சதுரங்கத்தில் வெற்றி பெற ஒவ்வொரு காயையும் சரியான நேரத்தில் நகர்த்த வேண்டும். ஆனால், சிலரது வாழ்க்கையில் முதல் காயை நகர்த்துவதற்கே சமூகத்தின் தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு போராட்டத்தை சதுரங்கப் பலகையின் பின்னணியில் பதிவு செய்யும் படைப்பாக உருவாகியிருக்கிறது ‘தி கிராண்ட் மாஸ்டர்’.

கதையின் மைய கதாபாத்திரத்தில் துப்புரவுத் தொழிலாளியாக நடித்துள்ள அபர்ணதி ,தனது கணவரை இழந்த நிலையில் வாழும் சூழ்நிலையில், மகனை நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால், மகனுக்கோ படிப்பை விட சதுரங்கத்தின் மீதுதான் அதிக ஆர்வம். அந்த விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே அவனது கனவு.கனவு இருக்கிறது. ஆனால் அவனது தாயார் செய்யும் பணியினை காரணம் காட்டி, சமூகத்தின் ஒரு பகுதி அவனை ஒதுக்கும்போது, அந்த நிராகரிப்பை எதிர்த்து மகனின் கனவுக்காக தானே களத்தில் இறங்குகிறார் அபர்ணதி. மகனுக்கு சதுரங்கம் கற்றுக்கொடுப்பதுடன், அவனை நிராகரித்தவர்களுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும் என்ற தாயின் போராட்டமாக கதை நகர்கிறது. இறுதியில் அந்த சிறுவனின் கிராண்ட்மாஸ்டர் கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை
என்னதான் திறமை ஆர்வம் பயிற்சி இருந்தாலும் விளையாட்டு துறையில் சாதிக்க விரும்பும் சிறுவர்களின் ஆசை, கனவு, போன்றவற்றை சமூக பாகுபாடு எவ்விதமெல்லாம் பாதிக்கிறது ?அதனை எதிர்த்து எவ்வாறெல்லாம் போராட வேண்டி இருக்கிறது ?என்பதை யதார்த்தமான வாழ்வியல் கதாபாத்திரங்களோடு படமாக்கி, திரைமொழியில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றி செழியன்.
அபர்ணதி தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான உடல்மொழி, தோற்றம் மற்றும் நடிப்பில் தனது ஆற்றலை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
லிங்கேஷ், அபர்ணதியின் கணவராக நடித்துள்ளார் அவரும் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் தனது பங்களிப்பை செய்திருக்கிறார்.வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வரும் சுரேஷ் மேனன், அபர்ணதியின் மகனாக நடித்துள்ள சிறுவன் அஸ்வின் ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. .
ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ், கதாபாத்திரங்களின் வாழ்வியலை அதன் இயல்புத்தன்மையோடு, யதார்த்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்கள்.தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கதையின் உணர்வுகளோடு இணைந்து பயணிக்கின்றன.
பின்னணி இசையும் காட்சிகளை ஆக்கிரமிக்காமல் அவற்றோடு உடன் செல்லுகின்றன
மொத்தத்தில் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ சதுரங்கத்தைப் பற்றிய படம் மட்டுமல்ல; ஒரு கனவை அடைய முயற்சிக்கும் போது, திறமைக்கு முன்பாகவே வந்து நிற்கும் சமூகத் தடைகளைப் பற்றிய பதிவாக .திகழ்கிறது.
