ஒரு கை… அது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் என்ன ஆகும்? அதுவும் அந்த கை ஒரு உயிரைப் பழிவாங்கத் துடித்தால்? சூதாட்டம், விபத்து, பழிவாங்கல் என விறுவிறுப்பான அம்சங்களுடன் உருவாகியுள்ள துல்கர் சல்மானின் ‘ ஐ எம் கேம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது?
சூதாட்டத்தின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டவராக உள்ளார் துல்கர் சல்மான். தொழிலதிபரின் மகனான அவர், இந்த ஆர்வத்தால் தொழிலில் கவனம் செலுத்தாமல் தனது பணத்தை இழக்கிறார். ஒரு கார் விபத்தில் சிக்கி மோசமான காயமடையும் அவருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. தனக்கு பொருத்தப்பட்ட வேறொருவரின் கை தன்னிச்சையாக செயல்பட்டு அவருக்கு இடையூறு தருகிறது. தன்னால் கட்டுப்படுத்த முடியாத அந்த கை, வில்லனாக வரும் மிஷ்கினை கொல்லத் துடிக்கிறது.துல்கரின் கைக்கும் மிஷ்கினுக்கும் என்ன தொடர்பு? அந்த கை ஏன் மிஷ்கினைக் கொல்லத் துடிக்கிறது? கட்டுப்பாடற்ற கையை வைத்துக்கொண்டு இந்தச் சிக்கலை துல்கர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்துள்ள துல்கர் சல்மான், தனது வழக்கமான திரை ஆளுமையால் படத்தை முழுமையாக தாங்கி நிற்கிறார். குறிப்பாக, தனது கட்டுப்பாட்டை மீறி கை செயல்படும் காட்சிகளில், முகபாவனைகளிலும் உடல் மொழியிலும் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு சிறப்பு. மேலும் அவருக்கு இணையாக நடித்துள்ள கயடூ லோகர் கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு தேவையாம் அளவுக்கு நன்கு நடித்துள்ளார் .மற்றும் ஆண்டனி வர்க்கீஸ், வில்லனாக நடித்துள்ள மிஷ்கின், சம்யுக்தா, போன்றவர்களின் நடிப்பும் நிறைவாகவே உள்ளது
ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு, கதையின் சூழலுக்கும் காட்சிகளின் தன்மைக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பரபரப்பான தருணங்களை காட்சிப்படுத்திய விதம் கவனம் பெறுகிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, படத்தின் விறுவிறுப்பையும் அதிகரிக்கும் வகையில் பயணிக்கிறது.
சூதாட்டம், பழிவாங்கல் மற்றும் கட்டுப்பாட்டை மீறும் ஒரு கை என வித்தியாசமான அம்சங்களை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கு நிறைந்த படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத்.
மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், துல்கர் சல்மானின் சிறப்பான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள‘ ஐ எம் கேம்’ , இளம் ரசிகர்களை கவரும் ஒரு படமாக அமைந்துள்ளது.
