Saturday, August 29

‘ஹாய்’ – திரை விமர்சனம்

காதலுக்கு ‘ஹாய்’ சொல்லும் கவின்… திருமணத்துக்கே ‘நோ’ சொல்லும் நயன்தாரா… இருவரும் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான சூழலை மையமாக வைத்து காதல், நகைச்சுவை, உணர்வுகள் கலந்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ஹாய்’.

காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இளைஞர் கவின். ஆனால், பெற்றோரின் திருமண ஏற்பாடுகளால் சென்னைக்கு வர வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகிறது. மறுபுறம், திருமண பந்தத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் சுயமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நயன்தாராவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க, அவரும் சென்னைக்கு வருகிறார்.இப்படி திருமணத்தைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட எண்ணங்களுடன் இருக்கும் இருவரும் எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்கள். பழக்கம் நட்பாக மாறுகிறது… அந்த நட்பு கவினுக்குள் காதலாக மாறுகிறது. ஆனால், திருமணத்தின் மீதே நம்பிக்கை இல்லாத நயன்தாராவிடம் தனது காதலை சொல்லாமல் அதை மனதுக்குள் வைத்துக்கொள்கிறார் கவின்.

இந்த நிலையில், ஒரு சூழ்நிலை காரணமாக இருவரும் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது? கவினின் காதல் என்ன ஆனது? திருமணத்தை வெறுக்கும் நயன்தாராவின் மனதில் காதலுக்கு இடம் கிடைத்ததா? என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.


ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, தனது நடிப்பில் புதிய பரிமாணங்களை சேர்த்து வரும் கவின், இந்தப் படத்திலும் கவனம் ஈர்க்கிறார்.கொங்கு வட்டாரத் தமிழ் பேசும் இளைஞராக வரும் கவின், சமகால இளைஞர்களின் இயல்பான மனநிலையை தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

சில கால இடைவெளிக்குப் பிறகு, தனது ஆரம்பகால படங்களில் பார்த்த அந்த இயல்பான நயன்தாராவை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா.திருமணத்தை நிராகரிக்கும் பெண்ணாக மட்டுமல்லாமல், அந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.


கவின், நயன்தாராவுடன் இணைந்து கே.பாக்யராஜ், ராதிகா, பிரபு, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறார்கள்.கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை வெறும் கதாபாத்திரங்களாக கடந்து செல்லாமல், தங்களது தனி முத்திரையை பதிக்கும் இந்த அனுபவக் கலைஞர்கள், திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க வைக்கிறார்கள்.மேலும் சத்யன், ஆதித்யா கதிர், வி.டி.வி. கணேஷ், பெப்சி விஜயன் உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


காதலும் காமெடியும் கலந்து பயணிக்கும் கதைக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லாவின் காட்சியமைப்பு படத்திற்கு புத்துணர்வு தருகிறது.அதே போல ஜென்மார்ட்டினின் இசையில் பாடல்கள் பார்க்கவும் கேட்கவும் இனிமையாக உள்ளன மேலும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

பெரிய திருப்பங்களையும் பிரம்மாண்டமான சம்பவங்களையும் மட்டுமே நம்பாமல், காதல், திருமணம், தனிப்பட்ட சுதந்திரம் போன்ற சமகால உறவுகளில் இருக்கும் கேள்விகளை எளிமையான கதாபாத்திரங்கள் வழியாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன்.

யதார்த்தமான கதை, இயல்பான கதாபாத்திரங்கள், அவற்றின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள், தெளிவான திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, அனுபவமிக்க கலைஞர்களின் சரியான பயன்பாடு என படத்தின் பல அம்சங்களும் ஒன்றாக இணைந்து ‘ஹாய்’ படத்தை ரசிக்கக்கூடிய காதல் படமாக மாற்றுகின்றன.

காதல் கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திருமணம் மற்றும் உறவுகளைப் பற்றிய இன்றைய தலைமுறையின் பார்வையை ரசிக்க விரும்புபவர்களுக்கும் இந்தப் படம் ஒரு நல்ல அனுபவமாக அமையும்.

மொத்தத்தில், காதலுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லி… குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

Spread the love