ஒரு கொலை… ஒரு சாட்சி… ஒரு பழிவாங்கும் பயணம்!

அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா மற்றும் சரண்யா என்ற இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கை, ஒரு கொடூரமான சம்பவத்தால் முற்றிலும் திசைமாறுகிறது. அவர்களது நெருங்கிய தோழியான லட்சுமி, அதிகாரம் மற்றும் பணத்தின் பலத்தில் மிதக்கும் சில இளைஞர்களின் மனிதநேயமற்ற செயலுக்கு பலியாகிறார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒரே நபரான ரம்யாவும் அவர்களது தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.தோழியின் இழப்பும், சகோதரியின் சிதைந்த வாழ்க்கையும் சரண்யாவின் மனதில் ஆறாத காயமாக மாறுகிறது. குற்றவாளிகள் தங்கள் செல்வாக்கால் தப்பித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின்மை, அவளை சட்டத்தின் பாதையிலிருந்து விலகி தனக்கென ஒரு நீதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. அதன் பிறகு தொடங்கும் வேட்டை, வெறும் பழிவாங்கலாக இல்லாமல் குற்றவாளிகளின் உலகத்தை அதிரவைக்கும் போராட்டமாக மாறுகிறது. இந்த தொடர்ச்சியான சம்பவங்களின் பின்னணியை ஆராயும் காவல்துறை அதிகாரி ரகு, ஒவ்வொரு தடயத்தையும் பின்தொடர்ந்து உண்மையை நெருங்குகிறார். ஆனால் அவர் கண்டுபிடிக்கும் உண்மை, அவரது கடமையையும் காதலையும் நேருக்கு நேர் மோத வைக்கிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் “நிழல்” படத்தின் மீதிக்கதை .
இரட்டை வேடங்களில் ஜனனி வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு படத்தின் முதுகெலும்பாக அமைகிறது. பயத்தால் உடைந்துபோன ரம்யாவாகவும், கோபத்தை ஆயுதமாக மாற்றிக்கொள்ளும் சரண்யாவாகவும் இரு வேறுபட்ட மனநிலைகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது ஈடுபாடும், உணர்ச்சிகரமான தருணங்களில் வெளிப்படுத்தும் தீவிரமும் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கின்றன.

சரண்யாவின் காதலனும் காவல்துறை அதிகாரியுமான ரகுவாக விஷாகன் அளவான நடிப்பை வழங்கியுள்ளார். காதலிக்கும் பெண்ணை காப்பாற்ற வேண்டுமா?, சட்டத்தை காப்பாற்ற வேண்டுமா? என்ற உள்மன போராட்டத்தை திறம்பட வெளிப்படுத்துகிறார்.
எதிர்மறை வேடத்தில் நடித்துள்ள ஹரி விஜய், கதைக்கு தேவையான வலுவான எதிரியாக திகழ்கிறார். மேலும், கெளஷிக், அபிஷேக் சங்கர், ஜனனியின் தந்தையாக நடித்துள்ள ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையிலான பங்களிப்பை நன்கு வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மோகன்குமார், இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். காட்சிகளின் ஒளியமைப்பும், கேமரா கோணங்களும் படத்தின் த்ரில் உணர்வை மேலும் உயர்த்துகின்றன.
எம். அபுபக்கரின் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், பின்னணி இசை கதையின் பதட்டத்தையும் உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தினேஷின் படத்தொகுப்பு, திரைக்கதையின் வேகத்தை சரியான அளவில் தக்கவைத்து, சஸ்பென்ஸ் அம்சங்களை கடைசி வரை உயிர்ப்புடன் கொண்டு செல்கிறது.
கதைக்களத்தில் பெரிய புதுமை இல்லையென்றாலும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பின் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஏ.கே.குமார். அவரின் இயக்கத்தில் படத்தின் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு, சமூக கருத்தும் சமநிலையுடன் கையாளபட்டிருப்பது படத்தின் பிளஸ் ஆக அமைந்துள்ளது.
மொத்தத்தில் இந்த “நிழல்” சஸ்பென்ஸ், ஆக்ஷன் மற்றும் சமூக கருத்துக்களை ஒன்றாக இணைத்து சொல்லும் ஒரு விறுவிறுப்பான விஷுவல் திரில்லர்.
