ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ,கதாநாயகனாக நானி, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி, வெளியாகியுள்ள திரைப்படம்தான் தசரா. பான் இந்திய திரைப்படமான இத்திரைப்படத்தின் கதையானது ,
நிலக்கரி சுரங்கம் சூழ்ந்த, வீர்லபள்ளி என்ற கிராமத்தில் தரணி(நானி)யும் சூரியும் (தீக்ஷித் ஷெட்டி) நண்பர்களாக உள்ளார்கள் ஆனால் இருவரும் அதே கிராமத்தில் இருக்கும் வெண்ணிலாவை (கீர்த்தி சுரேஷ்) காதலிக்கிறார்கள். வெண்ணிலாவின் மீது சூரிக்கு இருக்கும் காதலை அறியும் தரணி தன்னுடைய காதலை தியாகம் செய்கிறார்.சூரிக்கும் வெண்ணிலாவிற்கும் திருமணம் நடந்த அந்த இரவே, சூரி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். சூரியை கொன்றது யார்? தனது உயிர் நண்பனின் இழப்புக்கு காரணமாக இருந்தவர்களை தரணி பழி வாங்கினாரா? அதன் பின் வெண்ணிலா என்ன ஆனார் ? போன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் விதமாக படத்தின் மீதி கதை செல்கிறது.

இந்த படத்தில் தரணியாக நடித்துள்ள நானியின் நடிப்பு புதிய பரிமாணத்தில் சிறப்பாக உள்ளது அவரது முந்தைய படங்களில் அவருக்கென்று இருந்த சாக்லெட் பாய் இமேஜ் இந்தப்படத்தில் மாறி புதிய வடிவான ஆக்ஷன்
கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார், வெண்ணிலாவாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை நன்கு வழங்கியுள்ளார்.

மேலும் சூரியாக நடித்துள்ள தீக்ஷித் ஷெட்டியின் நடிப்பு இயல்பான முறையிலும், வில்லனாக நடித்துள்ள ஷைன் டாம் டாக்கோவின் நடிப்பும் நன்கு பாராட்டும்படி உள்ளது .இவர்களுடன் சமுத்திரகனி, சாய்குமார் போன்றவர்களின் பங்களிப்பும் படத்தில் நன்கு இடம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா, விறுவிறுப்பான திரைக்கதையுடனும் , சிறப்பான கிளைமாக்ஸ் காட்சியுடனும் இப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை, ஒரு ஆக்ஷன் படத்துக்கு தேவையான அளவில் அமைந்து இயக்குனரின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியுள்ளது .
பான் இந்திய திரைப்படமான இந்த “தசரா” அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் விருந்தாக உள்ளதால் இளைஞர்களை வெகுவாக கவரும்
