அடுத்தடுத்து அரங்கேறும் மர்மக் கொலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன? மர்மம், கொலை, விசாரணை என அடுத்தடுத்த திருப்பங்களுடன் கிரைம் திரில்லர் களத்தில் பயணிக்கிறது ‘ஜெடூசி’.

நண்பருடன் இணைந்து பணியாற்றி வருகிறார் கதையின் நாயகன் சக்தி. அந்தப் பகுதியில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அடுத்தடுத்து கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்தத் தொடர் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார், கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய காவல்துறை தீவிர விசாரணையில் இறங்குகிறது.விசாரணையின் முடிவில், இந்தக் கொலைகளைச் செய்தது சக்திதான் என்பது தெரியவருகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது, கதை கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கிறது. அங்கு சக்தியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், தொடர் கொலைகளுக்கான பின்னணியும் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன? சக்தியின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? இறுதியில் இந்த வழக்கின் முடிவு எப்படியிருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சக்தி என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதர் , பல்வேறு உணர்வுகளையும் வாழ்க்கைச் சூழல்களையும் எதிர்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதையின் முக்கியமான திருப்பங்களிலும், உணர்வுபூர்வமான தருணங்களிலும் மிகையில்லாத தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

காவேரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வேதா, தனது தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் தன ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பினை வழங்கியுள்ளார் , அவருடன் பிளாக் பாண்டி, வெங்கடேஷ், பாவா செல்லதுரை, அருவி மதன் ,ஜெயந்திமாலா உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை குறைவின்றி கொடுத்துள்ளார்கள் .

விக்னேஸ்வரன் இசையமைப்பில் பாடல்கள் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, மர்மம் நிறைந்த காட்சிகளின் பரபரப்பையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வலுப்படுத்தும் பின்னணி இசை படத்திற்கு தேவையான சூழலை உருவாக்குகிறது.
ஒளிப்பதிவாளர் நாகஅர்ஜுன், மலைப்பகுதிகளின் இயற்கை அழகையும் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் இயல்பான காட்சிகளாகப் பதிவு செய்திருக்கிறார். கதையின் தன்மைக்கு ஏற்ற காட்சியமைப்பும் ஒளிப்பதிவின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
கிரைம் திரில்லர் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் நடராஜ் ஏகாம்பரம், மர்மக் கொலைகளையும் அவற்றின் பின்னணியில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்ததுடன், கதையின் தேவைக்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார். தொடர் கொலைகளுக்கான காரணத்தைப் படிப்படியாக வெளிப்படுத்தும் திரைக்கதை அமைப்பு படத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
**கொலைகளுக்குப் பின்னால் ஒரு மர்மம்… அந்த மர்மத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை!** கடந்த காலச் சம்பவங்களையும் குற்றங்களின் பின்னணியையும் இணைத்து, கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைக்களத்தை வழங்க முயற்சித்திருக்கிறது ‘ஜெடூசி’.
