Friday, October 2

‘ஏழு கடல் ஏழு மலை’ – திரை விமர்சனம்

காலத்தைக் கடந்து நிற்கும் காதலும், நிகழ்கால மனிதனின் இயல்பான வாழ்க்கையும் ஒரே பயணத்தில் சந்தித்தால் என்ன நடக்கும்? அந்த வித்தியாசமான சந்திப்பை தனது தனித்துவமான திரைமொழியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ராம்.

பல நூற்றாண்டுகளாக தனது காதலியைத் தேடிக்கொண்டிருக்கும் நிவின் பாலி, தீபாவளி இரவில் ஒரு ரயிலின் கடைசி பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது கனவில், நீண்ட காலமாகத் தேடி வரும் காதலி தோன்றுகிறார்.அதே ரயிலில் மற்றொரு பயணியாக வருகிறார் சூரி. குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பல ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்துவிட்டு, சம்பாதித்த பணத்துடன் சொந்த ஊர் திரும்பும் அவர், ரயிலில் நிவின் பாலியை சந்திக்கிறார் , இவர்களின் பயணத்தில் இடம்பெறும் சிறிய எலியும் கதையின் ஓட்டத்தில் முக்கியமான பங்கைக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நிகழும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பால் தனக்கே உரிய பாணியில் சிறப்பாய் நடித்துள்ளார் நிவின் பாலி. மறுபுறம், எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதனின் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சூரி சிறப்பாக பொருந்துகிறார். அவரது இயல்பான உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கதையின் யதார்த்தத் தன்மைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.நிவின் பாலி தேடிக்கொண்டிருக்கும் காதலியாக வரும் அஞ்சலி, தனக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளில் அளவான நடிப்பை ,நிறைவாக பதிவு செய்திருக்கிறார்.

ராம் படங்களின் உணர்வுகளை இசையின் மூலம் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் யுவன் சங்கர் ராஜாவுடன் சந்தோஷ் தயாநிதியின் இசைக் கூட்டணி இணைந்திருக்கிறது. கதையின் உணர்வுகளுக்கும் திரையில் விரியும் காட்சிகளுக்கும் இசை நல்ல துணையாக அமைந்துள்ளது.

இசை காதுக்கு இதமாக இருந்தால், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ரயில் பயணம், இயற்கைக் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிப்படுத்திய விதம் படத்தின் உலகத்தை அழகாக உருவாக்குகிறது.

இயக்குநர் ராம் எப்போதும் கதையை மட்டும் சொல்லாமல், அதற்குள் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் தேடுபவர். ‘ஏழு கடல் ஏழு மலை’யிலும் காலம், காதல், உயிர், மனிதநேயம் என வெவ்வேறு தளங்களை ஒன்றுக்குள் ஒன்றாக இணைத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தேடப்படும் காதலும், சில மணி நேர ரயில் பயணத்தில் சந்திக்கும் மனிதநேயமும்… இவை இரண்டையும் இணைத்து ஒரு தனித்துவமான சினிமா உலகத்தை உருவாக்கியிருக்கிறார் ராம். கதை முடிந்த பிறகும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் மனதில் தொடர்ந்து பயணிப்பதே ‘ஏழு கடல் ஏழு மலை’யின் தனிச்சிறப்பு.

Spread the love