Friday, October 2

‘பத்தா’ – திரை விமர்சனம்

ஒரு ஏரியாவையே தனது ரவுடித்தனத்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன்… அதே ஏரியாவில் வசிக்கும் ஒரு சிறுவனால் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? இந்த சுவாரஸ்யமான சூழலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பத்தா’.

தான் வசிக்கும் பகுதி முழுவதையும் தனது அச்சுறுத்தலால் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் பத்தா. அவரைப் பார்த்தாலே அந்தப் பகுதி மக்களுக்கு பயம். அதே பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவன் சபரிக்கும் பத்தா மீது மிகப்பெரிய பயம் இருக்கிறது.இந்நிலையில், எதிர்பாராத விதமாக சபரியால் பள்ளியின் கழிப்பறையில் பத்தா மாட்டிக்கொள்ளும் சூழல் உருவாகிறது. அதன் பின் பத்தாவின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுகிறது ? அதன்பிறகு என்ன நடந்தது ? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரவுடித்தனமும் ,முரட்டுத்தனமும் கலந்த இது போன்ற கதாபாத்திரங்கள் விஜய் சேதுபதிக்கு மிகவும் எளிதான ஒன்று , அந்த வகையில் இந்த பத்தா கதாபாத்திரத்தையும் தனது இயல்பான நடிப்பால் சிறப்பாக அவர்  கையாண்டிருக்கிறார். அவரது மனைவியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ், அளவான மற்றும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக சபரியாக நடித்துள்ள சிறுவன் சாய் பிருதிவிராஜின் யதார்த்தமான நடிப்பு அவரது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்துகிறது.மேலும் விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ள சகஸ்ரா ஸ்ரீ, அர்ஜுன் சிதம்பரம், ஹரிகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள்..

கதை நிகழும் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகளை ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கே. சிவகுமார்.சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருப்பதுடன், காட்சிகளின் உணர்வுக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.ஒரு ரவுடிக்கும், ஒரு பள்ளி சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத சூழலை மையமாக வைத்து, காட்சிக்கு காட்சி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக, ஒரு சிறிய சம்பவம் எப்படி பெரிய பிரச்னையாக மாறுகிறது என்பதை சுவாரஸ்யமான திரைமொழியில் பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ஒரு சிறிய சம்பவம், ஒரு ரவுடியின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை திரை மொழியில் படமாக பதிவு செய்துள்ள இந்த ‘பத்தா’. அனைத்து ரசிகர்களை நிச்சயம் கவரும்.

Spread the love