Saturday, August 29

‘டாக்ஸிக்’- திரைப்பட விமர்சனம்

கோவாவின் அழகான பின்னணிக்குள், இரத்தம் தெறிக்கும் அதிகாரப் போராட்டத்தையும், உறவுகளுக்குள் புதைந்து கிடக்கும் வலியையும் வைத்து உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘டாக்சிக்’.

முரட்டுத்தனமும் துணிச்சலும் நிறைந்த ராயா (யாஷ்), தனது சகோதரி கங்காவுடன் (நயன்தாரா) இணைந்து எதிரிகளை அதகளம் செய்து வருகிறார்கள் . ராயா நகரத்தின் தலைவனாக வேண்டும் என்பது கங்காவின் கனவு. அந்தக் கனவுக்காக இருவரும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.இந்த சூழலில் கோவாவுக்கு சர்க்கஸ் நடத்த வரும் நாடியா (கியாரா அத்வானி), ராயாவின் வாழ்க்கைக்குள் வருகிறார். எதிர்பாராத விதமாக இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அந்தக் காதல், ராயாவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டு வரவில்லை… மிகப்பெரிய அழிவிற்கும் வழிவகுக்கிறது.சூழ்நிலைகளின் அழுத்தத்தில், நாடியாவே கங்காவை கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். தனது சகோதரியின் மரணத்திற்கு நாடியாதான் காரணம் என்பதை அறியும் ராயா, அவரையும் தங்களுக்குப் பிறந்த குழந்தையையும் தனது வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலக்கி வைக்கிறார்.காதலின் இழப்பு, தனிமை, மனவேதனை என அனைத்தையும் தாங்க முடியாமல் நாடியா தற்கொலை செய்து கொள்கிறார்.ஆண்டுகள் கடக்கின்றன.அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனாகிறான். தனது தாயின் மரணத்திற்கு தந்தையே காரணம் என்று நம்பும் அவன், ராயாவை பழிவாங்கப் புறப்படுகிறான்.ஒரு குடும்பத்தில் தொடங்கிய பகை… பல வருடங்களுக்குப் பிறகு தந்தை – மகன் மோதலாக மாறுகிறது.அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

தந்தை மற்றும் மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் யாஷ் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் தோற்றம், உடல்மொழி, நடை, பார்வை என தனித்தனி அடையாளங்களை உருவாக்கியிருப்பது படத்தின் முக்கிய பலம்.குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் யாஷின் உடல்மொழி கதாபாத்திரத்தின் முரட்டுத்தனத்தை அப்படியே திரையில் கடத்துகிறது.

நயன்தாரா, ராயாவின் சகோதரி கங்கா கதாபாத்திரத்தில் வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது அணுகுமுறை கவனம் ஈர்க்கிறது.மேலும் கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா, ஹூமா குரேஷி என படத்தில் இடம்பெறும் கதாநாயகிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தங்களுக்கான திரை இருப்பை குறைவின்றி பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தின் உலகத்தை  உருவாக்கிய விதம், செட் அமைப்புகள், ஆக்‌ஷன் காட்சிகளின் அளவு  என அனைத்தும்  சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இந்த பிரம்மாண்டத்தை தனது கேமரா கோணங்கள் மற்றும் ஒளியமைப்புகள் மூலம் சிறப்பாக பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் கேமரா நகரும் விதமும், பிரம்மாண்டமான ஃப்ரேம்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும் பிரம்மாண்டத்திற்கும் சரியாக பொருந்துகிறது.ஜே. ஜே. பெர்ரி, அன்பரிவ், கெச்சா காம்பக்டீ, அம்ரித் சிங்போன்ற அதிரடி இயக்குனர்களின் பங்களிப்பு பாராட்டக்கூடியது. படத் தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி தன்னுடைய பங்களிப்பில் திரைக்கதையின் வேகத்திற்கு இன்னமும் விறுவிறுப்பினை கூட்டி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது

கீது மோகன் தாஸ், ஒரு வழக்கமான கேங்ஸ்டர் – பழிவாங்கும் கதையை பிரம்மாண்டமான உலகத்திற்குள் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார்.காட்சிகளை உருவாக்கிய விதத்திலும், ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதத்திலும் அவரது முத்திரை தெரிகிறது. குறிப்பாக படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், சினிமாவின் வழக்கமான ஆக்‌ஷன் திரைப்படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பினும் , இவ்வளவு பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கிய இயக்குனர், அதற்கு இணையான வலுவான திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

யாஷின் மாஸ் அவதாரம், நயன்தாராவின் வித்தியாசமான கதாபாத்திரம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள காட்சியமைப்பு ஆகியவை படத்தின் ப்ளஸ்.ஆனால் அந்த பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு திரைக்கதை இன்னும் இணக்கமாக இருந்திருந்தால், ‘டாக்சிக்’ இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மொத்தத்தில்…கதையை விட அதை திரையில் எப்படி பிரம்மாண்டமாக காட்டுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கும் ‘டாக்சிக்’, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கான ஒரு வித்தியாசமான திரை அனுபவமாக அமைந்திருக்கிறது.”

Spread the love