை அமரனின் நோக்கம் நிறைவேறியதா ? மணல் கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? அவரை உயிருடன் காப்பாற்ற தர்ஷனால் முடிந்ததா? என்பது ‘லெனின் பாண்டியன்’ படத்தின்மீதி கதை .
இசையமைப்பாளர் பாடலாசிரியர்,, இயக்குனர், பின்னணி பாடகர் என பல துறைகளில் தமிழ் சினிமாவில் தன் அனுபவ முத்திரையினை பதித்திருக்கும் கங்கை அமரன் அவர்கள், ஏற்கனவே சில படங்களில் அவராகவே தோன்றியிருந்தாலும், ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடிகராக களம் இறங்கி இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் மூத்த குடிமகனாக மிகவும் இயல்பாக தன்னுடைய நடிப்பினை இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ரோஜா சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பினை புதிய பரிமாணத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் தர்ஷன் கணேசன் தனக்கு கொடுத்திருக்கக் கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்று வகையில் தன்னுடைய தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் .மேலும் ஜார்ஜ் மரியான் ,போஸ் வெங்கட், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் போன்ற ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் ,அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நிறைவான நடிப்பை படம் முழுவதும் வழங்கி உள்ளார்கள். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வாழ் சூழ்நிலையையும், தன்னுடைய கேமரா வாயிலாக சிறப்பான வகையில் திரையில் காட்சி காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே.
இது போன்ற கதை சூழலுக்கும் கதை மாந்தர்கள் கொண்ட கதை களத்திற்கும் இளையராஜாவின் இசை மிகப் பெரிய ஒரு பின்புலத்தை நிச்சயம் தரும், அந்த வகையில் இந்த படத்தில் அவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் ,காட்சியளிப்புகளுக்கும் மிகப்பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது என்று சொல்லலாம் .
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் அவற்றை அபகரிப்பதை தடுக்க வேண்டும் என்ற சமூக கருத்துடன் கொண்ட கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதில் பயணிக்க கூடிய கதை மாந்தர்களை யதார்த்தமான முறையில் உருவாக்கி, அவற்றை காட்சிப்படுத்தி படமாக்கி உள்ளார் இயக்குனர் டி டி. பாலச்சந்திரன்.
சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து, சட்டப் போராட்டத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் இணைத்து சொல்ல முயற்சிக்கும் படமாக ‘லெனின் பாண்டியன்’ அமைந்திருக்கிறது.
