Saturday, August 29

‘ஒன்ஸ்மோர்’ – திரை விமர்சனம்

ஒருமுறை தொலைந்த காதல்… மீண்டும் கதவைத் தட்டினால் என்ன நடக்கும்? அதுவும் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த காதல் திரும்பி வந்தால்?இந்த கேள்வியுடன் காதல், பிரிவு, ஏக்கம், குழப்பம் என உணர்வுகளின் பாதையில் பயணிக்கிறது ‘ஒன்ஸ்மோர்’.

காதல் தோல்வியின் வலியை மனதுக்குள் சுமந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வரும் ரகுவரனை (அர்ஜுன் தாஸ்), அஞ்சலி (அதிதி ஷங்கர்) காதலிக்கிறார். ஆனால், கடந்த காலத்தின் காயங்களால் மீண்டும் காதலில் விழத் தயங்கும் ரகுவரன், அஞ்சலியின் காதலை ஏற்க மறுக்கிறார்.ஆனால் அஞ்சலி அவ்வளவு எளிதில் பின்வாங்குவதாக இல்லை. தனது காதலை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அவரது முயற்சி ஒரு கட்டத்தில் ரகுவரனின் மனதையும் மாற்றுகிறது. இருவரும் காதலில் விழ, பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகளும் தொடங்குகின்றன.இப்படியொரு சந்தோஷமான சூழலில்தான் ரகுவரனின் கடந்த காலம் மீண்டும் அவரைத் தேடி வருகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் காதலி இந்திரா (சோனா ஒலிக்கல்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த சந்திப்பு ரகுவரனின் மனதில் புதைந்திருந்த பழைய நினைவுகளை மீண்டும் கிளறுகிறது.தன்னை ஏன் பிரிந்தாள்? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் மீண்டும் வந்திருக்கிறாள்?இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடும் ரகுவரனின் பயணத்தில் அடுத்து நடப்பதுதான் படத்தின் மீதிக்கதை.

காதல் தோல்விக்குப் பிறகு வெளியில் சாதாரணமாகவும், உள்ளுக்குள் உடைந்துபோன மனிதராகவும் இருக்கும் ரகுவரன் கதாபாத்திரத்தை அர்ஜுன் தாஸ் இயல்பாக கையாண்டிருக்கிறார். வழக்கமாக பார்க்கும் அதிரடி அல்லது அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு மாறாக, அமைதியான உணர்வுகளுக்குள் நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம் அவருக்கு புதுமையான அனுபவமாக அமைந்திருக்கிறது.அஞ்சலியாக வரும் அதிதி ஷங்கர் படத்திற்கு உற்சாகத்தையும் இளமைத் துள்ளலையும் சேர்க்கிறார். ரகுவரனின் அமைதியான குணத்திற்கு எதிர்மாறாக துறுதுறுப்பாக நகரும் அவரது கதாபாத்திரம் காதல் காட்சிகளுக்கு இயல்பான தன்மையை கொடுக்கிறது.இந்திராவாக வரும் சோனா ஒலிக்கல், கதையின் மற்றொரு முக்கியமான உணர்வை தாங்கி நிற்கிறார். அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை கவரும் .மேலும் டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத் உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள் .

ஹேஷாம் அப்துல் வஹாப் தமிழில் இசையமைக்கும் முதல் படமாக அமைந்துள்ள ‘ஒன்ஸ்மோர்’, அவரது இசையின் மற்றொரு பரிமாணத்தை காட்டுகிறது. பாடல்கள் காதல் கதையின் மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளன.காதல் மலரும் தருணங்கள் மட்டுமின்றி, கதாபாத்திரங்களின் மனக்குழப்பம் மற்றும் பிரிவின் வலி ஆகியவற்றுக்கும் பின்னணி இசை துணை நிற்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த்விஸ்வநாதனின் கேமரா, கதையின் உணர்வுகளுக்கு நெருக்கமாக பயணிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் நினைவுகள் சார்ந்த காட்சிகளில் காட்சியமைப்பு படத்தின் உணர்வை அழகாக கடத்துகிறது.

காதல் கதைகளை புதிதாக சொல்ல வேண்டுமென்றால் பிரம்மாண்டமான சம்பவங்கள் அவசியமில்லை. எளிமையான கதைக்குள் அழுத்தமான உணர்வுகளை உருவாக்கினாலே போதும்.அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ஒரு இயல்பான காதல் கதையை எடுத்துக்கொண்டு, அதில் பழைய காதல் ஏற்படுத்தும் மனக்குழப்பத்தையும் இணைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

கதையின் மையம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும், “காதல் என்பது மறந்துவிடக்கூடிய ஒரு நினைவா? இல்லை, மீண்டும் வந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய உணர்வா?” என்ற கேள்வியை முன் வைக்கும் விதம் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

இறுதியாக…காதல், பிரிவு, பழைய நினைவுகள் என பெரிய சத்தமில்லாமல் மென்மையாக பயணிக்கும் இந்தப் படம், காதல் கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக அமையும்.

Spread the love