உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே உழவன் ஃபவுண்டேஷன்.
உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது.
பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறது.
நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது.மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் போட்டியையும் மாநில அளவில் நடத்தி வருகிறது.அதோடு ஆண்டுதோறும் உழவர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த விற்பனை உத்திகளைக் கையாளும் விவசாயிகள், வெற்றிகரமாக இயங்கும் பெண் விவசாயிகள், பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளி, விவசாயத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மாற்றுப்பள்ளி, படித்துக்கொண்டே விவசாயத்திலும் தீவிரம் காட்டும் மாணவர் என வேளாண்மையை நேசிக்கும் மக்களை கண்டறிந்து ஊக்கத்தொகை அளித்து வருகிறது நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேசன்.
அந்த வகையில் விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி அங்கிகரீக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் “உழவர் விருதுகள் – 2022”
விழா நேற்று தியாகராயர் நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடந்தது.
இதில் சிறந்த பெண் விவசாயிக்கான விருதை பள்ளபட்டி சரோஜா அவர்களுக்கும்,
சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்புக்கான விருதை வாசுதேவநல்லூர் “சங்கனாப்பேரி களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்திற்கும்,
“மரபு விதைகள் சேகரிப்பு மற்றும் பரவலாக்கத்திற்காக ஒட்டன்சத்திரம் பரமேஸ்வரன் அவர்களுக்கும்,
நதியை ( நீர் நிலைகளை ) மீட்டெடுத்தலுக்கான விருதை திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சார்ந்த நம் அனுமன் நதி அமைப்பிற்கும்,
சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருதை கோத்தகிரி நம் சந்தை அமைப்பிற்கும்,
வேளாண் சிறப்பு விருது மயிலம் சிருஷ்டி பவுண்டேஷன் அமைப்பிற்கும்,மொத்தம் 6 அமைப்பிற்கு “உழவர் விருது” மற்றும் தலா ரூபாய் 1-இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
ஓடையாக இருந்ததை நதியாக மீட்டெடுத்தலுக்கான விருதை திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சார்ந்த நம் அனுமன் நதி அமைப்பின் சார்பில் விது பாலா பேசியதாவது..
ஒரு நதியை தனி மனிதனால் மீட்டெடுக்க முடியாது. நீராதரங்களுக்காக வேலை செய்த போது, 2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு, சென்னையில் மட்டுமல்ல கிராமங்களிலும் சென்னை போன்ற நிலை தான் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் சென்னை போல் இல்லாமால் கிராமங்களில் யார் அதை சீர்படுத்துவது என்பதில் நிறைய தடுமாற்றம் இருந்தது. 2015 க்கு பிறகு கிராமங்களில் நிறைய செமினார் நடந்தது. உழவன் பவுண்டேசன் ஒரு குழு அமைத்தது. அதன் மூலம் கிராமத்தில் தண்ணீர் வற்றிய குளத்தை சீரமைக்க வெளிநாட்டிலிருந்து ஒரு பேராசிரியர் ஒருவரை அழைத்து வந்தோம்.
அவர் இந்த குளத்தை பற்றி யாருக்கு தெரியும் என்று கேட்டார். அதற்கு உள்ளூரிலிருந்து ஐவரை கைகாட்டினோம். அவர், நீங்கள் வேலை செய்ய வேண்டியது அவர்களோடு தான் என்றார். ஆனால் அந்த ஐவரை ஒன்றிணைப்பதில் ஒரு பிரச்சனை. அவர்கள் வேறு வேறு கட்சியை சார்ந்து குழுவை சார்ந்து இருந்தார்கள். அவர்களை ஒன்றினைப்பதில் பேராசிரியர் சக்திநாதன் பேருதவியாக இருந்தார். அவர் தற்போது நம்முடன் இல்லை என்பது வருத்தம், அவர் தான் மக்களிடம் பேசினார். முதலில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் அதற்கான தேவைகள் குறித்தும் சொன்னார், அதனை இந்த பவுண்டேசனில் உள்ளவர்கள் அடுத்த சில நாட்களில் ரெடி செய்து விட்டார்கள். எப்படி என்று வியந்த போது இவர்கள் இங்கு மட்டுமில்லை தமிழ் நாடு முழுவதும் இம்மாதிரி முன்னெடுப்புகளை செய்து வருவது தெரிந்தது.
குளம் நிறைந்து விட்டது. ஆனால் மழை பெய்து மீண்டும் குளம் உடையும் நிலை வந்த போது, விவசாயிகள் மணல் மூட்டை வைத்து, ஒவ்வொருவரும் போராடினார்கள், ஐஐடி பல இருந்தும் ராக்கெட் விடும் தொழில்நுட்பம் இருக்கும் நம் நாட்டில் ஏன் இதற்கு ஒரு தீர்வு இல்லை என்பது வருத்தமாக இருந்தது. ஆனால் இந்த பவுண்டேசனின் முன்னெடுப்பு தொடர்ந்து நிகழவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படையாட்சி நதியை நமது படையாறு என நதி மீட்டெடுப்பு நிகழவுள்ளது இந்த புதிய மாற்றங்கள் நிகழ்வது மிகுந்த மகிழ்ச்சி.
நடிகர் சூர்யா பேசியதாவது…
இது ரொம்ப முக்கியமான நிகழ்வு. குடும்பங்களுடன் பலர் வந்துள்ளீர்கள். உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு என் அப்பாத்தா ஞாபகம் வருகிறது எனக்கூறியவர் அப்பாத்தா நினைவில் தடுமாறி கண்ணீர் சிந்தினார். ஒரு நிமிடத்திற்கு பின் பேசத்தொடங்கியவர்…. கார்த்திக்கு இயற்கை மிகவும் பிடித்தமான ஒன்று. இயற்கையை மிக நெருக்கத்தில் வைத்து பார்ப்பார். இதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. அகரம் நிறுவனம் ஆரம்பித்தது போல், கார்த்தி அவருக்கு நெருக்கமான இயற்கை சார்ந்த ஒரு அமைப்பை உருவாக்கினார். அதனால் பல இடங்களுக்கு, பல கால்வாய்களுக்கு தண்ணீர் சென்றது. அதற்கு உறுதுணையாய் இருந்த சதீஷுக்கு நன்றி. அதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் நன்றி. கடைக்குட்டி சிங்கம் மூலமாக கார்த்தி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் விவசாயம் குறித்து பல கேள்விகளையையும், அதன் முக்கியத்துவத்தையையும் முன்வைத்தனர். அதனை தாண்டி என்ன செய்வதென்று தேடி கொண்டிருந்த போது, ஒரு 18 விஷயங்கள் தோன்றியது. பல அமைப்புகள் பல விஷயங்களை முன் வைத்தனர். இதனை தாண்டி பல விவசாய சங்கங்கள் கேட்ட ஒரே விஷயம் எங்களுக்கு குரலாய் இருங்கள் என்பதே. அதனால் தான் உழவன் அமைப்பு ஆரம்பிக்கபட்டது. கார்த்திக்கு இருக்கும் பல வேலைகளை தாண்டி, இந்த வேலையை தொடர்ந்து செய்வதாய் எடுத்த முடிவு தான் உழவன் அமைப்பு. கல்வி பற்றிய விஷயங்கள் நாம் வளரும் போது நாம் பார்க்கும் காட்சிகளை வைத்து நமக்கு தோன்றுவது. 2006 முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறார்களா என்பது எனக்கு கேள்வியாக இருந்தது. அதனால் தான் அகரம் அமைப்பு உருவானது.
முதல் படியை எடுத்துவைப்பது தான் கடினம். அது ஆரம்பித்தவுடன் பல வெற்றிகளை தேடி செல்லும். அகரம் ஆரம்பித்த பிறகு, அது பல மாணவர்களின் கனவுகளை நினைவாக்கியது. அது போல் உழவன் அமைப்பும் பெரும் வெற்றியை அடையும். அதற்கான வாழ்த்துகள்.
விவசாயத்திற்காகவும், கிராமத்திற்காகவும் நேரம் ஒதுக்காதது, குற்ற உணர்வாய் இருக்கிறது. அதை அவர்கள் வேலை என நினைப்பது தவறு. நம்மை பல விஷயங்கள் விவசாயத்தை தாண்டி கொண்டு போய்விட்டது. பலவற்றை கற்கும் நாம், உற்பத்தி பற்றி படிப்பதில்லை. அதை பற்றி தெரிந்துகொள்வதில்லை. எனது குழந்தைகளிடம் காய்கறிகள் கிடைக்கும் இடம் பற்றி கேட்டால் சூப்பர் மார்கெட் என இப்போது உள்ள தலைமுறை நினைக்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் செய்துவைக்க வேண்டும். அவர்கள் இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வார்கள். அருகில் உள்ளவர்களிடம் பொருட்களை வாங்க முயற்சிப்போம். நாம் பொருள் வாங்கும் போது, அதில் விவசாயிகளுக்கு எவ்வளவு பணம் போகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மரத்திற்கு உயிர் உள்ளது என்பதை நாங்கள் என் வீட்டின் வாயிலாகவே அறிந்துகொண்டோம். விவசாயிகள் அவர்கள் பெரிதாக சம்பாதிக்கவில்லை, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் அதில் போடுகிறார்கள். ஒரு முறை நானும் கார்த்தியும் பேசிக்கோண்டிருக்கும் போது மரங்களுக்கு உயிர் இருக்கிறது பேசினால் வளரும் இலைவிடும் என சொல்கிறார்களே அப்படியெல்லாமா இருக்கும் என அவனிடம் கேட்டேன். அப்புறம் கிண்டலாக அங்கிருந்த மரத்திடம் உன்னைவிட அவன் நல்லா வளர்கிறான் இலை விடுகிறான் நீயும் வர வேண்டியதுதானே என சொல்லிவிட்டு போய்விட்டேன் ஆனால் கார்த்தி தினமும் அதனிடம் கட்டிப்பிடித்து பேசியிருக்கிறார் இன்று பக்கத்து மரத்தை விட அந்த மரம் பெரிதாக வளர்ந்துவிட்டது. மரங்களுக்கு உணர்வும் உயிரும் இருக்கிறது நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும், என்றார்.
வெற்றிமாறன் பேசியதாவது…
நான் விவசாயம் செய்யலாம் என இறங்கிய பிறகு, அங்கே சென்று வேலை செய்யும்போது தான் தெரிகிறது, அங்கு 60 சதவீத வேலையை செய்வது, பெண்கள் தான். ஒரு ஆணாக நாம் வேலை செய்யும் போது 1 மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளை எடுத்து கொள்கிறோம், ஆனால் பெண்கள் ஒரு முழு நாளில் ஒரு முறை தான் சின்ன இடைவேளை எடுத்து கொள்கிறார்கள், விவசாயத்தில் அதிகம் கஷ்டப்படுவது விவசாய கூலிகளாக இருக்கும் பெண்கள் தான் ஆனால் அவர்களை எங்குமே நாம் பேசுவதில்லை, நிலம் வைத்திருக்கும் ஆண் விவசாயி தான் எங்கும் முன்னிறுத்தப்படுகிறான், இது மாற வேண்டும்.
நடிகர் சிவக்குமார் பேசியதாவது…
உழவன் பவுண்டேசன் ஆரம்பித்திருக்கும் நடிகர் கார்த்தியே ஒரு ஏழை பெண் விவசாயி உடைய பேரன் தான். விவசாயி என்றாலே எலும்பும் தோலுமாக ஏழையாக இருப்பாம் என்பதை மாற்றி, படித்த மாணவர்கள் விவசாயத்திற்கு வந்து விவசாயத்தை நவீன முறையில் உருவாக்க வேண்டும் என்று தான் கார்த்தி இந்த அமைப்பை துவக்கியிருக்கிறார். அவர் காலத்திலேயே இந்த மாற்றம் நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் பத்து மாத குழந்தையாக இருந்தபோதே என் அப்பா இறந்துவிட்டார். என் அப்பா உயிரோடு இருந்து என் அம்மா இறந்திருந்தால் நான் அநாதையாகியிருப்பேன். ஒரு பத்து மாத குழந்தையை எந்த அப்பனும் வளர்க்க முடியாது. அந்த காலத்தில் எருக்கம்பாலை கொடுத்து கொல்லாமல் சாமி பெற்ற பிள்ளை என என் அம்மா நினைத்ததால் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்
( கண்கலங்கினார் ).
81 வயது வரை, என் தாயார் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதை நான் பார்த்ததே இல்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சோளக்கஞ்சி குடித்து விட்டு ஏர்கலப்பை பிடித்து, விவசாய வேலை அத்தனையும் என் அம்மாவே பார்த்தார். என் அம்மா எனக்கு தலை வாரிவிட்டதில்லை.. என்னை பார்த்துகொண்டதில்லை.. முழுக்க ஆண் போல் விவசாயம் பார்த்தார். அத்தனை கஷ்டமும் பட்டார். இங்குள்ள எல்லோரும் எல்லா பெண்களுக்கும் பெண் படைப்பு கடவுள். பெண் செல்லிருந்து ஒரு உயிரை உருவாக்க முடியும். ஆனால் ஆணிடமிருந்து ஒன்றையும் உருவாக்க முடியாது, பெண் படைப்பு கடவுள், ஒரு கதை சொல்கிறேன் ..
என் சின்னம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன், ஒரு பத்து உருப்படி பெற்றேன் 4 பஞ்சத்துல போச்சு..6-மிஞ்சுச்சு என்றார். அந்த காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது ஈஸியா என்றால் அது உயிர் போய் வரும் செயல். கைகளை கயிற்றில் விட்டத்தில் கட்டி காலை அகட்டி நின்று முக்க வேண்டும். முக்கி முக்கியே 19 பிள்ளை பெற்றேன் என்றார். பெண்கள் அந்த காலத்தில் பட்ட கஷ்டம் அப்படி, பெண்கள் படைப்புக்கான கடவுளுக்கு நன்றி,என்றார்.
மேடையிலேயே, சூர்யா கேட்ட சில கேள்விகளுக்கு கார்த்தி அளித்த பதில்..
சூர்யா: இங்கு பலர் என்னை எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என தெரியவில்லை என் கூறினார்கள், நீங்கள் எப்படி இவ்வளவு பேரை கண்டறிகிறீர்கள், சரியான ஆட்களை எப்படி கண்டறிகிறீர்கள். விவசாயம் பற்றியும், விவசாயிகள் பற்றியும் எப்படி அறிந்துகொள்கிறாய்?
கார்த்தி: அதற்கு அகரம் தான் உதவியது. நகரத்தில் இருந்து கல்வியை பார்ப்பதை தாண்டி, கிராமத்தில் மாணவர்கள் படிப்பதற்கு எவ்வளவு சிரமபடுகிறார்கள், அவர்கள் குடும்ப சூழலை தாண்டி அவர்கள் வெற்றி பெறுவதை, அகரம் மூலமாக பார்த்தோம். அகரம் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பெரும் உதவியாய் இருந்தனர். அவர்கள் உடன் கலந்துரையாடும் போது, பல நிறுவனங்கள் பண்ண முடியாத ஒன்றை நம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இன்று இவர்களை அடையாளம் கண்டு இங்கு கூட்டிவருவது, மகிழ்ச்சியளிக்கிறது. வேகமாக இயங்கி வரும் இன்றையை உலகத்தில் ஒரு பயிரை விதைத்து, அதற்காக காத்திருக்கும் இந்த விவசாயிகள் பற்றி புரிந்துகொள்ள, அவர்களை சந்தித்தோம். பல NGO-க்களை சந்திக்கும் போது, பல விஷயங்களையும், விவசாயம் பற்றியும் தெரிந்துகொண்டோம். உழவன் விருதுகள் போன்று தொடர்ந்து பல விஷயங்கள் நடக்கும். என்னுடன் சதிஷ் இருக்கிறார். அவர் இதற்காக ஆசிரியர் பணியை விட்டுவிட்டு வந்தார். விவசாயம் எனும் போது, அதற்கான ஆட்கள் வந்துவிடுகின்றனர். அவர் 8 பேரை சந்திப்பதற்காக, கிட்டத்தட்ட 2800 கிமீ அலைந்துள்ளார்.
இது போன்று விவசாயிகளை பெருமிதபடுத்துவதில் மகிழ்ச்சி
உழவர்களுக்கான விருதை ஏற்றுகொள்ள பல ஊர்களில் இருந்து மக்கள் வந்தது மகிழ்ச்சி. உழவன் ஆரம்பித்ததன் காரணம், எனது பலம் சார்ந்து நான் இயங்கவிரும்பியது. நீங்கள் தான் என் பலம். அந்த துறை சார்ந்த வல்லுநர்களிடன் தினமும் பேசுவதன் மூலமே இது சாத்தியமானது. சினிமாவை பற்றி பேசுவதை தாண்டி, தினமும் விவசாயம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம். புது கொள்கைகளை அரசு அறிவிக்கும் போது, அதன் சாராம்சங்களை தெரிந்துகொள்கிறோம். விவசாயிகளை கௌரவபடுத்துவதன் மூலம், மக்களுக்கு இது சென்றடையவேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை நாம் முடிவுசெய்ய வேண்டும். அதை பெண்களிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தின் உணவு பழக்கவங்கள் முழுவதுமாய் மாறிவிட்டன. சிறுதானியங்களை நாங்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இஸ்மாயில் அவர்கள் கூறியது எனக்கு மிகப்பெரிய பாடமாக வாழ்கை முழுவதும் இருக்கும். உப்பு மண்ணில் போட்டால் அது கருவாடு ஆகும் என அவர் கூறியது போன்று யாராலும் தெளிவாக கூறமுடியாது. இதுபோன்ற வல்லுநர்களை கூட்டிவந்து அவர்கள் கூறுவதை மக்கள் கேட்பதற்கே இந்த விழா. இயற்கையை காப்பாற்றுவதே அடுத்தகட்ட நகர்வு, புவியின் இயற்கை மாறுதல் மிகப்பெரிய அச்சுறுதலாய் இருக்கும், அதற்கு நாம் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் நோக்கம்.
நுகர்வோரை விவசாயம் நோக்கி கொண்டு சேர்ப்பது தான். ஒரு உடை எங்கிருந்து வருகிறது என்பது தெரிவது போல், உணவு பொருளுக்கும் அது தெரிய வேண்டும். இங்கு பல கருவிகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் பல பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் விவசாயத்திற்கு உபயோகமான கருவிகளை உருவாக்க வேண்டும். அதை நோக்கி நகர்வதே உழவன் அமைப்பின் நோக்கம். சிறிய விவசாயிகளுக்கு தேவையான விவசாய உபகரணங்களை உருவாக்குவதற்கான ஒரு வழியை அமைப்பதை உழவன் அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதை நாங்கள் ஒரு போட்டியாக நடத்தினோம். பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பல புதிய கருவிகளை உருவாக்கி அனுப்பியிருந்தார்கள், அவர்களுக்கு விருதுகளும் வழங்கினோம். அடுத்ததாக டிசைனிங்க் போட்டி ஒன்று நடத்த இருக்கிறோம். பொறியாளர்கள் நமது ஊரின் பிரச்சனைகளை தீர்க்கும் படியான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இன்று பல தகவல்களை நாம் அறிந்துகொண்டோம். பலர் பல குறிப்புகளை கொடுத்தனர். ஒரு ஓடை 13 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்தது. அதை நாங்கள் கையிலெடுத்து சரிசெய்து கொடுத்த பிறகு மழை வந்தது. இயற்கையும் நமக்கு துணை நிற்கிறது. இனிமேல் வருடாவருடம் நாங்களே அந்த ஓடையை பாராமரித்து கொடுக்கவுள்ளோம்.
தமிழ் நாடு பல இடங்களில் இருந்து இங்கு வந்த உங்களால் தான் இந்த விவசாய நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக இருந்தது.இதை கொண்டு போய் சேர்க்கும் நல்ல எண்ணத்தில் இன்ங்கு வந்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு மரியாதை கலந்த நன்றி.அனைவருக்கும் நன்றி,என்றார்.
இந்த விழாவில் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் கார்த்தி, ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் கு.சிவராமன், சூழலியலாளர் பாமயன் மற்றும் சூழலியலாளர் அனந்து ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.விழா மேடை மற்றும் கலை அரங்கம் முழுவதும் கிராமம் மற்றும் விவசாயத்தை நினைவுபடுத்தும் அலங்காரமாக இருந்தது.அனைவரையும்,இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தஉழவன் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் க.சத்தீஸ்வரன் மற்றும் PRO ஜான்சன் வரவேற்றார்கள்.