’சாவீ’- திரைப்பட விமர்சனம்

சாவு வீட்டில் நடக்கும் சொத்து சண்டை ,வாரிசு சண்டை ,சாவு வீட்டில் பிணத்தின் தண்டட்டி காணாமல் போவது ,சாவு வீட்டில் உறவுகள் பிரிதல் ,புதிதாக உருவாகுதல் என நிறைய கதைகளை தமிழ் சினிமாவில் நாம் பார்த்திருக்கிறோம்.இந்தப் படத்தில் சாவு வீட்டில் பிணமே காணாமல் போகிறது இதை களமாக கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார்கள் முதலில் சாவு வீடு என்ற தலைப்பில் வளர்ந்த இத்திரைப்படத்திற்கு தற்பொழுது .’சாவீ’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள் கதையின் நாயகன் உதயா தீப் தன்னுடைய மாமாவின் மகளான கவிதா சுரேஷை காதலிக்கிறார் இருவரது காதலுக்கும் கவிதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தன்னுடைய தந்தையை தனது மாமா தான் கொன்றுவிட்டார் என்று நினைத்து அவர் மீது உதயாதீப் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார், இப்படி கதை சென்று கொண்டிருக்கும் சூழலில் ஒரு சமயம் அந்த மாமாவும் இறந்து விடுகிறார், அவரது உடலை இறுதிச் சடங்கு களுக்காக வீட்டில் வைத்திருக்கும் பொழுது, எல்லோரும் அயர்ந்து தூங்கி இருக்கும் வேளையில் ,இறந்து போனவருடைய உடல் காணாமல் போகிறது. இதைப் பற்றி விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா அங்கு வருகிறார்.அவரால் இறந்து போன உடலை கண்டுபிடிக்க முடிந்ததா? உண்மையில் அந்த பிணம் எப்படி காணாமல் போனது? இறுதியில் என்ன நடந்தது ?என்பதுதான் சாவீ படத்தின் மீதி கதை .

கதையின் நாயகனாக நடித்திருக்க கூடிய உதயா தீப் ஜூடுமாரிமுத்து என்னும் கதாபாத்திரத்தில், கதை நிகழும் சூழலுக்கும் ஏற்ப நன்கு நடித்து, தான் ஏற்று உள்ள கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தி போகிறார். காவல்துறை அதிகாரி சக்கரவர்த்தியாக நடித்துள்ள ஆதேஷ் பாலா,ஸ்டெல்லா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கவிதா சுரேஷ் போன்றவர்களும் நிறைவாக நடித்துள்ளார்கள் . இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பூபதி வெங்கடாசலம், சராசரி குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தில் நிகழும் சம்பவங்களுக்கு ஏற்ப பயணிக்கும் கதைக்கரு கொண்ட படத்தினை தனது கேமரா கண்களால் நன்கு பதிவு செய்துள்ளார் .சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராமின் பின்னணி இசை கதை நிகழும் காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தினை சரியான முறையில் கொடுத்திருக்கிறது.பிளாக் காமெடி பாணியில் ஆண்டனி அஜித் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சாவு வீட்டில் காணாமல் போகும் பிணம் என்னும் ஒரு சிறு கருத்தை மையமாகக் கொண்டு பல தரப்பட்ட கதாபாத்திரங்களை அதில் இணைத்து ,கோர்வையான திரைக்கதை ஆக்கி, சஸ்பென்சை படம் முழுவதும் கடத்திச் சென்று நிறைவான படமாக உருவாக்கி இருக்கிறார்.
