Sunday, April 19

பராசக்தி -திரை விமர்சனம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த மன்னர்களையும், வரலாற்றுச் சம்பவங்களையும் நாம் இப்பொழுது படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றுதான், அதற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய, ஏன்?அதை விட முக்கியமானது, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு,நமது தகப்பனும், பாட்டனும் வாழ்ந்த காலத்தில், நம்முடைய மொழி சந்தித்த பிரச்சனைகளையும் ,அதற்காக குரல் கொடுத்த தியாக உள்ளங்களின் வாழ்வியல் சம்பவங்களையும்,அந்த சூழலையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இன்னமும் முக்கியமானது .அத்தகைய ஒரு காலகட்டத்தினை மறு உருவாக்கம் செய்துள்ளதே இந்த பராசக்தி திரைப்படமாகும்.

புறநானூறு என்கிற படைக்கு தலைவனா இருக்கிறார் சிவகார்த்திகேயன்,1965 இல் நடக்கிற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு ரயிலை மறிச்சு ,மக்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு அந்த  ட்ரெயினை கொளுத்துறாங்க, இந்த சம்பவத்தில் அதே வண்டியில் வரும் போலீஸ் ஆபீஸரான ரவிமோகனுக்கும் ,சிவகார்த்திகேயனுக்கும் இடையில மோதல் ஏற்படுது,இந்த நிகழ்வுல ரவிமோகனோட  ஆள்காட்டி விரல் பாதிக்கப்பட, சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டுபிடிக்க முயற்சி பண்றாரு ,ஆனா சிவகார்த்திகேயன் அங்கிருந்து தப்பிக்கிறாரு , அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் இரயில் எரிப்பில் இறக்க, அதன் பின் வன்முறை, போராட்ட எதிர்ப்பு போன்றவற்றை வேண்டாம் என நினைக்கும் சிவகார்த்திகேயன் அனைத்தையும் கைவிடுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் சாதாரணமாக ரயில்வே துறையில் நிலக்கரியை அள்ளிப் போடற வேலையை செஞ்சுகிட்டு இருக்காரு ,அவருடைய தம்பி அதர்வா காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கும் சூழலில் மொழிக்காக நடக்கும் போராட்டத்தில்  களமிறங்கறாரு, தன்னுடைய தம்பியை தடுத்து நிறுத்த சிவகார்த்திகேயன் பல முயற்சிகள் பண்றாரு ,இந்த சூழ்நிலையில் ரயில்வே துறையில் டிடிஆர் பணிக்கு இன்டர்வியூவுக்கு வர சொல்லி சிவகார்த்திகேயனுக்கு , லெட்டர் வருது, சிவகார்த்திகேயன் சென்னைக்கு வராரு,, வந்த இடத்துல அவருக்கு ஏற்படுற அவமானங்கள் மற்றும் எதிர்பாராத வகையில நடக்கிற ஒரு சம்பவம் மீண்டும் இந்தி எதிர்ப்பிற்கு புறநானூறு படைத்தலைவனா அவரை  களம் இறக்குது . மதுரையில் இருக்கிற இந்தி பிரச்சார சபா தீக்கிரையாக, இந்த விஷயம் மீண்டும் வெடிக்கத் தொடங்குது ,இந்த சூழ்நிலையில தமிழர்களை வன்மத்தோடு பார்க்கிற போலீஸ் அதிகாரியான ரவி மோகன்,அதிகார பலத்தோடு கலவரத்தை அடக்கி , போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர நினைப்பதோடு மட்டுமில்லாமல ,தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய முகம் தெரியாத முகமான , சிவகார்த்திகேயனை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு, அவரையும் அவரோடு இருக்கிறவர்களையும் பழி தீர்க்க முடிவு பண்றாரு .மீண்டும் போராட்டகளத்தில் இறங்கும் சிவகார்த்திகேயன் வென்றாரா, ரவிமோகன் சிவகார்த்திகேயனை பிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.


செழியன் என்னும் கதாபாத்திரத்தில் இளம் போராட்ட வீரனாகவும், அன்பில் சிறந்த அண்ணனாகவும், நேசம் மிக்க காதலனாகவும், நட்பில் சிறந்த நண்பனாகவும்  பல பரிமாணங்களில் தன்னுடைய முத்தான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் .அவரின் 25 ஆவது படமான இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில்  முக்கியமான பங்களிப்பினை தரக்கூடிய படமாக அமையும் . பல படங்களில் காதல் நாயகனாகவும்,. சில படங்களில் ஆக்சன் நாயகனாகவும் நடித்து நம் ரசிகர்களின் மனதில் வலம் வந்து கொண்டிருந்த ரவிமோகனுக்கு இந்தப் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு அமைந்துள்ளது ,அவரும் அந்த வாய்ப்பினை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு, புதிய பரிமாணத்தில் தன்னுடைய திரை பகிர்வை இந்த படத்தில் பதிவு செய்துள்ளார் ,நாயகனின் தம்பியாக வரக்கூடிய அதர்வா முரளி அந்த கால இளைஞர்களின் உடல் மொழியினை தனது தோற்றத்தாலும்,நடிப்பாலும் நன்கு வெளிப்படுத்தி தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பெரும்பலத்தைச் சேர்த்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஸ்ரீலீலாவுக்கு இது முதல் தமிழ் படம் ,அந்தக் கால திரை நாயகியர்களின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இவரது தோற்றமும் ,மேலும் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலமும் இவர் ரசிகர்களின் தனி கவனத்தை பெற்றுள்ளார் .இவர்களுடன் முன்னாள் தமிழக முதல்வரான அறிஞர் அண்ணாவாக நடித்துள்ள சேத்தன்,பாட்டியாக நடித்துள்ள குலப்புள்ளி லீலா மற்றும் கௌரவ வேடத்தில் நடித்துள்ள பிரபல நடிகர்கள் அனைவருமே சிறப்பான பங்களிப்பை படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

 

காலத்தில் பின்னோக்கி பயணித்துள்ள கதைக்கு ஏற்ற காட்சி அமைப்புகளை, அந்த காலத்தில் இருந்தபடியே இப்பொழுது உருவாக்கி, படம் பார்க்கும் ரசிகர்களையும் கதை நிகழ்ந்த காலத்திற்கு பயணிக்க வைத்துள்ளார் கலை இயக்குனர் அண்ணாதுரை ,இவரது கலை படைப்புகளுக்கு உயிரோட்டம் கொடுத்து ,கதாபாத்திரங்களின் உணர்வுகளை திரையில் சிறப்பாக வலம் வரச் செய்யும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் நமக்கான காலம், சேனை கூட்டம் போன்ற பாடல்களின் மூலமும் ,காட்சிகளுக்கு ஏற்ற பின்புலத்தை கச்சிதமாக தந்துள்ள பின்னணி இசை மூலமும் ஜி.வி.பிரகாஷ் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்துள்ளார் .சுதாகொங்கரா,அர்ஜுன் நடேசன்,மதன் கார்க்கி,ஷான் கருப்பசாமி இவர்களது எழுத்தில் வசனங்கள் செம்மையாக உள்ளன.

காலத்தால் மறந்து போன,மறைந்து போன கதாபாத்திரங்களின் சுவடுகளை,அவர்களின் உணர்வுகளை, மொழி பற்றினை,அழகான கதையோடும் கருத்து நிறைந்த வசனங்களோடும் ,சிறப்பான திரைக்கதையுடன் இணைத்து, கதாபாத்திரங்களுக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய வகையில் நடிகர்களை தேர்வு செய்து ஒரு சிறப்பான படத்தினை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு ,வேற்றுமையில் ஒற்றுமை என்பதையும், இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம் என்பதையும் வலியுறுத்தும் வகையில் , மாணவர்கள் முன்னெடுத்து நிகழ்த்திய உணர்ச்சிகரமான ஒரு போராட்டகளத்தினையும் அதில் மாணவர்கள் வெற்றியடைந்ததையும், பதிவு செய்யும் பதிவாக இந்த படத்தினை உருவாக்கி, அதனை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வண்ணம் திரைமொழியில் பதிய வைத்துள்ளார்கள் ,இன்றும் அந்த சூழ்நிலை தொடர்வதற்கான காரணமும் ,அதனை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதையும் , தலைமுறைகள் தாண்டினாலும் ,தமிழ் மொழியின் சிறப்பும் ,அம் மொழிக்கான தியாகமும் என்றும் தன் இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதை மொழி மீது பற்று கொண்டுள்ள ஆர்வலர்கள் யாவரும் மறுக்கவே மாட்டர்கள், அதற்கு இது போன்ற படைப்புகள் வழிவகுக்கும்.

Spread the love