Tuesday, June 18

பொன்னியின் செல்வன்- விமர்சனம்

அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் கதை ,கி.பி. 1000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது .இந்த கதை சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்தின் இயக்கத்தில் காட்சிவடிவில் திரையில் மிளிர்ந்துள்ளது

இந்த படக்கதையின் வெற்றி பல புகழ்பெற்ற சரித்திர கதாசிரியர்களின் கதைகளை படமாக்கும் எண்ணங்களை புதிய மற்றும் பழைய இயக்குனர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும்

சோழ சாம்ராஜ்யத்தின் மன்னரான சுந்தரச்சோழரின் படைகளோடு சென்று பல இடங்களை வெற்றிகண்டு அப்பகுதிகளை சோழ ராஜ்ஜியத்துக்குள் கொண்டு வரும் ஆதித்த கரிகாலனுக்கு பக்கபலமாய் இருப்பது தளபதி வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனோடு காஞ்சியை கைப்பற்றிய சந்தோஷத்தில் வெற்றியைகொன்டும் வேளையில் ஆதித்த கரிகாலனுக்கு கடம்பூர் சதி திட்டம் குறித்த தகவல் வருகிறது வந்தியத்தேவனை அதுகுறித்த தகவல்களை சேகரித்து வர செல்லுகிறார் சோழ நாட்டில் அரியணையை கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிகளைப் பற்றி அறிந்து, அதை மன்னர் சுந்தர சோழன் மற்றும் தங்கை குந்தவையிடம் கூற அவர் அனுப்பப்படுகிறார். அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன், வழியில் சின்ன பழுவேட்டரையர்( பார்த்திபன்), பெரிய பழுவேட்டரையர்( சரத்குமார் )மற்றும் அவரது மனைவி நந்தினியை சந்தித்து தகவல்களை சேகரித்துக் கொள்கிறார்.பிறகு அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன், சுந்தர சோழனையும், குந்தவையையும் சந்தித்து விஷயங்களை தெரிவித்த பின்பு இலங்கையில் இருக்கும் அருள்மொழிவர்மனையும் சந்தித்து சோழ நாட்டுக்குள் நடக்கும் சூழ்ச்சிகள் குறித்து தெரிவிக்கிறார்.

.பெரிய பழு வேட்டரையர் சிற்றரசர்களுடன் இணைந்துகொண்டு மதுராந்தகனை அரியணையில் அமர வைக்க திட்டமிடுகின்றார். பலமுனை சதி வலைக்குள் பின்னப்பட்டுள்ள மன்னர் காப்பாற்றபட்டாறா? அருள்மொழிவர்மனுக்கு என்ன நடந்தது ? பலரால் சோழ சாம்ராஜ்யத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு சூழ்ச்சிகளிருந்து  மன்னர் குடும்பம் தப்பித்ததா, இல்லையா? என்பதை சொல்லுகிறது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் எஞ்சிய கதை.

பல வருட உழைப்பு,மாபெரும் நட்சத்திரங்கள், பிரமாண்டமான கதை ,உயர்தர தொழில் நுட்பம் மணிசார் படம் என ஏராளமான சிறப்புகளோடு உலகமெங்கும் எதிர்பார்க்கபட்ட படம்  இது ,பல லட்சம் வாசகர்களால் பல ஆண்டுகளாய் படிக்கப்பட்ட கதை, காட்சி வடிவில் கலைநயத்துடன் இந்தப்படத்தில் வெளிவந்துள்ளது .

போர்களத்தில் துவங்கும் காட்சி விக்ரம் கதாபாத்திரம் என்ன? கார்த்தி எந்த கதாபாத்திரம்? என்ற ஆச்சரிய கேள்விகளுடன், வெற்றிக்கொடி ஏந்தும் முதல் காட்சியே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் புத்தககாட்சிகளில் ஏராளாமான வாசகர்களின் விருப்பத்தேர்வாக திகழும் பொன்னியின்செல்வன் அமரர் கல்கியின் கற்பனையும் வரலாற்று பிண்ணனியும் கலந்த கலவையாகும்

படித்து பார்த்து பலமுறை கற்பனையில் ரசித்த கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டுவந்து காட்டும்  வகையில் அனைத்து நடிகர்களும் சிறப்பான முறையில் நடித்துள்ளார்கள்.எந்த ஒரு விளையாட்டிலும் முதல் நகர்வு என்பது முக்கியமானது அதிலும் குறிப்பாக சதுரங்க விளையாட்டில் முதல் நகர்வு அதிமுக்கியமானது அது சோல்ஜராகவோ அல்லது பிஷப் ஆகவோ இல்லை குதிரையின் நகர்வாக இருக்கலாம் ஆனால் முதல் நகர்வு என்பது கவனிக்கத்தக்கது அதே போல் இந்த படத்தில் முதல் காட்சியில் முதல் நகர்வாய் போர்க்களத்தில் வெகுண்டெழுந்த ஆதித்த கரிகாலன் மற்றும் அவரது தளபதி வந்தியத்தேவனின் அதாவது விக்ரம் மற்றும் கார்த்தியின் அறிமுக காட்சி ஓரே காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களை உற்சாகம் அடைய வைக்கிறது. நவ நாகரிக அல்லது கிராமத்து நாயகன் போன்ற கதையின் மாந்தர்களாகவே நமக்கு நன்கு தெரிந்திருந்த விகரமும் கார்த்தியும் புதிய கதைக்களத்தில் சிறப்பாக தங்களது பாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்துள்ளார்கள், இவர்களுக்கு அவர்களது உடல் மொழியும் நன்கு பயன்பட்டுள்ளது என்றே சொல்லலாம் .

படத்தின் கதையில் பல சதிகாரர்கள் இருந்தாலும் தன் அழகு மூலம் சதி செய்யும் பாத்திரத்தில் நிறைவாய் நடித்துள்ளார் ஐஸ்வரியாராய்.பல படங்களில் இவரது திறமை பளிச்சிட்டு இருந்தாலும் இந்த படத்தில் இவரது பாத்திரமும் அதற்க்கு அவரின் பங்களிப்பும் திரைவரலாற்றில் இவரது பெயரை பதிவு செய்யும் .

பொதுவாக நாயகிகளுக்கு நடிக வாய்ப்பு தரும் பாத்திரங்கள் அரிதாகவே அமையும் பலபடங்களில் கிளா மார் பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த திரிஷாவுக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் கனமான பாத்திரம் கிடைத்துள்ளது ,குந்தவையாக வாழ்ந்து இருக்கும் திரிஷா தன் திரை பயணத்தை மீண்டும் பல படங்களில் தொடர இந்த படம் வழிவகுக்கும், குறிப்பாக மாடிப்படிகளில் இவரும் ஐஸ்வரியாவும் சந்தித்து பேசும் காட்சியில் இருவரின் நடிப்பும் ஜெயமோகன்சாரின் வசனங்களை இவர்கள் வெளிப்படுத்தும் விதமும் அருமை, சிரித்த முகத்துடன் போர்வாளை விட கூர்மையான வசனங்களை இவர்கள் பேசும் விதம் பாராட்டுக்குரியது.

அருண்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவி அந்த காலத்து அரசபரம்பரை இளைஞர்கள் எப்படித்தான் இரு ந்திருப்பார்கள் என்னும் கற்பனை உருவத்துக்கு உயிர் கொடுத்து நடித்துள்ளார் இவருடைய கலைப்பயண த்தில் இந்த படம் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன் இருவரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருத்தமான உடல் மொழியுடன் திறம் பட நடித்துள்ளார்கள் ஆழ்வார்கடியானாக வரும் ஜெயராம் வசனஉச்சரிப்பிலும் உடல்மொழியிலும் யதார்த்தமான நடிப்பை நயம்பட வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவும் , பெரிய வேளாளராக பிரபுவும் ,சுந்தரசோழராக பிரகாஷ்ராஜூம் ,செம்பியன்மாதேவியாக ஜெயச்சித்ராவும் ,மதுராந்தகனாக ரகுமானும் , கதையின் பல மாந்தர்களாக கதையோட்டத்திருக்கு தேவையான அளவிற்கு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்

சிறப்பான கதையினை, திறம்பட்ட தொழிநுட்பவல்லுனர்களுடன், பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள, லைகா தயாரிப்புநிறுவனம், மணிசாரின் கனவை மட்டுமல்ல ஏராளமான வாசகர்கள் மற்றும் ரசிகர்களின் கனவையும் நனவாக்கி, தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் வரலாற்றில் தங்களது படைப்பை பெருமிதமாக பதிவு செய்கிறது.

ஜெயமோகனின் உயிரோட்டமுள்ள வசனங்களும் ,படித்தவற்றை கண்முன்னே பிரமாண்டமான காட்சியாய் வெளிகொண்டுவந்த தோட்டாதரணியின் கலைவண்ணமும் ,கண்களுக்கு சுவைவிருந்தாய் ரவி வர்மனின் ஒளிப்பதிவும், இயக்குனரின் பங்களிப்புக்கு மேலும் பலம் சேர்த்துள்ளன .’பொன்னிநதி’, ‘சோழா சோழா’ போன்ற பாடல்கள் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் .

பலரால் பலமுறை முயற்சிக்கப்பட்டு ,தற்போது மணிரத்னத்தால் நிறைவேற்றபட்டு இருக்கற இந்தபடம் இதன் அடுத்த பாகம் பற்றிய எதிர்பார்ப்பை இன்னுமும் அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இன்றைய காலத்து வாழும் இளையதலைமுறையினருக்கு முன்னொரு காலத்தில் வாழ்ந்த நாம் மூதாதையர்களின் வீரத்தையும் காதலையும் கடமையையும் கண்முன்னே காட்சி வாயிலாக பதிவு செய்து அவர்களது வாழ்வியலை உணரவைக்கிறது இந்த பொன்னியின் செல்வன்.

Spread the love