இயக்குனர் கலையரசன் தங்கவேலின் இயக்கத்தில் ரியோராஜ், மாளவிகா மனோஜ் ,விக்னேஷ் காந்த்,ஷீலா, ஜென்சன் திவாகர், மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய திரைப்படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படத்துக்கு இசை -சித்து குமார், ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளர் கே. ஜி . வருண்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சிவாவும் (ரியோ ராஜ்) ,முற்போக்கு சிந்தனைகளை கொண்ட சக்தியும் (மாளவிகா மனோஜ் )இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள், புதிய வீட்டில் இல்லற வாழ்க்கையினை இனிதே துவங்கும் தம்பதிகள் இடையே ஆரம்ப காலத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றாலும், அவர்களுக்கு இடையே எழும் சின்ன சின்ன ஊடல்கள் ,சிறிது சிறிதாக வளர்ந்து ,இறுதியில் தங்களது திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள நீதிமன்றம் செல்லும் வரை முற்றி விடுகிறது . ஆனால் தான் தன் மனைவியுடன் வாழ விரும்புவதாக சிவா உறுதியாக இருக்க ,தனக்கு கண்டிப்பாக மண முறிவு வேண்டும் என்பதில் சக்தியும் பிடிவாதமாக இருக்கிறார். இறுதியில் என்ன நடந்தது ?அவர்களுக்குள் மணமுறிவு ஏற்பட்டதா ?அல்லது மீண்டும் இல் வாழ்க்கையில் இணைந்து தங்களது வாழ்க்கை பாதையில் பயணித்தார்களா ?இல்லையா ?என்பதுதான் படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் சிவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரியோ ராஜ் புதிதாக திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையில் நுழையும் இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் சிக்கல்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில், தன்னுடைய யதார்த்தமான நடிப்பினை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் .இந்தப் படத்தின் மூலம் இவருக்கு நிறைய ஆண் ரசிகர்கள் பட்டாளமும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கலாம். ரியோவுக்கு எந்த விதத்திலும் சளைக்காத வகையில், முழு படத்திலும் அவருக்கு இணையாக பலவிதமான உணர்வுகளை சித்தரிக்க கூடிய சக்தி என்னும் கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ் நன்கு நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக வழக்கறிஞர்களாக நடித்திருக்க கூடிய ஆர். ஜே. விக்னேஷ் காந்தும் , ஷீலாவும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ஜென்சன் திவாகரின் நகைச்சுவையும் ரசிக்கும்படி உள்ளது.
தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் கண்களுக்கு இனிய காட்சிகளை, அழகாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். சித்து குமாரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கும். பார்ப்பதற்கும் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக அவரது பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு தேவையானதொரு பின்புலத்தை இசை வடிவில் நன்கு கொடுத்திருக்கிறது .அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஃபேமிலி ரொமான்டிக் காமெடி ஜானரில் இந்த படத்தை இயக்கியிருக்கும் அவர் சமகால ஆண்களின் குரலாக ஒலிக்கும் வகையில் இந்த படத்தின் நாயகனை படைத்திருக்கிறார். புதிதாக திருமணம் செய்திருக்கும் அல்லது செய்து கொள்ள போகும் இரு பாலரும் இந்தப் படத்தை பார்ப்பதின் மூலம் சில புரிதல்கள் அவர்களுக்கு கிடைக்கலாம் .
மொத்தத்தில் இந்த ஆண்பாவம் பொல்லாதது தமிழ் சினிமாவில் அரிதாக ஆணியம் பேசி வந்திருக்கும் தமிழ் படம்.
