Wednesday, April 29

லெவன்- திரை விமர்சனம்

நவீன்சந்திரா நடிக்க, இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ள படம் லெவன்.

சென்னையில் பல நபர்களின் கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன ,அப்படி நடத்தப்படும் கொலைகளில் தங்களது உயிரை இழப்பவர்கள் அனைவரும் இரட்டையர்களாக இருந்திருக்கிறார்கள், இந்த கொலைகளை விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரியும் திடீரென ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார், அதனால் அந்த அதிகாரிக்கு பதிலாக தொடர் கொலைகளை விசாரிக்க வரும் புதிய காவல்துறை அதிகாரியாக அரவிந்தன் (நவீன் சந்திரா) வருகிறார். நவீன் சந்திராவால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த தொடர் கொலைகளை செய்தது யார் ?அதற்கான காரணம் என்ன? என்ற பல விடை தெரியாத வினாக்களுக்கு விடைகளை சொல்கிறது லெவன் படத்தின் மீதி திரைக்கதை.

படத்தின் மைய கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக ,அரவிந்தன் என்னும் கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடன் நன்கு நடித்துள்ளார் நவீன் சந்திரா. நாயகியாக சஞ்சனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரியா ஹரிக்கு வழக்கமான திரை கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரமே இந்தப்படத்தில் இவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது . மற்றும் அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன் அர்ஜய் ,ரித்விகா போன்றவர்களும் கொடுக்கப்பட்ட அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

சென்டிமென்ட், ஆக்சன் திரில்லர் கதையான இந்த படத்தின் கதை களத்திற்கு ஏற்ற வகையில் ,ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன் அசோகன் தன்னுடைய பங்களிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்.கதையின் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை சிறப்பான முறையில் அமைத்துள்ளார் இசையமைப்பாளர் டி இமான்.

திரைக்கதையில் நிறைய ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பான காட்சிகளைக் கொண்டு, அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு திருப்பத்தையும் கொடுத்து ,படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் .

ஆக்சன் திரில்லிங் கதை ரசிகர்களுக்கு இந்த லெவன் ஒரு சரியான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்..

Spread the love