Friday, November 27

‘டெலிவரி பாய்’ – திரைப்பட விமர்சனம்

தாய்ப்பாசம், காதல், குற்றப் பின்னணி, அதிரடி எனப் பல அம்சங்களுடன் பரபரப்பாகப் பயணிக்கிறது ‘டெலிவரி பாய்’.

கோவையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞனான சிவா (லியோ சிவகுமார்), ஒருபுறம் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டே மறுபுறம் காவல்துறையில் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கப்படும் அவரது தாய்க்கு அவசர சிகிச்சை அளிக்கப் பணம் தேவைப்படுகிறது. வேறு வழியின்றி பணத்தினை திருடும் சிவா, அந்தப் பணத்தின் மூலம் தாய்க்குச் சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றுகிறார்.தாய் குணமடைந்ததும், தான் செய்த தவறைச் சரிசெய்யும் நோக்கில் திருடிய பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். ஆனால், அந்தப் பணத்தை இழந்த நபர் அதற்குள் வேறொரு பெரிய சிக்கலில் சிக்கியிருக்கிறார். அவருக்கு உதவ முன்வரும் சிவாவும், கொலை செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு ஆபத்தான கும்பலிடம் க்கிக்கொள்கிறார்.அவர்களிடமிருந்து சிவா எப்படித் தப்பிக்கிறார்? தான் உதவ நினைத்த நபரைக் அவரால் காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார், சிவா கதாபாத்திரத்தின் இயல்பையும் அதன் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். உணவு டெலிவரி செய்யும் இளைஞராகவும், தாயின் மீது பாசம் கொண்ட மகனாகவும், காதலியின் மீது நேசம் காட்டும் காதலனாகவும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

அவரது தாயாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். காதலியாக வரும் பிரிகிடா சகாவுக்கு முதல் பகுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த காட்சிகளில் தனக்கான திரை இருப்பை அவர் நன்கு பதிவு செய்துள்ளார் மேலும் துஷ்வந்த், போஸ் வெங்கட், காளி வெங்கட், ஜென்சன் திவாகர், உதயாதீப் உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்பை பலம் முழுமைக்கும் வழங்கியிருக்கிறார்கள்.

அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு, படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, அதிரடி காட்சிகளைப் பரபரப்பு குறையாமல் படமாக்கியிருப்பது கவனிக்க வைக்கிறது.இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன. அதேபோல், கதையின் உணர்வுகளுக்கும் அதிரடியான தருணங்களுக்கும் ஏற்ற பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. ஆர். வசந்தகுமாரின் படத்தொகுப்பு, இயக்குநர் அமைத்த திரைக்கதையின் ஓட்டத்தைச் சீராகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

தாய்ப்பாசத்தையும், ஒரு சாதாரண இளைஞன் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலையும் மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நானி. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் குற்ற உலகத்தின் ஆபத்துகளையும் இணைத்து, காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் எனப் பல அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்குப் படமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

தாய்ப்பாசம், காதல், குற்றப் பின்னணி, அதிரடி என வணிக சினிமாவுக்கான அம்சங்களை ஒன்றிணைத்து ரசிகர்களைக் கவரும் முயற்சியாக அமைந்திருக்கிறது ‘டெலிவரி பாய்’.

Spread the love