சிலருக்கு தனிமை ஒரு சூழல்… சிலருக்கு அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது. அப்படிப்பட்ட தனிமையில் சிக்கிக்கொண்ட மனிதனின் வாழ்க்கைக்குள் எதிர்பாராத ஒரு உறவு நுழைந்தால் என்ன நடக்கும்? அந்த உறவு காதலாக மாறி, பின்னர் அதுவே பிரிவாக மாறினால் அந்த மனிதனின் வாழ்க்கை எந்தளவுக்கு சிதையும்? இதை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.

சிறு வயதிலேயே தாயை இழக்கும் ஆண்டனிக்கு தந்தையின் அன்பும் கிடைக்கவில்லை. அன்புக்காக ஏங்கியபடியே வளர்ந்த அவர், வயது வந்த பிறகு அந்த வெறுமையை மதுவால் நிரப்பிக் கொள்ளத் தொடங்குகிறார். திருமணம், காதல் போன்ற உறவுகளில் நம்பிக்கை இல்லாத ஆண்டனி, பாலியல் தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் பேசுவதையே தனது தனிமைக்கான மருந்தாக மாற்றிக்கொள்கிறார்.அப்படிப்பட்ட ஒரு இரவில் அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறார் மதுமிதா தாஸ்.
முதல் சந்திப்பிலேயே ஆண்டனியின் கவனத்தை ஈர்க்கும் மதுமிதா, அடுத்தடுத்து அவரை சந்திக்கத் தொடங்குகிறார். இருவருக்கிடையிலான உரையாடல்கள் அதிகரிக்க, இருவருக்கும் ஒரு ஆழமான புரிதல் உருவாகிறது. யாரிடமும் மனம் திறந்து பேசாத ஆண்டனிக்கு, மதுமிதா ஒரு துணையாக மாறுகிறார்.அதே நேரத்தில் ஆண்டனி காட்டும் அன்பும் அக்கறையும் மதுமிதாவின் மனதிலும் காதலை விதைக்கிறது.
இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியதும், ஆண்டனியின் வாழ்க்கையில் மது பழக்கம் சிக்கலை உருவாக்குகிறது அதன் பொருட்டு இருவருக்குமிடையேயான உறவில் ஏற்படும் விரிசலினால் மதுமிதா அவரை விட்டு விலக, மீண்டும் அதே பழைய தனிமைக்குள் விழுகிறார் ஆண்டனி.அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி, தனிமையில் வாழும் மனிதனின் மனநிலையை அமைதியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். படத்தின் நாயகனாக நடித்திருப்பதோடு இயக்கம், படத் தொகுப்பு போன்ற பணிகளையும் ஏற்றுள்ள டி ஆண்டனி தன்னுடைய நடிப்பின் வாயிலாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை மதுமிதா தாஸ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் பெங்காலி பெண்ணாக நடித்துள்ள அவரது நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வண்ணம் இயல்பாக அமைந்துள்ளது இவர்களுடன் ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறை காண இல்லாத அளவிற்கு நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள்
கதாபாத்திரங்களில் எண்ண உணர்வுகளை வண்ணக் காட்சிகளாக திரையில் பதிவு செய்வதற்கு ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு நேர்த்தியான பங்களிப்பை கொடுத்துள்ளது. கார்த்திக் நேத்தா,தமிழ்மணி போன்றவர்களின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர்கள் ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இருவரும் இனிமையான இசை வடிவம் கொடுத்திருக்கிறார்கள், அதேபோல ஜோயி ரெடாவின் பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை நன்கு செய்துள்ளது.
நடிகராகவும் இயக்குனராகவும் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருந்த டி .ஆண்டனி படத்தொ குப்பாளராகவும் இந்த படத்திற்கு பணியாற்றி இருக்கிறார் .அந்த பங்களிப்பில் படத்தில் இரண்டாவது பகுதியில் சற்று நீளத்தை குறைத்து இருந்தால் அது திரைக்கதையின் வேகத்திற்கு இன்னமும் பலனை கொடுத்திருக்கும்
மொத்தத்தில் …காதல் வந்தபோது தனிமை விலகியது… காதல் சென்றபோது அதைவிட பெரிய வெறுமை வந்தது. அந்த வெறுமையின் வலியை உணர்த்தும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ — காதலை ரசிக்கவும், பிரிவை உணரவும் வைக்கும் ஒரு எளிமையான காதல் கதை
