நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நாயகன் கவுண்டமணியை மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரச் செய்துள்ள படம்
கதையின் நாயகனான அரசியல்வாதி கவுண்டமணி, தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியதால் ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார் அவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். அந்த மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதரர்களையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் முத்தையா இருக்கிறார், ஆனால் அவரின் தங்கைகளோ தாங்கள் காதலிக்கும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த காதலர்களை, அண்ணனிடம் சம்மதம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக சகோதரர்களாக நடிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் முத்தையாவிற்கு சீட் கிடைக்கவில்லை, அதனால் கோபமடையும் அவர் சுயேட்சியாக போட்டியிடுகிறார் ,இறுதியில் அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றாரா ? அவரது விருப்பப்படியே தங்கைகளின் திருமணத்தை நடத்த முடிந்ததா இல்லையா ? என்பதை நகைச்சுவையாக திரைக்கதையாக்கி சொல்வதே ஒத்த ஒட்டு முத்தையாவின் மீதி கதையாகும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நாயகன் கவுண்டமணி நடித்திருக்கும், அதிலும் குறிப்பாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படம் அவரது ரசிகர்களையும் ,திரைப்பட ரசிகர்களையும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருந்தது, ஒரு காலத்தில் கதாநாயகர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வலம் வந்து ரசிகர்களை நகைச்சுவையில் மூழ்க வைத்த கவுண்டமணி அவர்கள், இந்தக் கால நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் போன்றவர்களுடன் இணைந்து, இப்பொழுதும் தன்னால் காமெடியில் கலக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.கவுண்டமணிக்கு பிறகு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார் அவரும் வழக்கமான தன்னுடைய பாணியில் நகைச்சுவை நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர முயற்சிக்கிறார் .மேலும் சிங்கமுத்து, முத்துக்காளை ,வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ்,ராஜேஸ்வரி, தாரணி, ரவி மரியா ,ஓ. ஏ. கே சுந்தர் ,கூல் சுரேஷ் ,சென்ராயன் என பல நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் குறைவில்லாமல் நடித்துள்ளார்கள்.
படத்தின் இயக்குனர் சாய் ராஜகோபால் நகைச்சுவையுடன் அரசியல் நையாண்டி கலந்து, இந்த படத்தை முழு நீள காமெடி படமாக கொடுத்திருக்கிறார், மூத்த நகைச்சுவை நடிகருடன் பணியாற்ற அவருக்கு கிடைத்த வாய்ப்பை இன்னுமும் அவர் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது .சித்தார்த் குழுவின் இசையில் பாடல்களும், பின்னணி செய்யும் கதை களத்திற்கு பொருத்தமான வகையில் அமைந்திருக்கிறது, அதேபோல படத்தின் காட்சிகளுக்கு S A காத்தவராயனின் ஒளிப்பதிவு, இயக்குனருக்கு தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளது.
கவுண்டமணி ரசிகர்களுக்கு மீண்டும் அவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் பார்த்து ரசிக்க கூடிய வாய்ப்பையும், மூத்த கலைஞரான அவருடன் இன்றைய காலத்து நகைச்சுவை நடிகர்களும் இணைந்து நடிக்க கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பையும் இந்த படம் கொடுத்துள்ளது.